+2 மொழிப்பாட வினாத்தாள் குறைப்பு மாணவர்களின் மனஉளைச்சலைக் குறைக்குமா?



அலசல்

பள்ளியிறுதித் தேர்வுகளில் இனி மொழிப் பாடங்களில் இரண்டு தாள்கள் கிடையாது, ஒரே தாள்தான் என தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதை வரவேற்கிற சிலர் இதனால் மாணவர்களின் சுமை குறையும் என்கிறார்கள்.

பாடங்களின் எண்ணிக்கையோ, பக்கங்களின் எண்ணிக்கையோ குறையாமல் வினாத்தாள்கள் எண்ணிக்கையை மட்டும் இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைப்பது எந்த வகையில் மாணவர்களின் சுமையைக் குறைக்கும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.

இந்த மொழிப்பாட வினாத்தாள் மாற்றம் குறித்து கல்வியாளர்களிடமோ, தமிழாசிரியர்களிடமோ, ஆங்கில ஆசிரியர்களிடமோ, பெற்றோர்களிடமோ, மாணவர்களிடமோ கருத்து கேட்கப்பட்டதா? அதற்கான பொதுவான, வெளிப்படையான விசாரணைகள் ஏதாவது நடத்தப்பட்டதா? அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக, தமிழாசிரியர்கள் அமைப்பு உள்ளிட்ட மொழியாசிரியர்களின் நிலைப்பாடுதான் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் கல்வியாளர்கள் சொல்லும் கருத்துகளைப் பார்ப்போம்.

பொழிலன், தமிழ்நாட்டுக் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாட்டின் கல்வித் திட்டம் தமிழ்நாட்டு அரசுக்கு மட்டுமே உரிமை உடையதாக இல்லை. இந்திய அரசுக்குப் பாதி, இந்தியாவுக்குள் சூறையாட வந்திருக்கிற பன்னாட்டு வல்லரசுகளுக்கு மீதி என்கிறபடி தமிழ்நாட்டுக் கல்வித் துறையும் அதிகாரப் பங்கீட்டால் அவதிப்படுகிறது.

தமிழகக் கலை, பண்பாடு, இலக்கியம் என இந்த மண்ணின் மனம் தெரியாமலேயே வளர்கிற தமிழக மாணவர்கள்தாம் நாளைய தமிழக அதிகாரிகள், ஆட்சியாளர்கள். அப்படியான அவர்கள் எப்படியான அதிகாரத்தையும், ஆட்சியையும் செய்வார்கள் என்று எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
உலகப் பன்னாட்டு நிறுவனக் கொள்ளையர்களின் முழு ஆளுமைக்கும், சுரண்டலுக்கும் வேட்டைக்காடாக அல்லவா தமிழகம் மாறிப்போகும்.

தமிழ் தெரியாத, தமிழகம் தெரியாத எதிர்காலத் தலைமுறை பிற அதிகாரங்களுக்கு முழு அடிமைகளாகிறபடி மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாக மாற்றுவதற்குத்தானே, இதுபோல் கல்வி உரிமைகளை முழுமையாக அவர்கள் பறித்துக் கொள்கின்றனர். அந்த நடைமுறையில்தான் இன்றைக்குத் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்குரிய இரண்டு தேர்வுத் தாள்களாக உள்ள தேர்வுமுறை குறைக்கப்பட்டு ஒரே தேர்வுத்தாளாக மாற்றப்படுகிறது. இப்படி ஒரே தாளாக மாற்றுவது மாணவர்களுக்குச் சுமையை அதிகப்படுத்தும் என்கிறபோதும், அதைவிட, மாணவர்களின் மொழிப்புல அறிவை அந்த நடைமுறை பெரிய அளவில் கெடுத்துவிடும் என்பதே உண்மை.

இரண்டு தாள்களாக இருந்த நிலையில் மொழியில் உள்ள செய்யுள், உரைநடை, இலக்கணப் பகுதிகள்  எல்லாம் விரிவாக மாணவர்களால் ஓரளவு அறிய வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த நிலை மாற்றப்பட்டு ஒரே தேர்வுத் தாளாக்கப்பட்டால், அந்த அளவு வேறுபட்ட பயிற்சி முறைகளை மாணவர்களால் பெற்றுவிட முடியாது. அதன் மூலம் தன் தாய்மொழியே என்றாலும் பத்தாம் வகுப்பு வரை படிக்கிற மாணவன் ஒருவனால் ஒரு பத்து வரிகூடசொந்தமாக எழுதுகிற திறனற்றுப் போகிற நடைமுறையே உருவாக்கப்படும்.

ஆக, அரசின் இத்தகைய போக்கு, தாய்மொழிப் பாடத்தை மட்டுமின்றி, தாய்மொழி அறிவை, உணர்வைச் சிதைத்து அதிகார அரசுகளுக்கு அடிமைகளாக மாணவர்களை மாற்றுகிற முயற்சியாகவே தெரிகிறது.முனைவர் முருகையன், கல்வியாளர்ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்னும் தேர்வுமுறையினை ரத்து செய்து ஒரே தாளாக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ் இலக்கணம் மட்டும்தான் எழுத்துமுறை, பிறப்பு, உருவம், மாத்திரை, தொல், யாப்பு என்று மட்டும் கூறாமல் வாழ்வு நெறிகளையும், அகம் புறம் என பொருள் இலக்கணமாய் வாழ்வியல் நெறிகளையும் கூறும். இரண்டாம் தாளில்தான் கட்டுரை வடித்தல், கவிதை புனைதல், கற்பனையாற்றலை வளர்த்தல், வாக்கிய அமைப்புகள், பண்டைய இடைக்கால அண்மைக்கால இலக்கியங்களைக் கற்றுத்தந்து அதிலிருந்து கேட்கப்படும் வினாக்கள் இரண்டாம் தாளிலேயே இடம்பெற்றன.

