பேக்கேஜிங் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு!



அட்மிஷன்

மத்திய அரசின் வர்த்தக துறை அமைச்சகத்தால் 1966ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங் எனும் கல்விநிறுவனமானது பேக்கேஜிங் துறையில் சர்வதேச தரத்தில் தொழில்நுட்பங்களைக் கற்பித்து மாணவர்களை உருவாக்குகிறது.

மும்பையை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இக்கல்வி நிறுவனமானது சென்னை, டில்லி, கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் தன்னுடைய கிளை மையங்களைக் கொண்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கல்விநிறுவனத்தில் Post Graduate Diploma in Packaging எனும் இரண்டு வருட முதுகலைப் படிப்புக்கான 2018 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்: இன்றைய உலகமயமாக்கலின் விளைவால் வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் பேக்கேஜிங் துறையில் Post Graduate Diploma in Packaging  இரண்டு வருட முதுகலைப் படிப்பை சர்வதேச தரத்தில் மாணவர்
களுக்கு வழங்குகிறது இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங் கல்வி நிறுவனம்.

கல்வித் தகுதி: 12ம் வகுப்புடன் ஏ.ஐ.சி.டி.இ., அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் மூன்று வருட இளநிலைப் பட்டப்படிப்பை அறிவியல் துறையில் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல்/வேதியியல்/கணிதம் மைக்ரோ பையாலஜி அல்லது பையோ கெமிஸ்ட்ரி ஆகியவற்றில் ஒன்றையாவது முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்து, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே 31, 2018 தேதியின்படி 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் அவசியம். மேலும் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு மூன்று வருடமும், எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் www.iip-in.con என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 ஐ டிடி எடுத்து அதன் விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 8.6.2018.  

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்களுக்கு 14.6.2018 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்படும். ஐ.ஐ.பி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக மையங்களில் விண்ணப்பப் படிவத்தை பெற்றோ விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களில் இருந்து ‘மல்டிபில் சாய்ஸ்’ கேள்விகள் முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு நேர்காணலின் மூலம் சேர்க்கை வழங்கப்படும்.மேலும் விரிவான தகவல்களுக்கு www.iip-in.con என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்