இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தின் சாதனைச் சிறுவன்!



சாதனை

சர்வதேச செஸ் போட்டியான கிரெடின் ஓபன் 2018 தொடரானது சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்றது. சர்வதேச போட்டியாளர்கள் பங்குபெற்ற இப்போட்டியில் இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கு முன்பாகவே இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் உலக சாதனையைப் படைத்துள்ளார் சென்னையில் வசிக்கும் பிரக்னாநந்தா. 12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதன் மூலம் உலகில் மிக இளம் வயதில் செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபராகியுள்ளார்.

பதின் பருவத்தை எட்டுவதற்கு முன்னதாக கிராண்ட் மாஸ்டர் ஆனது உலகிலேயே இருவர்தான். ஒருவர் பிரக்னாநந்தா, மற்றொருவர் உக்ரைனைச் சேர்ந்த செர்கே கர்ஜாகின் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தையும் இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை வைத்திருந்த பரிமார்ஜன் நெகியின் சாதனையையையும் பிரக்னாநந்தா தகர்த்துள்ளார்.

சென்னையின் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரமேஷ்பாபு - நாகலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்த பிரக்னாநந்தா மற்றும் வைஷாலியும் செஸ் போட்டியில் சிறுவயதில் இருந்தே அதீத ஆர்வம் கொண்டவர்களாக விளங்கியுள்ளனர். போலியோவால் பாதிக்கப்பட்ட பிரக்னாநந்தாவின் அப்பா  ரமேஷ்பாபு தன் மகனின் சாதனை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டதை இனி் பார்ப்போம்.

‘‘என் குழந்தைகள் செஸ் விளையாட ஆரம்பிக்கும் வரையில் செஸ் விளையாட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. முதலில் எனது மகள் வைஷாலியைதான் செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன்.

அவள் நன்றாக விளையாடினாள். ஆனால், நான்கு வயது இருக்கும்போதே அக்காவுடன் செஸ் போர்டில் நிறைய நேரத்தை செலவிட்டார் பிரக்னாநந்தா. தன் வயது கொண்ட சிறுவர்களுடன் நேரத்தை செலவிடாமல் 64 கட்டங்களின் மேல் என் மகன் கொண்டிருந்த காதல் தான் அவரை இந்த சாதனையை செய்யவைத்தது.

செஸ் விளையாட்டில் இருவரும் உள்ளூரில் நன்றாக விளையாடியதால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அங்கேயும் வெற்றியை குவித்து இந்திய அரசின் உதவி மற்றும் செஸ் அகாடமியின் ஏற்பாடுகளில் ஆசிய அளவிலான செஸ் டோர்னமென்ட் விளையாட்டில் பங்கேற்றனர்’’ எனக் கூறும் ரமேஷ்பாபு தன் வீட்டில் சுற்றிக் காட்டினார். சென்னை புறநகரில் அமைந்துள்ள நான்கு அறைகள் கொண்ட அந்த வீட்டில் அதிகம் இருக்கும் பொருட்கள் கோப்பைகளே. பெரும்பாலானவை சர்வதேச போட்டிகளில் அக்காவும் தம்பியும் வென்றவை.

தொடர்ந்து எட்டு வயதுக்குட்பட்டோர் மற்றும் பத்து வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2013 மற்றும் 2015 வருடங்களில் பிரக்னாநந்தா சாம்பியன் டைட்டில் வென்றார்.

ஐந்து வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியவர் கடந்த 2016-ம் ஆண்டு உலகின் யங் இன்டர்நேஷனல் மாஸ்டர் (ஐ.எம்) எனும் சிறப்பைப் பெற்றார். செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது முனைவர் பட்டம் பெறுவது போன்றது’’ என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் ரமேஷ் பாபு.

- வெங்கட்