ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி!வழிகாட்டுதல்

சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமிகளில் அதிக சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உருவாக்கிய பெருமையை ஆபீசர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி பெற்றுள்ளது. அண்ணாநகர், ஆறாவது அவென்யூவில் உள்ள அலுவலகத்தில் அதன் இயக்குநர் இஸ்ரேல் ஜெபசிங், ஐ.ஏ.எஸ்-ஐ சந்தித்தோம். சமீபத்தில், ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பிடமிருந்து, கல்விக்கான `Pride of TamilNadu’ விருது பெற்ற உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

  ‘‘திருநெல்வேலிதான் எனது பூர்வீகம் என்றாலும், பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே சென்னையில்தான். அப்பா ராஜா டேனியல். அந்த காலத்திலேயே பி.ஏ.பி.எல். படித்துவிட்டு, செக்ரட்டரியேட்டில் பணிபுரிந்தவர். அம்மா ஜாய்ஸ் லில்லி அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.

நான் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ மெக்கானிக்கல் படித்தேன். படிக்கும்போது, அரியர் ஸ்டூடன்ட் நான். படித்து முடித்த பிறகு வேப்பம்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகவும், லேப் பொறுப்பாளராகவும் பணிக்குச் சேர்ந்தேன்.’’ என்று தனது கல்லூரி காலத்தை நினைவுகூர்ந்தார்.

அரியர் ஸ்டூடன்டாக இருந்தவர் ஐ.ஏ.எஸ் ஆனது பற்றி விவரிக்கலானார். ‘‘அப்பாவும், அம்மாவும் அரசுத் தேர்வுகளை எழுதச் சொன்னார்கள். சரி எழுதுவோமே என்று 1998-இல் ஐ.இ.எஸ். தேர்வு எழுதினேன். அப்போது மெயின் தேர்வும் இன்டர்வியூ மட்டும்தான். அதில் தேர்ச்சி பெறவில்லை.
1999-ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். பிரிலிமினரியில் தேர்ச்சி பெற்றேன். மெயின்ஸில் தேர்ச்சி பெறவில்லை.

2000-ல் மீண்டும் தேர்வெழுதி, IRTS-ஆக தேர்ச்சி பெற்றேன். அந்தப் பணியில் சேரும்போது, 2 ஆண்டுகள் வேறு எந்தப் பணிக்கும் போகக்கூடாது என்ற ஒப்பந்தம் இருந்ததால் அங்கேயே இருந்தேன். 2003-இல் மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினேன். 59-வது ரேங்க் பெற்று, ஐ.ஏ.எஸ். ஆக தேர்ச்சி பெற்றேன்.’’ என்று மகிழ்ச்சிபொங்க தெரிவித்தார்.

 தனது ஐ.ஏ.எஸ். பணிக்காலத்தின் அனுபவத்தை முகமலர்ச்சியோடு சொல்லத் தொடங்கினார் ஜெபசிங். ‘‘முதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிலிகுரி என்ற பகுதியில் சப்-கலெக்டராக பணியில் சேர்ந்தேன். பின்னர் அதே மாநிலத்தில் ஜார்கிராம் எனும் பகுதிக்கு சப்-கலெக்டராக இருந்தேன். இது நக்சல்கள் நிறைந்த பகுதி. இங்கே பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அரசின் சார்பில், நக்சல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை சரி செய்திருக்கிறேன். நீண்டகாலம் அங்கே பணியில் இருந்தேன்.

அம்மாவிற்கு கேன்சர் என்பதால் ஓராண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு, சென்னைக்கு வந்துவிட்டேன். அம்மாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எனது பணியை ராஜினாமா செய்தேன். அம்மா பள்ளி ஆசிரியராக இருந்தவர். நானும் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவன் என்பதால், எனக்கு கற்பித்தல் மிகவும் பிடிக்கும்.  ராஜினாமா செய்தபிறகு, என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

இந்தியாவில் உள்ள தனியார் கோச்சிங் நிறுவனங்கள் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். எழுதி தோற்றவர்களால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருந்தன. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவன் என்பதால், நாம் ஏன் ஆரம்பிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த அகாடமியை அண்ணாநகரில், கடந்த 2013-ல் தொடங்கினேன்.

