தமிழகத்தின் உயர்கல்வி உரிமை பறிக்கப்படுகிறதா..?சர்ச்சை

ஓர் அலசல்


பொதுத் தேர்வு எழுதிவிட்டு உயர்கல்வி தொடர காத்திருந்த பிளஸ் 2 மாணவர்களை மனச்சோர்வு அடையச் செய்துள்ளது தேர்வு முடிவுகள். பெரும்பாலான மாணவர்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதனால், மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு தகுதித் தேர்வு எழுதுவதற்கும் தகுதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கலை, அறிவியலிலாவது தாங்கள் விரும்பும் பட்டப்படிப்பைப் படிக்கலாம் என்றால், அதற்கும் தற்போதைய மதிப்பெண்கள் தகுதியில்லாததாக கல்லூரி வாயில்களிலேயே மாணவ மாணவியர் அவமானப்பட்டுத் திரும்புகின்றனர். உயர்கல்வி என்பது அதிக பணம் செலுத்தினால் மட்டுமே படிக்க முடியும் என்ற வகையில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஏழை எளியவர்களின் உயர்கல்வி உரிமை மறைமுகமாக மறுக்கப்படுகிறது. இதுகுறித்து, கல்வியாளர் பேராசிரியர் பி.ரத்தினசபாபதியிடம் பேசியபோது அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட கருத்துகளைப் பார்ப்போம்…

‘‘சமுதாய அமைப்பில் உயர்தட்டில் இருந்தவர்களுக்கும் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்களுக்குமே கல்வி என்றிருந்த நிலையை பெருந்
தலைவர் காமராஜர், நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோர் மாற்றினர். ஏழை எளியவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியைப் பட்டிதொட்டிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்கச் செய்தனர். பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு நீக்கப்பட்டு 5+2+3 எனக் கல்விமுறை மாற்றியமைக்கப்பட்டது.

இக்கல்வி முறையில் “+2” மேல்நிலைப் படிப்பினைக் குறிக்கும். இப்படிப்பு கல்லூரியிலா? பள்ளிக்கூடத்திலா? என விவாதங்கள் எழுந்தபோது, இப்படிப்பு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பள்ளிக்கூடத்தில்தான் இருக்கவேண்டும் என அன்றைய கல்வி அமைச்சர் முனைவர் செ.அரங்கநாயகம் உறுதியான முடிவை மேற்கொண்டார். அதன் பயனாக கிராமப்புறத்து மாணவர்கள் மேல்நிலை வகுப்புக் கல்வியான +2 வரை தடையின்றிப் பெற்று வருகின்றனர்.

மேல்நிலைப் பள்ளிப் படிப்பும் ‘நீட்’ தேர்வும் மனமுதிர்ச்சி அளவிலும் சமுதாய இணக்கப் பண்பைப் பண்படுத்தும் நோக்கிலும் மேல்நிலைப் பள்ளிக்கல்வியானது கல்வி நிலையில் முதன்மையான இடம் வகிக்கிறது. இந்நிலையில்தான் ஒருங்கிணைந்த ஆளுமை, சமுதாயத்திற்குத் தேவையான பண்புகள் வளரும் சூழ்நிலைகள் உருவாகின்றன. ஆனால், இதனைப் பாழ்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வியின்போதே ‘நீட்’ போன்ற பொருத்தமற்ற பொது நுழைவுத் தகுதித் தேர்வுகளுக்கான ஆயத்தப் பணி புகுத்தப்படுகின்றன.

‘நீட்’ தேர்வு ஓர் அனிதாவை மட்டும் சாகடிக்கவில்லை. இன்னும் எத்தனையோ அனிதாக்களை மனஅழுத்தத்திற்கு உட்படுத்திவருகிறது. அதை நிரூபிக்கும் விதமாக நீட் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் மாதிரி விடைத்தாளைப் பார்த்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவர்களோடு சேர்த்து பிள்ளைகளைப் பற்றிய கனவோடு வாழும் பெற்றோர்களையும் காவு வாங்கியுள்ளது. பொது நுழைவுத் தேர்வின் குழப்பங்களையும் மலிந்து காணப்பட்ட ஊழல்களையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு  பொது நுழைவுத் தகுதித் தேர்வினை எதிர்த்துவந்தது. ஆனால் இப்போது, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம் எனப் பொருந்தாத ஒரு வறட்டுக் கோட்பாட்டினை மேற்கொண்டு மத்திய அரசு திட்டமிட்டே ஏழை எளிய மக்கள் கல்வி பெறும் வாய்ப்பினைத் தடுத்துவருகிறது.

கல்வியின் நோக்கம் பாழாகிறது

பள்ளிக்கூடங்கள் நற்பண்புகளையும் ஆளுமைத் திறனையும் வளர்ப்பதற்கே. அதை விடுத்து பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மட்டும் மாணவர்களை உருவாக்குவது என்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும் பொது நுழைவுத் தகுதித் தேர்வுக்கு ஏற்றபடி பாடநூல்கள் தயாரிக்கப்படுவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. நிதி கொழுத்தோர் பயிற்சி மையங்களை நாடுகின்றனர், பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்று. மேலும் சிலர், பெயரளவிற்குத்தானே +2 பொதுத் தேர்வு; பொது நுழைவுத் தேர்வுதான் நமக்கு முக்கியம் எனக் கருதி படிப்பைப் புறக்கணிக்கின்றனர்.

