தேசிய அறிவியல் போட்டிக்கு தயாராகும் தமிழக இளம் விஞ்ஞானிகள்!பயிற்சி

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தியது. இந்நிகழ்ச்சி குறித்து அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் (பொறுப்பு) சவுந்தரராஜ பெருமாள் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை...  

‘‘இந்தத் திட்டத்திற்கு inspire - Innovation of Science Pursuit for Inspire Research என்று பெயர். அதாவது, புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது. மத்திய அரசினுடைய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் இது நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் ஒரு தமிழர். மத்திய அறிவியல் தொழில்நுட்ப செயலராக இருந்த டி.ராமசாமி என்ற வில்லிபுத்தூரைச் சேர்ந்தவர்தான் இந்தத் திட்டத்தை 2009-ல் கொண்டுவந்தார்.

இதன் மூலமாக இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6வது முதல் 10வது வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களில் அந்த தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கிற ஒரு மாணவருக்கு ஐயாயிரம் ரூபாயும் வழங்கப்படும். அவர்கள் அந்த ஐயாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு அறிவியலில் ஏதேனும் ஒரு செயல்திட்டத்தை (Project) உருவாக்கி கண்காட்சி பொருளாக அல்லது செயல்படும் பொருளாக வடிவமைத்து காட்ட வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தினுடைய முதன்மைக் கல்வி அலுவலர் அந்த மாவட்டத்தினுடைய மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒன்றுகூடி இந்தக் கண்காட்சியை நடத்துவார்கள்.

அந்தக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், பிறகு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தால் நடத்தப்படுகிற மாநில அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்ள வேண்டும். அந்தக் கண்காட்சியில் எத்தனை பேர் வெற்றிபெறுகிறார்களோ அவர்கள் புதுடெல்லியில் நடைபெறுகிற தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்குகொள்ளலாம்.

தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களை சகுரா புரோக்ராம் ஆஃப் ஜப்பான், அதாவது ஜப்பானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பை வைத்துக்கொண்டு பரிமாற்றத் திட்டம் என்ற முறையில் இங்கிருந்து மாணவர்களை அங்கு அழைத்துச் சென்றும், அங்கிருந்து மாணவர்களை இங்கும் வரவழைத்து அவர்களுக்கு ஒரு வார காலம் பயிற்சி நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

அங்கிருந்து வரும் மாணவர்களுக்கு டெல்லியில் இப்பயிற்சி வழங்கப்படும். ஜப்பானில் நடக்கும்  நிகழ்ச்சியில், தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள் பங்குபெற வாய்ப்பளிக்கப்படுகிறது. இது இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து பள்ளிகளிலும் நடக்கிறது.தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலமாக ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியாக இருந்தால் 3 பேரும், மேல்நிலைப் பள்ளியாக இருந்தால் அல்லது உயர்நிலைப் பள்ளியாக இருந்தால் 5 பேரும் கலந்துகொள்ளலாம். அப்படி கலந்துகொள்வதற்கான வாய்ப்பை அவர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

அதை செயல்படுத்தி அந்தப் பதிவை சரிபார்த்து பிறகு டெல்லிக்கு அனுப்புவார்கள். இதற்கான தொகையை ஆரம்பத்தில் காசோலையாக வழங்கப்பட்டது. தற்போது வங்கி பணப்பரிமாற்றம் மூலம் வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டு வரை கொடுக்கப்பட்டுவந்த ஐயாயிரம் ரூபாய் இப்போது பத்தாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த முறையில் இந்த ஆண்டிற்கான மாநில அளவிலான கண்காட்சி காஞ்சிபுரம் மாவட்டம் கழிப்பட்டூரில் உள்ள ஆனந்த் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த ஜூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் 232 மாணவர்கள் கலந்துகொண்டதில் 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் பின்வருமாறு…

சென்னை கோடம்பாக்கம், பிசிகேஜி அரசு மேல்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் ஹேமபிரகாஷ். தர்மபுரி மாவட்டம், கும்பரஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவி பூமிகா.

தர்மபுரி மாவட்டம், கும்பரஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி ஜீவா. காஞ்சிபுரம் மாவட்டம், பினயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி தீபிகா. கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் அரவிந்த் கிருஷ்ணா.

கன்னியாகுமரி மாவட்டம், கொடுப்பைகுழி அரசு மேல்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தி. கன்னியாகுமரி மாவட்டம், கொடுப்பைகுழி அரசு மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி அரிஷ்மா.

நாகப்பட்டினம் மாவட்டம், அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவர் ஹரிஹரன்.நாகப்பட்டினம் மாவட்டம், நெல்லுக்கடை முனிசிபல் நடுநிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவர் ராஜ் ரத்தினம். சேலம் மாவட்டம், விருதசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவர் வசந்தகுமார்.

 திருப்பட்டூர் தாலுகா, கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளி 8ஆம் வகுப்பு மாணவர் சரண்ராஜ்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு      மாணவர் சூரியா. திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்      பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி மகேஸ்வரி. விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் தீபக் ராஜ்.

விழுப்புரம் மாவட்டம், பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்      பள்ளி 7ஆம் வகுப்பு மாணவர் விக்னேஷ். விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அமலா உயர்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் பால்பாண்டி. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி பெனிஷா.  இந்த மாணவர்கள் அனைவரும் புதுடெல்லியில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான கண்காட்சியில் பங்கெடுப்பார்கள்...’’ என்று முழு விவரங்களையும் தெரிவித்தார்.

- தோ.திருத்துவராஜ்