சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க சென்னைப் பல்கலை புது முயற்சி!



புதிய திட்டம்

தமிழ்நாட்டில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மையானதும் முக்கியமானதுமான மெட்ராஸ் யுனிவர்சிட்டியானது மரத்தை சிதைத்து உருவாக்கும் பேப்பர்களின் உபயோகத்தை குறைக்கும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் நெட்வொர்க்கிங் சிஸ்டம் ஒன்றை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டுவருகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் இச்செயல்பாட்டிற்கென தனியாக அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் அமைப்பை நிறுவ ஒரு கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. மாநில உயர்கல்வி கவுன்சில் வழியாக இந்நிதியைப் பெற  Rashtriya Uchchatar shiksha Abhiyan(RUSA)எனும் மத்திய அரசின் நிதி வழங்கும் நிறுவனத்திடம் கோரியுள்ளது.

தொலை தொடர்புக்கெனவே முற்றிலும் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் அமைப்பு ஒன்று தனியாக இயங்குமானால், புரோகிராம் ஷெட்யூல்கள் மற்றும் ஒர்க் ஷாப் அழைப்புகள் என மாதத்திற்கு பிரின்டிங் துறைக்கென ஆகும் பல ஆயிரம் செலவுகள் மட்டுமில்லாமல் காகிதப் பயன்பாடும் தேவையில்லாததாகிவிடும்.

மேலும் பேப்பர்களில் இருக்கும் தகவல்களைக் கணினியில் தரவுகளாகவும் மாற்றலாம் மற்றும் இன்றைய நாளின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மாசுபடும் பிரச்னையைக் குறைக்க இதுவும் ஒரு வழியாகலாம் என்பது இக்கல்வி நிர்வாகத்தின் நீண்ட நாள் எண்ணமாக இருந்தது. மாநில உயர்கல்வி கவுன்சில் வழியாக இக்கோரிக்கையை மத்திய அரசின் கீழ் இயங்கும் RUSA விடம் வைத்துள்ளது மெட்ராஸ் யுனிவர்சிட்டி.

ஒவ்வொரு மாநிலங்களிலும் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் தகுதியையும், தரத்தையும் ஆராய்ந்து அக்கல்வி நிறுவனம் மேலும் சிறப்பாகச் செயல்பட நிதியுதவி செய்துவரும் மத்திய அரசின் RUSA வானது இக்கோரிக்கையை ஏற்று நடைமுறைபடுத்துவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளது.

இது மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது உபயோகப்படுத்தும் பேப்பர்களில் இருந்து சுமார் 80% சேமிக்கப்படும் என உறுதியளிக்கிறது மெட்ராஸ் யுனிவர்சிட்டி. மேலும் இந்த டிஜிட்டல் உலகில் மாணவர்களின் கருத்துகளையும்  ஆன்லைனில் பெறலாம் என மகிழ்ச்சியில் உள்ளது. ஏற்கனவே மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் Wi-Fi வசதியும் கேம்பஸில் உள்ளது. உலகின் இன்றைய முக்கியப் பிரச்னையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில்கொண்டு தனியாக ஒரு டிஜிட்டல் பிளாட்பார்மை அமைக்கும் முயற்சியில் தமிழகத்தின் பழமையான உயர்கல்வி நிறுவனம் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கதே.

- வெங்கட்