அப்போது 21 மாணவர்கள் படிக்கச் சேர்ந்தார்கள். அதில் 7 மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள். 2014-ல் 21 பேர், 2015-ல் 41 பேர், 2016-ல் 64 பேர் என இன்று வரை, 143 பேர் இங்கிருந்து சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்வாகி இருக்கிறார்கள். 21 மாணவர்களுடன் அப்போது தொடங்கிய எங்கள் பயணம் இன்று 1000 மாணவர்கள் படிக்கும் அளவிற்கு நல்லதொரு பயிற்சி நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

‘‘ஒரே சமயத்தில் 200 மாணவர்கள் அமரும்படியான, ஸ்மார்ட் வகுப்பறைகள், மூன்று இருக்கின்றன. நூலகம், இணைய வசதி இருக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் இங்கே தனித்தனியே மென்டர் இருக்கிறார். அவர் ஒவ்வொரு மாணவர் மீது தனி அக்கறை எடுத்துக்கொண்டு, அவர்களது நிறை என்ன? குறை என்ன என்பதை சுட்டிக்காட்டி, வழிகாட்டுவார். இது பயிற்சி மையம்போல் இருக்காது. பள்ளியைப்போன்று, அக்கறையோடும் தீவிர கண்காணிப்போடும் இருக்கும். வாரா வாரம் தேர்வுகள் இருக்கும்.

இப்படி அவர்களைப் பட்டைதீட்டும் வசதிகள் உள்ளன.    மாணவர்களை சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக்கும் விதத்தையும் அவர் கூறுகையில், ‘‘இந்தியாவிலேயே ஐ.ஏ.எஸ். பணியில் இருந்த ஒருவர் அகாடமியைத் தொடங்கியது நாங்களாகத்தான் இருப்போம் என்று நினைக்கிறேன். நான் இந்தியன் ரயில்வே டிராபிக் சர்வீஸில் இருந்திருக்கிறேன். இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வை முழுமை செய்திருக்கிறேன். இதனால்,
இந்தத் தேர்வை எப்படி அணுக வேண்டும், எப்படி தயாராக வேண்டும், நேர்காணலில் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்ற நுணுக்கங்கள் எல்லாம் தெள்ளத் தெளிவாக எடுத்துச்சொல்லி தயார் செய்கிறேன்.

நான் மட்டும் அல்ல, இங்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஐ.ஏ.எஸ். பணியில் இருந்துவிட்டு வந்தவர்கள்தான். அனைவரின் அனுபவங்களும் இங்கே ஒருமுகப்படுத்தப்பட்டு, மாணவர்களுக்குப் பாடங்களாக கற்றுத்தரப்படுகிறது. இதனால் எங்கள் பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிக தேர்ச்சியைத் தரமுடிகிறது.’’ என்கிறார்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன என்பதை தெளிவுபடுத்திய ஜெபசிங், ‘‘பொறியியல், மருத்துவம் படித்தவர்கள்தான் இந்தத் தேர்வை எழுத முடியும் என்ற எண்ணம் தவறானது. எந்த ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தாலும் போதும். தொலைநிலைக்கல்வி மூலம் படித்திருந்தாலும்கூட ேபாதும். முதலில் தேவை கடின உழைப்பு.

இரண்டாவதாக, சிவில் சர்வீஸ்தான் எனது லட்சியம், வாழ்க்கை என்ற தணியாத தாகம் அந்த மாணவருக்குள் இருக்க வேண்டும். இவை இருந்தால் போதும், வீட்டில் இருந்துகூட அந்த மாணவரால் வெற்றி பெற முடியும். எங்கள் பயிற்சி மையம் என்ன வேலை செய்யுமென்றால், ஹார்டு வொர்க்கை எப்படி ஸ்மார்ட் ஒர்க்காக மாற்ற முடியும்? எப்படி தேர்வினை விரைந்து எழுத வேண்டும் என்பன போன்ற நுணுக்கமான விஷயங்களையும், பயிற்சிகளையும் இடைவிடாது தரும்.

சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் டெல்லியில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் ஓராண்டுக்கு இரண்டரை லட்சம் வரை கட்டணம் வாங்குகின்றன. நாங்கள் ஓராண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயித்திருக்கிறோம்.

தவணை முறையிலும் கட்டணம் செலுத்தலாம். எங்களிடம் பயிற்சி பெற விரும்புவோர் info@officersiasacademy.com என்ற மின்னஞ்சலிலோ 9677174226 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, இலவசமாகவும் பயிற்சி அளிக்கிறோம்’’ என்று தன்னம்பிக்கையூட்டும் தகவல்களைப்
பட்டியலிட்டார் ஆபீசர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர்.