விளக்கின் வெளிச்சத்தைவிட புன்னகையின் ஒளி பிரகாசமானது!



உளவியல் தொடர் 39

உடல்... மனம்... ஈகோ!


வன்முறை மோசமானதுதான் ஆனால் அடிமைத்தனம் வன்முறையை விட மோசமானது - நேதாஜி
  - ஈகோ மொழி

எது ஒன்றையும் எந்த அளவுக்குக் கற்றுக்கொள்கிறோமோ அதே அளவு பெற்றுக்கொள்ளவும் செய்கிறோம் என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை. அந்த வகையில் சுயமதிப்பிற்குக் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும் முறைகளில் அடுத்து அவசியம் கற்க (சொல்ல) வேண்டிய வழிமுறை
‘முடியாது’ என்பது.

முடியாது…! முடியாது…!

முடியாது என்ற சொல்லை உச்சரிப்பதற்கே சிலர் தயங்குகிறார்கள். ‘அதெப்படி முடியாதுன்னு சொல்றது? அப்படிச் சொன்னா மத்தவங்க தவறா நினைச்சிடுவாங்கள்ல’ என்று சிலர் தேவையற்ற முறையில் எண்ணிக்கொண்டிருப்பார்கள். ‘முடியாதா? என்னாலயா? முடியாதுங்கிற வார்த்தை என் அகராதியிலேயே இல்லை’ என்று அபத்தமாக வசனம் பேசுவார்கள் வேறு சிலர்.

எப்படியிருந்தபோதும், முடியாத விஷயத்திற்கு முதலில் ‘சரி’ என்று ஒப்புக்கொண்டு, பிறகு அதைச் செய்து முடிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இது அன்றாட வாழ்க்கையில் யதார்த்தமாகப் பார்க்கக் கூடியதுதான். ஒரு விஷயத்தை முயன்று பார்க்காமல் எடுத்ததும் ‘முடியாது’ என்று சொல்வதுதான் தவறே தவிர, முடியாத விஷயத்தை முடியாது என்று நேர்மையாக ஒப்புக்கொள்வதில் தவறே இல்லை. முடியாத ஒரு விஷயத்தை முடியாது என்று சொல்வதுதான் எப்போதும் சரி.

 முடியாது என்று சொல்வதற்கு முதலில் ஒரு தைரியம் தேவைப்படுகிறது.மனிதர்கள் எப்போதும் சுலபமான வழிகளில் வசதியாகப் பயணப்படவே விரும்பு வார்கள். எந்த ஒரு செயலைச் செய்யும்போதும், அதை மற்றவர் எப்படி வெற்றிகரமாக செய்தார்களோ அதே வழியிலேயே செல்ல முற்படுவார்கள். நமக்கு எதுக்கு ரிஸ்க்? என்று Beaten Track-யிலேயே பயணிப்பார்கள். இப்படியான தயக்கமும், தாட்சண்யமும்தான் முடியாது என்பதைச் சொல்லமுடியாமல் செய்கிறது. இந்த தாட்சண்யம்தான் சுயமதிப்பைக் குறைக்கும் விஷயம்.

ஒருவர் செய்யச் சொல்லும் ஒரு வேலையை முடியாது என்று சொல்லாமல் முகதாட்சண்யத்திற்காக சம்மதிப்பது நம்மை அவர்களது சுயலாபத்திற்காகப் பயன்படுத்த உதவுவதோடு, நமது சுயமதிப்பையும் குறைத்து எடைபோட வழிவகுக்கிறது.பொதுவில் உதவி செய்வது வேறு, ஏவல்புரிவது வேறு. சுயமதிப்பு உயர, முடியாது என்று சொல்லவேண்டிய இடத்தில் அவசியம் சொல்லிவிட வேண்டும். அந்த நிமிடம்தான் உங்களையே உங்களுக்குப் பிடிக்கும். அந்த பிடிப்புதான் ஈகோவிற்கான உள்ளீடு.

ஒவ்வொரு மனிதருக்கும் சுயமதிப்பு உயரக்கூடிய வகையில், முடியாத விஷயங்களையும், முடியக்கூடிய விஷயங்களையும் மனம் சுட்டிக்காட்டிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், அது சுட்டிக்காட்டப்படும் தருணத்தில்தான் பலரும் உணர்வதேயில்லை. ஒருவர் உதவியாகவோ, உத்தரவாகவோ சொல்லும் ஒரு வேலையைக் கேட்ட மாத்திரம் மனம் ‘சரி’ என்றும் ‘முடியாது’ என்றும் மிகச்சரியாகவே எடுத்துச் சொல்லும். அந்த நிமிடம் மனம் சொல்வதை கவனித்தால் போதும்.

