ஏழை மாணவ - மாணவியருக்கு இலவச தொழிற்பயிற்சி!பயிற்சி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் பயிற்சி துறையும் டைட்டன் நிறுவனமும் இணைந்து ஏழை மாணவ - மாணவியருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சென்னை கிண்டியில் திறன் மேம்பாட்டு மையத்தை ஆரம்பித்துள்ளன. எந்த வகையிலான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும், எவ்வாறு வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுக்கப்படும் என்பது குறித்து டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட் நம்மிடம் விளக்கினார்.

‘‘சமூகத்தில் நலிவடைந்த இளையதலைமுறையினரின் திறன்களை மேம்படுத்த உதவுவதோடு, அவர்களுக்கு வேலைவாய்ப்பை ற்படுத்திக்கொடுப்பதற்காக இந்தத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் அனைத்துப் பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகளை அவர்கள் பெறுவதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்வதோடு சுயமாகவும் தொழில் தொடங்க வழிகாட்டுகிறோம்.

இந்தத் திறன் மேம்பாட்டு மையம் தொழில் ஹப் அண்ட் ஸ்போக் மாடல் ஆக செயல்படும். மஹிந்த்ரா ப்ரைட் ஸ்கூல் இப்பயிற்சி மையத்தை நிர்வகிக்கிறது. பல்வேறு வகையிலும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதோடு, அரசு ஐடிஐ மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் மற்றும் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு உதவும் பயிற்சிகளையும் அளிக்கவுள்ளோம்.

இதற்காக இம்மையத்தில் உலகத்தரம் வாய்ந்த கணினி ஆய்வகம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. டேலி அண்ட் ரீடெய்ல்  (Tally and Retail), கேட் (CAD)  பிரிவிலான பாடத்திட்டங்கள், அனிமேஷன் ( Animation) ஆகியவை தற்போது கற்றுத்தரப்படுகிறது. அடுத்து சிசிடிவி நிறுவுதல், பராமரித்தல் மற்றும் இமேஜ் மேனேஜ்மென்ட்) படிப்பும் தொடங்கப்பட உள்ளது. இவை மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத வேலைகளின் அடிப்படையிலான பாடத்திட்டங்களும் கற்றுத்தரப்பட உள்ளது’’ என்கிறார் பாஸ்கர்.

எதுபோன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்பதையும் விவரித்த அவர், ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் அப்டிடியூட், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், லைஃப் ஸ்கில்ஸ், குரூப் டிஸ்கஷன் மற்றும் இன்டர்வியூ தொடர்பான திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடத்திட்டமானது வேலைவாய்ப்புக்கான திறன்கள் (Employability Skills) என்ற பிரிவின் கீழ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2300 மாணவர்கள் பலன் அடைந்திருக்கிறார்கள்.

நடப்பாண்டில் (2018 - 2019) தமிழ்நாடு முழுவதிலும் 4000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் பயிற்சியின் மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளுக்கான கதவை திறந்துவிடுமென நம்புகிறோம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள், அடையாதவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் அடையாதவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் அடையாதவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.  
மேலும் இதுகுறித்த விவரங்களை 044-48534533 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்