மாணவர்களின் தேர்வு விழுக்காட்டை உயர்த்திக்காட்டிட மாணவர்களுக்கு விளிம்புநிலை (Border) மதிப்பெண்கள் வழங்கும் வழியை கல்வித்துறை ஏற்படுத்திவிட்டது. பொது நுழைவுத் தகுதித் தேர்வினை எதிர்கொண்ட மாணவர்களின் இடர்ப்பாடு சொல்லிலடங்காது. படித்த பாடம் வேறு; அப்பாடத்தில் கேட்ட வினாக்களின் மாதிரி வேறு. பணம் உள்ளோர் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றனர். பிறர் தம்மால் இயன்ற அளவு சுயமாக படித்துத் தேர்வு எழுதினர்.

மறுக்கப்படும் வாய்ப்பு

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 490 மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானவர்கள் +2வில் 650ல் இருந்து 700ஐத் தாண்டவில்லை. இதனால், இவர்கள் கலை, அறிவியல் கல்லூரி களில்கூட தாங்கள் விரும்பும் பட்டப் படிப்பில் சேர இயலாத நிலை உள்ளது. நடுத்தர, ஏழை சமுதாயத்திலிருந்து வருவோரை பட்டப் படிப்பிலிருந்தும் ஓரங்கட்ட இப்படியும் ஒரு சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளிக்கல்வித் துறையில் மத்திய அரசு ஊடுருவி மாநில உரிமைகளைப் பறிப்பதோடல்லாமல் மாநிலத்திலுள்ள மாணவர்களை உயர்கல்வி பெறமுடியாத நிலைக்குத் தள்ளுகிறது. சுயநிதிக் கல்லூரிகளின் கொடுமைஉயர்கல்வியிலும் வேலைவாய்ப்பினைக் கொண்டுள்ள பட்டப்படிப்பு களுக்கான பல்கலைக்கழக இணைப்பு (Affiliation) சுயநிதிக் கல்லூரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. பணக் கொள்ளைக் கூடங்களாக  விளங்கும் அவற்றில் ஏழை எளிய மாணவர்கள் சேர இயலுமா?

சிறுபான்மை நிறுவனங்களில் ஊடுருவல்!

இன்னொரு முறைகேடும் தமிழகத்தைச் சூழ்ந்துள்ளது. தமிழ் பெருந்தகையரின் தன்னேரில்லா உழைப்பால் உயர்வுபெற்றுத் திகழும் சிறுபான்மைக் கல்லூரிகள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றில் சமயப் போர்வையில் பிற மாநிலத்தவர்கள் பெரும்பான்மை பெற்றுவருகின்றனர். அவர்களுடைய மாநில பற்றினால் தமிழ்நாட்டு மாணவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

மாநிலத்திற்கு மாநிலம் மதிப்பெண் வழங்குவதில் மாறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, 60 மதிப்பெண் பெற்ற பிற மாநில மாணவர் 50 மதிப்பெண் பெற்ற தமிழ்நாட்டு மாணவரோடு உயர் தேர்ச்சி பெற்றவர் எனக் கருதுவது தவறான மதிப்பீடு. பிற மாநிலத்தின் சராசரி மதிப்பெண் 60. தமிழ்நாட்டின் சராசரி மதிப்பெண் 45. அப்படியென்றால் யார் உயர் தேர்ச்சி பெற்றவர்? முந்தைய ஆண்டுகளில் (அந்நாளைய 11ஆம் வகுப்பு, S.S.L.C) மாணவரின் மதிப்பெண் பட்டியலில் மாநில சராசரி மதிப்பெண்ணை ஒவ்வொரு பாடத்திற்கும் குறிக்கும் வழக்கம் இருந்தது.

இப்போதில்லை. இதனால் முறையான மதிப்பீடு இல்லை. பிற மாநில மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் உயர் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். இனி பாடத்திட்டங்களிலும் மாறுபாடுகள் உள்ளன. இந்தக் கூறுகளையெல்லாம் கவனிப்பதில்லை.  அதனால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் தாழ்த்தப்படுகிறது; வீழ்த்தப்படுகிறது!

நிறுவனவயப்பட்ட கல்வி முறை நடைமுறைக்கு வந்த காலத்திலிருந்து தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டிவந்தது. இன்றைய நிலை என்ன? இசைவுப் பட்டியல் (Concurrent list) என்பதற்குத் தவறாக விளக்கம் கூறி மாநில அரசின் கல்வித்திட்ட உரிமையில் மத்திய அரசு தலையிட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கே உயர்கல்வி என்னும் நிலை வருவதற்காக ஏழை எளியோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கல்வி பெறும் வாய்ப்பினை படிப்படியாக முடக்கி வருகிறது. இவர்களின் முகமூடிகளை மக்கள் கிழித்தெறிய வேண்டும். மக்கள் நலத்தை உண்மையாக நாடும் மாநில அரசுகள் விழிப்பு பெற வேண்டும். அப்போதுதான் ‘இல்லாதவர்களுக்கு இல்லை கல்வி’ என்ற நிலை மாறி, ‘எல்ேலாருக்கும் கல்வி’ என்னும் நிலை மலரும்’’ என்கிறார் ரத்தினசபாபதி.

- தோ.திருத்துவராஜ்