பழங்குடி மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் திரு ஒளி!சேவை

கோயம்புத்தூரை சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் அங்கமான சிறுவாணி மலைப்பகுதியும், சிறுவாணி ஆறும் தமிழ்நாட்டின் இயற்கை பொக்கிஷங்கள். மிகவும் தூய்மையான நீரை வழங்கும் நீர்நிலைகளில் உலக அளவில் இரண்டாம் இடத்திலுள்ளதாக சொல்லப்படுகிறது சிறுவாணி ஆற்றுநீர். இந்த இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேச காடுகளை வாழ்விடமாகக்கொண்டு பழங்குடி மக்களான இருளர் மற்றும் முடுகர் இனமக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

இந்தப் பழங்குடி மக்கள் போன தலைமுறை வரையிலும் வெளியுலக தொடர்பே இல்லாமல் காடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஆனால், இன்றைய நிலையே வேறு. அந்தப் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியம், பல்வேறு சமூக வாழ்க்கை முறை, சுகாதாரம், இயற்கையின் மகத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல தகவல்களையும் தனது திருஒளி அறக்கட்டளை மூலம் தொடர்ந்து ஒன்பது வருடங்களாக போதித்து வருகிறார் எஸ்.பிரபு. பழங்குடி மக்கள் நலனில் தனக்கு உண்டான ஈடுப்பாட்டிற்கான காரணத்தையும் அனுபவத்தையும் நம்மிடம் பிரபு பகிர்ந்துகொண்டவற்றை இனி பார்ப்போம்…

‘‘சென்னை ஏர்போர்ட்டில் கேண்டீன் பிரிவில் வேலை செய்து வந்தேன். நகரத்தில் வாழ்ந்தாலும் இயற்கையோடு பிணைந்த கிராமத்து வாழ்க்கைச் சூழலில் வாழவே எனக்கு விருப்பம். கிராமத்தின் எளிமையும், தூய்மையான காற்றும், வாய்வழிக் கதைகளிலும், மூதாதையர் தெய்வ வழிபாடுகளின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு.

அந்தத் தேடலின் வழியே 2004ம் ஆண்டு சென்னையில் வேலையை விட்டுவிட்டு இயற்கை எழில் கொஞ்சும் நல்லூர்வயல் கிராமத்தில் சிறுநிலம் ஒன்றை வாங்கி அங்கு குடியேறினேன். அந்த மக்கள் வாழும் சூழலை அவர்களின் பிரச்னைகளை அருகில் இருந்து உணர்ந்தேன்.

மலைப்பிரதேசங்களில் வாழும் அந்த மக்களில் சிலர் பாம்புக் கடிகளாலும் வேறு சில மருத்துவ காரணங்களாலும் உயிரிழந்தனர். அதைக் காணும்போது என் மனதுக்குள் ஒருவிதமான கவலை ஏற்பட்டது. சென்னையில் வேலை செய்து சேர்த்த பணத்தில் முதன்முதலில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை என்னால் இயன்ற அளவு செய்தேன். முடியாதபோது என் நண்பர்கள் வட்டத்தை அணுகினேன்.

அப்படிப்பட்ட தேடலில் உதித்தது தான் ‘திரு ஒளி’ எனும் தன்னார்வ அமைப்பு என கூறும் பிரபு தனது தன்னார்வ நிறுவனம் வளர்ந்த விதத்தை விளக்கலானார். ‘‘சிறுவாணி காடுகளில் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளுக்காக  அருகிலுள்ள சிறுசிறு பகுதிகளில் குடியேறிய அம்மக்கள் வாழும் இடம் பதிகள் எனப்படுகிறது.

மலைகளிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பதி ஒன்றிற்கு சுமார் 30-50 குடும்பங்கள் என மொத்தம் 10 பதிகளில் மக்கள் மலையை சுற்றியே குடியிருக்கின்றனர். ஒவ்வொரு பதிக்கும் வெளி நகரங்களுக்கும் எந்தவித போக்குவரத்தும் தொடர்பும் இருக்காது.
இப்படியான வாழ்க்கைச் சூழலில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவைகளோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த மக்கள் சந்திக்கின்ற பிரச்னைகள், கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தயாரானோம்.