இவ்வாணைப் பிறப்பிப்பதற்கான காரணங்களாக 5 காரணங்கள் அரசாணையில் கூறப்பட்டுள்ளன. தமிழ்ப் பாடத்திற்கு பருவ இடைத்தேர்வு, பருவத்தேர்வு, ஆயத்தத் தேர்வு என 10 நாட்கள் செலவிடப்படுவதாகவும், தாள்களைக் குறைப்பதன் மூலம் கற்றல் கற்பித்தல் நாட்கள் அதிகமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாணவன் கற்பிப்பதை கற்று அறிந்திருக்கிறானா என்று சோதித்தறியவும், ஆசிரியர் தன் கற்பிக்கும் வழிமுறைகளை சுயசோதனை செய்துகொள்வதற்காகவும்தான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வும்கூட கற்றல், கற்பித்தலின் ஓர் அங்கம்தான் என்பதுகூட புரியாமல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாணவர் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர் எனவும் 8 தேர்வுகளை 6 தேர்வுகளாகக் குறைக்கும்போது மாணவர் களின் மனஅழுத்தம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் தமிழ்த் தேர்வின் காரணமாகவோ, தமிழ் இரண்டு தாள்கள் கொண்டிருப்பது சுமையாக உள்ளது எனவோ மனஅழுத்தத்திற்கு உட்பட்டு எந்த ஒரு மாணவரும் தன் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளவில்லை.

நீட் என்ற ஒரு தேர்வுதான் பல மாணவர்களின் உயிரைப் பறித்துக்கொண்டிருக்கிறது. அந்த அழுத்தத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொடுக்கும் தமிழ் வினாத்தாளைக் குறைக்கக்கூடாது. பாடத்தில் எவ்விதப் பகுதியையும் நீக்காமல் வினாக்களின் எண்ணிக்கையை சுருக்கு வதன் மூலமாகத்தான் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் என்பது உறுதி. இப்பொருள் குறித்து அண்டை மாநிலங்
களோடு ஒப்பிடுவது பொருத்தமற்றது.

செம்மொழித் தகுதி பெற்ற தமிழ் புறக்கணிக்கப்படாமல் தாய்மொழியைக் கற்பதன் மூலம் ஏனைய பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம் என்பதை உணர்ந்து தமிழ்த்தாள் ஒருங்கிணைப்பு என்கிற நிலையினைத் தமிழக அரசு தவிர்த்தல் வேண்டும். மேலும், பல்வேறு மாநில, மத்திய போட்டித் தேர்வு
களில் தமிழ் இடம்பெறுவதால் இத்தாள்கள் குறைப்பின் மூலம் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வலிமையும் மாணவர்
களுக்குக் குறையக்கூடும்.

தேர்வினை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் முழு ஆளுமை வளர்ச்சிக்கும் வாழ்வியல் திறன்கள் பெறுவதற்கும் பரந்த மொழி அறிவு தேவை என்ற அடிப்படையில் இரண்டு தாள்களை ஒரு தாளாகக் குறைத்து அதற்கு ஒருங்கிணைப்பு என்கிற சூழ்ச்சியான பெயரைப் பயன்படுத்தக்கூடாது.
அருமைநாதன், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கல்வியில் மாற்றம் என்பது எப்போதுமே வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால், இரண்டு தாளை ஒரே தாளாகக் கொண்டு வந்திருப்பதால் மாணவர்களின் சுமை குறையும் என்பது எந்த வகையில் உண்மை என்பதுதான் புரியவில்லை. இந்தப் புதிய முறையால் மாணவர்கள் திணறிவிடக்கூடாது. அதனால், காலாண்டு, அரையாண்டு, மாதிரி வினாத்தாள் தயாரிப்பு ஆகியவற்றின்போதே மாணவர்களை இந்தப் புதிய முறைக்கு தயார்படுத்த வேண்டும். திடீரென பொதுத் தேர்வில் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினால் தேர்வு எழுத கஷ்டமாக இருக்கும்.

தமிழ்ப் பற்றாளர்கள், தமிழ் அறிஞர்களெல்லாம் மொழிப்பாடத்தை சுருக்குவதனால் மொழியை முழுமையாகப் படிக்க முடியாமல் போய்விடும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். பெற்றோர்களைப் பொறுத்த வரையில், இன்றைக்கு எல்லாமே நீட் என ஆகிவிட்டது; வருங்காலத்தில் அதுதான் என்ற மாயையை ஏற்படுத்திவிட்டார்கள்; நம்முடைய அரசும் அதைத்தான் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

குறிப்பாக நீட்டுக்கு மாணவர்களைத் தயார்செய்யத்தான் நாங்கள் இந்த ஏற்பாட்டை செய்கிறோம் என்கிறது அரசு. அதனால், பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை அதை நோக்கியே கொண்டு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எந்த வகையில் பார்த்தாலும், மொழிப்பாட இரண்டு தாள்களை ஒரே தாளாகக் குறைத்தது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தையே கொடுக்கும். ஆகவே, அரசு இதனை மறுபரிசீலனை செய்வது நல்லது.   

மொழிப்பாட மாற்றத்தில் கல்வியாளர்கள் வெவ்வேறு விதமாகக் கருத்துகளைச் சொன்னாலும் கருத்தின் கரு ஒரே தொனியில்தான் இருக்கிறது. மொழிப்பாடத் தாள்களின் குறைப்பால் மாணவர்களின் மன அழுத்தம் குறைந்துவிடாது என்பதே புலப்படுகிறது.  

- தோ.திருத்துவராஜ்