அரசுப் பணி படித்தவர்களுக்கா... பணம் படைத்தவர்களுக்கா?



சர்ச்சை

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

மாநில அரசுப் பணி பெற வேண்டுமா - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணி பெற வேண்டுமா - மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும். தேர்வுகளில் வெற்றி பெறுவதோடு மட்டுமில்லாமல் சில உயர் பதவிகளுக்குச் சேர நேர்முகத் தேர்வும் உண்டு. அரசுப் பணி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் லட்சோப லட்சம் படித்த இளைஞர்கள் இப்போட்டித் தேர்வுகளைத் தேர்வுக் கட்டணம் செலுத்தி எழுதுகின்றனர்.

அரசுப் பணி என்பதால் ஒரு பணிக்காக 50,000 பேர் போட்டி போடக்கூடிய சூழ்நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஏழை, கிராமப்புற மாணவர்கள் தவம் இயற்றுதல் போல உறக்கமின்றி பயின்று இத்தேர்வை எழுதுகின்றனர். ஆனால், நடப்பது வேறு என்ற ஓர் அதிர்ச்சி தரும் தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதுகுறித்து முனைவர் முருகையன் பக்கிரிசாமி கூறும் அதிர்ச்சித் தகவல்களை இனி பார்ப்போம்…

‘‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர், வருவாய்க் கோட்ட அலுவலர் போன்ற உயர் பதவிகளுக்கான தொகுதி I (குரூப் 1) முதல்நிலைத் தேர்வை 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. 2016 ஜூலை 29, 30, 31-ல் முதன்மைத் தேர்வையும் நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் ஏறத்தாழ பத்து மாதங்கள் கழித்து 2017 மே மாதம் வெளியிடப்பட்டது.
அவ்வாறு வெளியிட்டபோது அப்பல்லோ பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றோரில் 80%க்கு மேற்பட்டோர் இப்பணி
களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தேர்வில் எழுதப்பட்ட விடைத்தாள் நகலொன்றை ஓர் ஊடகம் வெளியிட்டது. மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா தன்னுடைய விடைத்தாள்
நகலைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டும் தேர்வாணையம் தர மறுப்பதாகக் கூறினார். மேலும், தேர்வு முடிவில் தனக்குச் சந்தேகம் இருப்பதாகவும், ஊடகத்தையும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரையும், தேர்வாணையத்தையும் எதிர்மனுதாரராக்கி வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணை மூலம் ராம் குமார் என்ற மாணவன் தனது விடைத்தாளை மாற்றி, மதிப்பெண் பெற ரூபாய் 9 லட்சம் பணமும், 10 சவரன் நகையும் கொடுத்ததாகக் கூறினார். சந்தேகங்கள் வலுத்தன. சமூக ஆர்வலர்களும், கட்சித் தலைவர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதோடு எதிர்ப்புக்குரலையும் எழுப்பினர்.

தேர்வாணையத் தலைவர் அருண்மொழி விடுப்பில் சென்றபிறகு அவசரம் அவசரமாக இம்முடிவுகளை வெளியிட்டது ஏன்? முடிவுகளை வெளியிட இவ்வளவு காலதாமதம் செய்ததன் உள்நோக்கம் என்ன? அப்பல்லோ பயிற்சி மையத்தில் பயின்ற இத்தனை பேர் தேர்ச்சி பெற்றதில் உள்ள மர்மம் என்ன? மனிதநேய மையத்துக்கும், அப்பல்லோ நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பின் பின்னணி என்ன? வினாக்கள் கசியத் துணையாக இருந்த, வினாத்தாளைத் தயாரித்த மாநிலக் கல்லூரியின் முதல்வர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விரைவில் ஓய்வுபெறவிருக்கின்ற இவர் மீது காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா? நேர்முகத் தேர்வுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா? பணம் கொடுத்தவர்களுக்குத் தனித் தேர்வு மையம் அமைக்கப்பட்டதா? இவர்கள் மட்டும் நீலநிறச் சட்டை அணிந்து வரவும், இங்க் பேனாவால் எழுதவும் அறிவுறுத்தப்பட்டார்களா? விளக்கமுறை விடைகள் எழுதப்பட்ட பக்கங்கள் தேர்வுக்குப் பிறகு மாற்றப்பட்டனவா? எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்வாணையக் குழு உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் அவர்களுள் 5 பேர் ஏன் மீண்டும் நியமிக்கப்பட்டார்கள்? எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன” என்கிறார் முருகையன்.

