+2 முடித்தவர்களுக்கான எஸ்.எஸ்.சி.தேர்வு!உத்வேகத் தொடர் 53

இன்றைய காலகட்டத்தில் ‘படித்த படிப்பிற்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லையே?‘  என்பது சில பட்டதாரிகளின் வேதனைக் குரலாக மாறிவிட்டது. இந்த நிலையைத் தவிர்க்க, படிக்கின்ற காலத்திலேயே ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுகள் பற்றிய தெளிவான சிந்தனையை வளர்த்துக்கொண்டு, தேர்வுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டால் மதிப்புமிக்க மத்திய அரசின் பணியில் சேர்ந்து சிறப்புப் பெறலாம்.
பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கும் மத்திய அரசின் அமைப்பு “ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்” (Staff Selection Commission) ஆகும். இதனை “எஸ்.எஸ்.சி.” (SSC) என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இயங்குகிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தரம்வாய்ந்த, தகுதியான நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற பணிகளை வழங்குவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்தியா முழுவதும் 7 மண்டல அலுவலகங்களைக்கொண்டு எஸ்.எஸ்.சி. அமைப்பு இயங்குகிறது.

அலகாபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இவைதவிர, ராய்ப்பூர், சண்டிகார் ஆகிய இடங்களில் துணை மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மண்டல அலுவலகமும், மண்டல இயக்குநர் தலைமையில் இயங்குகின்றது. ஆனால், துணை மண்டல அலுவலகம் துணை இயக்குநர் தலைமையில் இயங்குகிறது.

கடந்த இதழ்களில் - ‘எஸ்.எஸ்.சி.’ (SSC) பட்டதாரிகளுக்காக நடத்தும் “கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன்” (Combined Graduate Level Examination-CGL) என்னும் தேர்வு பற்றி விரிவாகப் பார்த்துவந்தோம். இனி எஸ்.எஸ்.சி நடத்தும் “கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் (10+2) எக்ஸாமினேஷன்”  (Combined Higher Secondary Level (10+2) Examination) தேர்வு பற்றிய விரிவான விளக்கங்
களைப் பார்ப்போம்.

கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் (10+2) எக்ஸாமினேஷன்Combined Higher Secondary Level (10+2) Examination)இந்தத் தேர்வு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. சுமார் 20 லட்சம் போட்டியாளர்கள் இந்தத் தேர்வை ஆண்டுதோறும் எழுதுகிறார்கள். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தத் தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு -

*போஸ்டல் அசிஸ்டென்ட் / சார்ட்டிங் அசிஸ்டென்ட் (Postal Assistant/Sorting Assistant)
*டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
*லோயர் டிவிஷன் கிளர்க்/ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட் (Lower Division Clerk/Junior Secretariat Assistant)
*4கோர்ட் கிளர்க் (Court Clerk)  - ஆகிய பதவிகள் வழங்கப்படுகிறது.

வயது விவரம்: இந்தத் தேர்வை எழுத 18 முதல் 27 வயது கொண்டவர்கள் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். வயது வரம்பு ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப மாறுபடும். இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (SC/ST) அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. இதேபோல், பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (Other Backward Class) அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முடித்தவர்கள் இந்தத் தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். டைப்பிங் தேர்வு (Typing Test)/திறன் தேர்வு (Skill Test) ஆகிய தேர்வுக்காக அழைக்கப்படுபவர்கள் தேவையான சான்றிதழ்கள், மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டியது அவசியமாகும்.

தேர்வுக் கட்டணம்: “கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் (10+2) எக்ஸாமினேஷன்” என்னும் இந்தத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூபாய் 100. இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் இந்தத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தேர்வு மையம்: இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. மேலும், தென் மண்டல அலுவலகத்தோடு தொடர்புடைய குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், புதுச்சேரி, ஹைதராபாத், நிஜாமாபாத், வாராங்கல் - ஆகிய இடங்களிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு பற்றிய அனைத்து விவரங்களையும்

The Regional Director (SR),
Staff Selection Commission,
EVK Sampath Building,
IInd Floor, College Road,
Chennai - 600 006
Tamilnadu.
- என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.இந்தத் தேர்வை வெற்றிகரமாக எழுதுவதற்கு உதவும் தேர்வுமுறை, பாடத்திட்டம் பற்றிய விரிவான விளக்கத்தை அடுத்த இதழில் காண்போம்.

தொடரும்

நெல்லை கவிநேசன்