நாசா செல்லும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்!சேவை

சென்னை மாநகராட்சி கல்வித் துறை மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கமும் இணைந்து மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் ‘விங்ஸ் டு ஃபிளை’என்ற திட்டத்தைக் கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் வாயிலாக அறிவியல் சார்ந்த பல்வேறு போட்டிகளை நடத்தி தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர்.  இந்தக் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சியில் உள்ள 70 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில் ஆதவன், கோபிநாத், காவியாஞ்சலி, ரேஷ்மா குமாரி, பிரேமா, ராஜ்குமார், சுபாஷ், யோகேஷ் ஆகிய 8 பேர் வெற்றிபெற்றதையடுத்து கல்விச் சுற்றுலாவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மே மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதுகுறித்து சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் உறுப்பினரான வார் என்பவர் நம்மிடம் அதன் நோக்கம் பற்றி பகிர்ந்துகொண்டார்.

“மாணவ  மாணவியர்களுக்குப் பரந்து விரிந்த இந்த உலகத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன, என்னென்ன நடந்துகொண்டிருக்கின்றன என்பதை நான்குச் சுவர்களுக்குள் வைத்து சொல்லிக்கொடுப்பதைவிடவும் முக்கியமான இடங்களுக்கு அவர்களை நேரடியாக அழைத்துச் சென்று காட்டினால் பொதுஅறிவில் இன்னும் தெளிவுபடுவார்கள்.

அவர்களின் அறிவும் திறன் மேலும் விரிவடையும் என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்ததின் வெளிப்பாடுதான் இந்தத் திட்டம். அதிலிருந்துதான், எங்கள் கிழக்கு சென்னை ரோட்டரி சங்கம், (The Rotary Club of Madras East), சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காகவே இந்தத் திட்டத்தை செம்மையாக செயல்படுத்தி வருகிறது.

‘இந்த உலகம், நீ நினைப்பதை விட மிகவும் விரிவானது, மிகவும் பரந்தது. உனக்கு இங்கே ஏராளமான சந்தர்ப்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன’ என்பதைச் சொல்வது மட்டுமல்லாமல், அதை அவர்களே பார்த்துப் புரிந்துகொள்ளவே வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்கிறோம்’’ என்று கல்விச்சுற்றுலாவுக்கான காரணத்தைச் சொல்லி முடித்தார்.

மேலும் அவர், “மாணவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்களைச் சந்தித்தல், அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் உரையாடுதல், சுற்றுலா இடங்களைப் பார்த்தல், அந்நாட்டின் செழிப்பையும் வளர்ச்சியையும் கண்டு புரிந்துகொள்ளுதல், என விதவிதமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகிறோம்.

இந்த அனுபவத்திற்குத் தயார் செய்யவும், அதற்குத் தகுதி பெறவும், சென்னையின் அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, சுமார் 3,500 மாணவர்களிடையேப் பல சுற்றுகள் தேர்வு நடத்தி, இறுதிச்சுற்றில் வெற்றிபெற்ற 8 மாணவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறோம்’’ என்கிறார்வார்.

‘‘இந்தப் போட்டியின் மூலம் 2015-16ம் ஆண்டு மலேசியா நாட்டில் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள மக்களும், மாணவர்களும் இவர்களோடு பேசியபோது காட்டிய அன்பும், பரிவும், மகிழ்ச்சியையும் நேரடியாகப் பார்த்தார்கள், அதை இன்னமும் மறக்க முடியாமல் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

2016-17ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லின் மற்றும் ஹாம்பர்க் நகரங்களில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களுக்கு அழைத்துச் சென்று, தண்ணீர் பாதுகாப்பு, அதன் பராமரிப்பு மற்றும் நதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள அவர்கள் கையாண்டுள்ள முறைகளைப் புரிந்துகொள்ளச் செய்தோம்.

சொந்த ஊருக்கு திரும்பிவந்த நம் மாணவர்கள், அவர்களின் அனுபவங்களைப் பல மேடைகளில் பகிர்ந்துகொண்டது,  அங்கு பார்த்த அத்தனையும் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதை நாங்கள் உணர்ந்தோம்’’ என்று உணர்ச்சிப்பெருக்கோடு தெரிவித்தார்.

“மூன்றாவது முறையான 2017-18ம் ஆண்டு விஞ்ஞானத் தொடர்புடைய தேர்வினை நடத்தி, இறுதிச்சுற்றில் கலந்துகொண்ட 32 பங்கேற்பாளர்கள், ‘இயங்கக்கூடிய மாதிரிச் சோதனை அமைப்புகளை’அவர்களே தயார் செய்து காட்சிக்கு வைத்தார்கள். அவற்றைச் சோதித்து வெற்றியாளர் பட்டியலைத் தீர்வு செய்ய, கல்லூரிப் பேராசிரியர்கள், பல்கலைக்கழகங்களின் முக்கியஸ்தர்கள், பெரிய தொழிற்சாலைப் பொறியாளர்கள் போன்றவர்களை நீதிபதிகளாக நியமித்து அவர்கள் தேர்வு செய்த முடிவைக்கொண்டு 8 மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். வெற்றி பெற்ற 8 மாணவர்களையும் அமெரிக்காவிலுள்ள NASA விண்வெளித் தளத்திற்கு இந்த வருடம் மே மாதம் அழைத்துச் செல்ல இருக்கிறோம்.

இந்த மாணவர்களின் அமெரிக்கப் பயணத்திற்குத் தேவையான ‘கடவுச்சீட்டு’ (Passport), அமெரிக்க வீசா மற்றும் உடைகள், காலணிகள் அனைத்தும், முந்தைய இரண்டு வருடங்களில் ஏற்பாடு செய்தது போலவே  அனைத்து வசதிகளையும் செய்துவருகிறோம்.

இதற்கான பயணமுறைத் திட்டமிடுதல், தங்குவதற்கு விடுதிகள், பொருத்தமான உணவகங்கள், அங்குள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களை (NRIs) சந்தித்தல், என்பவையெல்லாம் ஒருங்கே அமைய பணி செய்துகொண்டிருக்கிறோம். இவை அனைத்துமே இலவசமாக செய்து கொடுக்கிறோம்.

இந்த மாணவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய இந்தச் சந்தர்ப்பங்களினால், அவர்கள் நன்றாகப் படித்து வருங்காலத்தில் மேன்மையான பதவிகளையும், பெரிய அலுலகப் பொறுப்புகளையும் கையாள நேர்ந்தால் அதுவே எங்களின் இந்த ‘விரித்துப் பறந்திட சிறகுகள்‘ (WINGS TO-FLY) என்ற திட்டத்திற்கு கிடைக்கக்கூடிய மாபெரும் வெற்றியாக  கருதுகிறோம்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் வார்.

- தோ.திருத்துவராஜ்