கடுமையாகப் படித்து தேர்வு எழுதியோர் மனநிலையையும் குரூப் 1 தேர்வின் குளறுபடி வழக்கின் ஒவ்வொரு நிலையையும் விவரிக்கலானார் முருகையன். ‘‘அரசுப் பணிக்காகத் தேர்வாணையத் தேர்வு எழுதியோரின் நம்பிக்கை தகர்ந்துவிட்ட சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இந்தக் குளறு
படியினால் அரசுப் பணி கிடைக்கும் என்ற கனவு தகர்ந்துபோன நிலையில் மன உளைச்சலும் ஏற்படாமலிருக்காது. இந்தப் பிரச்னையின் முக்கிய புள்ளியான அப்பல்லோ நிறுவன இயக்குநர் முன்ஜாமீன் பெற்றுள்ளது ஏன் என்ற சந்தேகமும் தோன்றுகிறது. இந்நிறுவனத்திலிருந்து என்னென்ன ஆவணங்கள் காவல் துறையால் எடுத்துச் செல்லப்பட்டன என்ற விவரமும் மறைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

2017 ஜூலை 10 அன்று ஊடகம் 2016-ல் நடைபெற்ற தேர்வாணைய அசல் விடைத்தாளை வெளியிடுகிறது. ஜூலை 18 அன்று தேர்வாணையத்துக்குத் தெரிவித்து, காவல்துறையில் புகாரும் அளிக்கிறது. ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுகிறது. டிசம்பர் 21-ல் உயர் நீதிமன்றம், தேர்வு செய்யப்பட்ட 74 பேரையும் பணியமர்த்தக் கூடாது என அரசுக்கு ஆணை பிறப்பிக்கிறது.

74 பேரில் 62 பேர் அப்பல்லோ பயிற்சி நிறுவனத்தில் பயின்றவர்கள் என்பதால் குற்றப் பிரிவு காவல்துறை ஏப்ரல் 26 அன்று இந்நிறுவனத்தில் சோதனை மேற்கொள்கிறது. மே 16 அன்று மாநகரக் குற்றவியல் நீதிமன்றத்தால் அப்பல்லோ பயிற்சி நிறுவன இயக்குநர் சாம் ராஜேஸ்வரனுக்கு இந்தியாவைவிட்டுச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்தப் பிரச்னை தொடர்பாக தேர்வாணைய அலுவலர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் தயாரித்தவர், விடைத்தாள் திருத்தியவர்கள், தேர்வாணைய அலுவலர்களுக்கென ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் புழங்கியிருப்பதாகக் காவல் துறைக்கு ஐயம் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வழக்கு சைபர் கிரைமிலிருந்து குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பயிலகம் என்ற பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் கண்டு பிடிக்கப்பட்டு, தேர்வே ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் ஒவ்வொன்றிலும் ஊழல் ஏமாற்று வேலைகள் நடைபெறுவது கண்டு உண்மையாக உழைத்துத் தேர்வு எழுதியோர் என்ன செய்வதென அறியாமல் தவிக்கின்றனர்.

இப்படித்தான் பல்கலைக்கழக உயர்பதவியில் இருக்கும் துணைவேந்தர் ஊழல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது’’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.மேலும் தொடர்ந்த முருகையன், ‘‘காவல்துறை அலுவலர் கரீம் காப்பியடித்த தொழில்நுட்பம், எழும்பூரில் தேர்வெழுதியவருக்குத் தனியார் பயிற்சி நிறுவனம் நடத்துபவரின் மனைவி விடைகளைச் சொன்ன அவலமான அற்புதம் பலரையும் சிந்திக்க வைத்தது.

‘ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை’ என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க அரசு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை அளிப்பதன் மூலம் தான் இக்குறைகளை அறவே களைய முடியும். இல்லையென்றால் அரசுப் பணி என்பது படித்தவர்களுக்கு கிடைக்காமல் பணம் படைத்தவர்களுக்கானதாக ஆகிவிடும். போட்டித் தேர்வுகள் போலித் தேர்வுகளாகத்தான் இருக்கும்.

உயர்பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள் தேர்வில் ஊழலும், முறைகேடுகளும் இருக்குமேயானால் அது களையப்பட வேண்டும். எனவே, நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையோடு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றார்.