நல்ல விஷயம் 4வளாகம்

பார்க்கவேண்டிய இடம் : திருநந்திக்கரை குகைக்கோயில்

திருநந்திக்கரை குகைக்கோயில் கி.பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டது ஆகும். இது திருநந்திக்கரை கோயிலின் ஒரு பகுதியாக உள்ளது. தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டாறு அருகே உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம்வரை, கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் கேரளப் பகுதிகளாக இருந்தன, ஆனால், ் தமிழ்நாட்டின் அதிகார வரம்பின் கீழ் உள்ளது. இந்தக் குகைக்கோயில் முதலில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் சமணர்களுக்காக நிறுவப்பட்டது. பிற்காலத்தில் இது ராஜராஜ சோழனால் இந்துமதக் கோயிலாக மாற்றப்பட்டதாக சொல்லப் படுகிறது.

குகையின் மண்டபம் மிகுதியாக அலங்கரிக்கப்பட்ட ஓவியங்களைக்கொண்டிருந்ததாகக் கணிப்பு உள்ளது. இருப்பினும், தற்போது மங்கிய நிலையில் உள்ள ஓவியங்களே கடந்தகால ஓவியங்களை நினைவூட்டுவதாக உள்ளன. இந்த சுதை ஓவியங்கள் கி.பி 9-10 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஓவியங்கள் ஆகும்.முற்காலச் சுவரோவியங்கள் சில கேரள பாணியில் உள்ளன. இந்த ஓவியங்கள் காவியக் கதைகளான இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைக் காட்சிகளை சித்திரிக்கின்றன. மேலும் அறிந்துகொள்ள https://ta.wikipedia.org/wiki/திருநத்திக்கரை_குகைக்_கோயில்

வாசிக்கவேண்டிய வலைத்தளம்: www.duolingo.com

உலகில் உள்ள அனைத்து மொழி ஆர்வலர்களும் சர்வதேச மொழிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டதே இத்தளம். பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஆங்கிலம், டச்சு என மொத்தம் 29 சர்வதேச மொழிகளுக்கான பயிற்சிகளைப் பெற லிங்குகள் கொடுக்கப்பட்டு, விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து, கேமிங், ஆக்டிவிட்டீஸ் போன்ற விளையாட்டுச் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையில் செயல்படுகிறது இத்தளம். மேலும் ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து இலவசமாக சர்வதேச மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம்.

அறியவேண்டிய மனிதர்: மேகநாத் சாஹா

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் வங்கதேசத்திற்குட்பட்ட ஷரடோலி கிராமத்தில் 1893-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் நாள், ஜகநாத சாஹா-புவனேசுவரிதேவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியைச் சொந்த கிராமத்தில் முடித்ததும் சிமுலியாவில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

விடுதி, உணவுச் செலவு அதிகமானதால் மிகவும் சிரமப்பட்டார். ஆனந்தகுமார்தாஸ் என்ற மருத்துவரின் உதவியோடு படித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.  படிப்பில் இருந்ததைப் போன்றே சமுதாய நலனிலும் தீவிர நாட்டம் கொண்டிருந்தார். வங்கப் பிரிவினையின்போது 12 வயதுதான். ஆனாலும், போராட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். வங்கதேச ஆளுநர், பள்ளிக்கு வந்தபோது, நண்பர்களைத் திரட்டி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினார். இதனால் அரசு உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

டாக்கா கல்லூரியில் வேதியியல், கணிதவியல், ஜெர்மன் மொழி கற்றார். உதவித்தொகை பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். சத்யேந்திரநாத் போஸ், மகலனோபிஸ் ஆகியோர் இவரது சகாக்கள். பிரஃபுல்ல சந்திர ரே, ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிகாட்டியவர்கள்.

இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர விரும்பினார். அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியவர் என்று கூறி அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்.

வெப்ப அயனியாக்க கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கினார். 1920-ல் வெளிவந்த ‘சூரியமண்டலத்தில் அயனியாக்கம்’என்ற இவரது ஆய்வுக் கட்டுரை நவீன வானியலின் திறவுகோலாக அமைந்தது. கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையைப் பெற்று லண்டனில் 2 ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். அயனியாக்க சமன்பாட்டை கண்டறிந்ததற்காக லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனி, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அறிவியல் பயணங்கள் மேற்கொண்டார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1951-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகப் புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானியான மேகநாத் சாஹா 1056ம் ஆண்டு 63-வது வயதில் மறைந்தார். இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Meghnad_Saha