மனம் சரி என்பதற்குச் சம்மதித்தும், ‘இதை செய்யணுமா? வேண்டாமே!’ என்று சந்தேகமாகக் குரல் எழுப்பினால் கூட, ‘முடியாது’ என்று சொல்லிவிட வேண்டும். ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். போகப்போகப் பழக்கமாகிவிடும். முடியாது என்பதற்கு முடியாது என்று நேர்மையாகச் சொல்பவர்களுக்குத்தான் சுயமதிப்பு உயர்கிறது. ‘அவர் மனசுல பட்டதை சரியா சொல்வாரு, முடியலைன்னா முடியலைன்னு சொல்வாரு…’ என்றே பாசிட்டிவ்வாக நினைக்கப்படுகிறார்கள்.

செய்ய முடிந்த காரியத்திலும், தன்மானத்தை விட்டுத்தராமல், உதவும் உள்ளத்துடன் செய்ய வேண்டுமே தவிர, ஒருபோதும் அடிமைத்தனத்துடன் செய்யக்கூடாது. ஒரு மனிதனின் செயல்தான் அவனது சுயமதிப்பைத் தீர்மானிக்க உதவுகிறது. தனிமனித உரிமையை விட்டுக்கொடுப்பவர்களும், அதற்குக் குரல் தராமல் நிற்பவர்களும் வீழ்ந்து போகிறார்கள் என்கிறது மானுடவியல் ஆராய்ச்சி.

அவரவர் சுயமதிப்பை அவரவர்தான் தற்காத்துக் கொள்ள வேண்டும். அநாவசியமாக அடுத்தவர் வந்து ஆளுமை செலுத்துவதினின்றும் தற்காத்துக்கொள்வது மிகவும் அவசியம். விலங்குகளிடமிருந்து தோட்டத்தைக் காக்க வேலியமைத்து காப்பது போல், நம் வாழ்க்கையில் மற்றவர் நுழைந்து ஆளுமை செலுத்துவதை ‘முடியாது’ என்ற வார்த்தை வேலிதான் தடுக்கிறது.

இனி முடியாததை முடியாது என்று சொல்ல முடியும்தானே?

வெளிப்பாடு சுயமதிப்பிற்குக் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும் வழிமுறைகளில் அடுத்த வழிமுறை… சரியாக வெளிப்படுத்துவது. பார்த்தமாத்திரத்தில் ஒருவரது பிம்பம் எப்படி மனதில் பதிகிறதோ அதுவே அவரது ஆளுமைச் சித்திரமாகப் பதிந்துவிடுகிறது. அதை வைத்தே மதிப்பு ஏற்படுகிறது.

‘அழகான சிறகுகள்தான் பறவைகளை அழகானவையாக மாற்றுகின்றன’ என்ற ஜப்பானிய பொன்மொழியும், ‘ஒரு மனிதனின் சிறப்பான தோற்றப் பொலிவுதான் அவனுக்கான சிறந்த சிபாரிசு கடிதம்’ என்ற அரேபிய பொன்மொழியும், ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்ற தமிழ் நாட்டார் வழக்கும் சுட்டிக்காட்டுவது இதைத்தான்.

ஒவ்வொரு மனிதனும் அவனது தோற்றப்பொலிவைக்கொண்டே எடை போடப்படுகிறான். மதிக்கப்படுகிறான். சரியான உடை உடுத்தப்படாதபோது அவனது மதிப்பைக் குறைத்து மதிப்பிட வைப்பதோடு, அவனுக்கும் அவன்மீதான சுயமதிப்பு குறைவு என்ற எண்ணத்தையும் ஏற்படச் செய்கிறது.

முடிவு… சுயமதிப்பு குறைந்து போகிறது. பாருங்கள், எந்தவிதமான பேச்சு, மொழி, நடவடிக்கை எதுவும் நிகழவில்லை. ஆனால், சுயமதிப்பு குறைந்துபோகிறது. அதனால்தான் தோற்றத்தின் வெளிப்பாடு சுயமதிப்பு விஷயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

வீட்டு விசேஷங்கள், பொது விழாக்கள் என்று நாலு பேர் கூடும் எந்த ஒரு இடத்திலும் தங்களைச் சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்பவர்களிடம்தான் பலரும் தேடிச் சென்று பேசுகிறார்கள், அளவளாவுகிறார்கள். வெளிப்படுத்தப்படும் அலங்காரமும் உறுத்தலின்றி அழகாக மனதைக் கவர்வதாக இருக்க வேண்டும்.

சிறகு என்ற வகையில் மயிலிறகும், கோழி இறகும் ஒன்றுதான். ஆனால், மயிலிறகிற்குக் கிடைக்கும் மதிப்பைக் கோழி இறகு ஒருநாளும் பெறுவதேயில்லை. அழகான வெளிப்பாடுகள்தான் மதிப்பைப் பெறும், பெற்றுத்தரும். அழகான வெளிப்பாடு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கவே செய்கிறது.