பழங்குடி மக்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமையை மீட்டுத் தருவதை நோக்கமாக கொண்டு 2010ம் ஆண்டு அரசு விதிகளின்படி அதிகாரப்பூர்வ தன்னார்வ நிறுவனமாக திரு ஒளி பதிவு செய்யப்பட்டது. உடை, உணவு, குழந்தைகளின் கல்விக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பதிகளில் உள்ள குடும்பத்தினருக்கான தன்னால் இயன்ற மருத்துவ செலவுகளை செய்தல் எனபன போன்ற பல்வேறு சேவைகளை செய்துவருகிறோம்.

சிறுவாணி மலை அடிவாரமாக விளங்கும் நல்லூர் வயல் எனும் பகுதியானது கோயம்புத்தூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ளது. இவ்விடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பு பழங்குடி மக்களின் அறியாமையை நீக்கி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை மீட்டுத் தருவதை லட்சியமாக கொண்டு செயல்படுகிறோம்.’’ என்று பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் பிரபு.

‘‘கல்வி மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தை உணர்த்துவதுதான் எங்களுக்கு ஆரம்பத்தில் மிகவும் சவாலான காரியமாக இருந்தது. குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியாததால் அவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை.

அவர்களின் பெற்றோர்களிடம் பேசி சம்மதம் வாங்கி அவர்களைப் பள்ளிக்கு அனுப்பினோம். அப்படி வேண்டா வெறுப்பாக சென்ற பிள்ளைகளும் படிப்பில் கவனம் இல்லாதிருந்தனர். இதற்கு பல சமூகவியல் காரணங்கள் உண்டு. பள்ளி ஆசிரியர்கள் முதற்கொண்டு சக மாணவர்கள் வரை இந்தக் குழந்தைகளிடம் பேதம் காட்டி வெறுக்கிறார்கள்.

ஒட்டுமொத்த சமூகமுமே இந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை வெறுத்ததன் விளைவாக பல குழந்தைகள் பள்ளியில் படிக்க வருவதில் ஈடுபாடில்லாமல் இருக்கின்றனர். சிலர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி குழந்தைத் தொழிலாளர்களாகிவிடுகின்றனர்.

படிப்பில் ஆர்வம் ஏற்பட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கிறோம். பாடப்புத்தகங்கள், சீருடைகள், ஸ்டேஷனரி பொருட்களை வழங்குகிறோம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் அவர்களுக்கு டியூஷனுக்கு ஏற்பாடு செய்து பாடம் கற்றுக்கொடுக்கிறோம். திரு ஒளியின் இத்திட்டத்தால் இதுவரை சுமார் 100 குழந்தைகள் நேரடியாக பயன்பெற்றுள்ளனர்’’ என மகிழ்ச்சி பொங்க கூறும் பிரபு தனது லட்சியத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘அதிகாரம் மற்றும் பல்வேறு சமூக காரணங்களாலும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட அந்த மக்கள் இந்த உலகத்திடமிருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர். பழங்குடி மக்களின் வளர்ச்சிக்காக அரசு அளிக்கும் அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்குத் தெரியாது. இதுதான் இங்கு பிரச்னையே.

தங்களுக்கான அடிப்படை உரிமைகள் என்னென்ன? அடுத்த தலைமுறைக்கு என்ன வேண்டும்? அதை எப்படி அணுகுவது? எப்படி பெறுவது? என்ற அடிப்படையே அவர்களுக்குத் தெரியவில்லை. இவர்களின் அறியாமையை ஒழித்து அடுத்த தலைமுறையாவது கல்வி யறிவின் காரணத்தால் மேன்மையடைய வேண்டும். மொத்தத்தில் பழங்குடி சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியே எங்கள் திரு ஒளி அமைப்பின் எப்போதைக்குமான லட்சியம்’’ என தீர்க்கமாக முடித்தார் பிரபு.

- துருவா