ஒரு மனிதனின் மிகச்சிறந்த வெளிப்பாடு புன்னகைதான்.உதடுகளின் சுழிப்பால் உதிக்கும் புன்னகை அடுத்தவர் உள்ளத்திற்குள் ஊடுருவும் வல்லமை வாய்ந்தது. புன்னகையை உதிர்க்கும் மனிதர்களைத்தான் எல்லோருக்கும் பிடிக்கிறது. சுயமதிப்பைப் பெற்றுத்தருகிறது.

விளக்கின் வெளிச்சத்தைவிட புன்னகையின் ஒளிவீச்சு பிரகாசமானது, அதிக ஒளி நிறைந்தது. சராசரியாக இருக்கும்போது பூஜ்ஜியமாக இருப்பவரும் புன்னகைத்தால் அழகாக இருப்பதைப் பார்க்கலாம். சிறப்பான வெளிப்பாடுகள் மட்டும் ஒரு மனிதனின் மதிப்பைக் கூட்டிவிடாது. ஆனால் அது அவனுக்கான குரலாக ஒலிக்கும்.

ஈகோவின் உள்ளீடான சுயமதிப்பிற்குக் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேலே சொல்லப்பட்டவை யாவும் நிச்சயம் பயனளிக்கக்கூடியவை. இவற்றை உணர்ந்து செய்தால் நிச்சயம் மற்றவர்களிடமிருந்து உயரிய மதிப்பை நிச்சயம் பெறலாம். அதேநேரம், சில செயல்கள் சுயமதிப்பைச் சிதைக்கக்கூடியவை. அவற்றை உணராமல் போனால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிடும். சுயமதிப்பைச் சிதைக்கக்கூடிய செயல்கள் எவை என்று அடுத்த இதழில் பார்ப்போம்…   

குரு சிஷ்யன் கதை

இறைத்தன்மையோடு இருக்க வேண்டும்!

சிஷ்யன் கோயில் முன் நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். அங்கு வந்த குரு, “என்னப்பா உன் கடவுளை திருப்திப்படுத்திவிட்டாயா?’’ என்றார்.சிஷ்யன் திரும்பி, “பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன் குருதேவா. கடவுளை திருப்திப்படுத்த முடியுமா என்ன?’’ என்றான்.“அப்படியானால் கடவுளை திருப்திப்படுத்தும் காரியத்தைச் செய்துதான் பாரேன்’’ என்றார்.

உடனே சிஷ்யன் ஆர்வமாக, “அதற்கு என்ன செய்ய வேண்டும் குருதேவா?’’ என்றான். “முதலில் சுடுகாட்டிற்குச் செல். அங்கு சமீபத்தில் இறந்து போனவரின் கல்லறை முன் நின்று உன் வாய்க்கு வந்தபடி கண்டபடி திட்டு, பழித்துப் பேசு” என்றார். சிஷ்யனும் குரு சொன்னபடியே சுடுகாட்டிற்குச் சென்று சமீபத்தில் இறந்தவரின் கல்லறை முன் நின்று வாய்க்குவந்தபடி வசை பாடினான்.

  “என்னப்பா கடவுளைத் திருப்திபடுத்த முடிந்ததா?” என்றார் குரு.“இல்லை குருவே” என்றான் சிஷ்யன்.“சரி… இப்போது மீண்டும் அங்கேயே செல். இம்முறை புகழாரம் பாடு. மனம் குளிரப் புகழ்ந்து பேசிவிட்டு வா” என்றார் குரு. அப்படியே செய்துவிட்டு நேராக ஆசிரமத்துக்கு வந்த சிஷ்யனிடம் “என்னப்பா இப்போதாவது கடவுளைத் திருப்திப்படுத்த முடிந்ததா?” என்றார் குரு. “இல்லை குருவே, எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை” என்றான் சிஷ்யன்.

“இதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளைத் திருப்திப்படுத்த முதலில் இறைத்தன்மையைத் திருப்திப்படுத்த வேண்டும். வார்த்தைகளுக்கு மயங்காமல், நிந்தனைகளுக்கு செவிசாய்க்காமல், புகழ்ச்சிக்கு அடிமையாகாமல் இறைத்தன்மையோடு பற்றற்று இருக்க வேண்டும். அதுதான் மனதை முழுமையாக வசீகரித்து திருப்திபடுத்தும்.

உள்ளுக்குள் இருக்கும் இறையை அமைதிப்படுத்தும். அப்போது உன் கடவுள் முழுமையாக திருப்திப்படுவார்“ என்றார் குரு.சிஷ்யன் குருவை அமைதியாகப் பார்த்துவிட்டு, ‘‘இப்போது எல்லாம் புரிந்தது குருவே” என்றான்.
                 

  - தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு