ஆதரவற்ற குழந்தைகளின் காவலன்!



சேவை

ஒருசிலருக்கு நிகழும் அசம்பாவித சம்பவம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடுகிறது. அதிலிருந்து மீண்டு வருவோரும் உண்டு, மாண்டுவிடுவோரும் உண்டு. துக்க சம்பவத்தை ஒரு நல்ல காரியத்தின் தொடக்கமாக்கி கடந்த ஆண்டிற்கான மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்திய தேசிய விருதான ராஜீவ் காந்தி மானவ் சேவா விருதைப் பெற்றிருக்கிறார் செழியன் ராமு. அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டவற்றை பார்ப்போம்…

‘‘சென்னையில் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த நான் எங்கள் வீட்டிற்கு ஒரே குழந்தை. மிகவும் பாசமான பெற்றோர்களின் அரவணைப்பில் வளர்ந்துவந்தேன். 1991ம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் எனது அன்பான பெற்றோர்களை இழந்து ‘சாப்பிட்டியா’ என கேட்க கூட ஆள் இல்லாமல் ஆதரவற்றோர் பட்டியலுக்கு தள்ளப்பட்டேன். குடும்பத்தை இழந்து தனியாக தெருவில் நின்றிருந்த நான் அச்சம்பவத்தை மறப்பதற்காகவும், நிலையில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் மனதில் அமைதி ஏற்படுத்துவதற்காகவும் ஊர் ஊராக பயணங்கள் மேற்கொண்டேன்.

அப்பா அம்மா இருக்கும்போது திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு அடிக்கடி வருவோம். இதனாலயே  இந்த இடம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. எல்லாத்தையும் இழந்த பிறகு இங்கு வந்தபோது மற்ற இடங்களைவிட அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பிச்சை எடுப்பதை பார்த்தேன்.

அனைத்தையும் இழந்த என்னைப் போன்றவர்கள் வாழ்வாதாரத்திற்காக இவ்வழியைத் தேர்ந்தெடுத்திருப்பது கண்டு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அப்பா அம்மா இல்லாத ஆதரவற்ற குழந்தைகளும், பெற்றோருடன் பிச்சை எடுக்கும் குழந்தைகளும் அதில் அடக்கம்.

ஆதரவற்ற குழந்தைகளுக்காக எந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் நிறுவாமல் என்னால் இயன்ற உதவிகளைச் செய்துவந்தேன். பின் 1993ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அங்கு சென்றேன். அப்போதுதான் கெர்ட் ஸ்ட்ரீல் என்பவரை சந்தித்தேன். இவரின் உந்துதலும் மற்றும் மஹாராஷ்டிராவில் பாதிக்கபட்டவர்கள் ஏற்படுத்திய தாக்கமும் என்னை குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்தை உருவாக்க செய்தது.

அப்படி 1994ம் ஆண்டு உருவானது  திருவண்ணாமலையில் இயங்கும் Terre des hommes Core எனும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தன்னார்வ தொண்டு அமைப்பு’’ என்ற செழியன் ராமு தற்போது கடலூர், சேலம், வேலூர் என தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் ஆறு மாவட்டங்களில் 16 இல்லங்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 5 சிறப்புப் பள்ளிகளும் இயங்குகின்றன.

ஆதரவற்ற குழந்தைகளைத் தத்து எடுத்து அவர்களுக்கு படிப்பு வழங்குவது, பிச்சை எடுக்கும் பெற்றோர்களுக்கு கல்வியின் மகத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குழந்தைகள் பாதுகாப்புக்கான ஹெல்ப் லைன் உருவாக்கியது, குழந்தைகளின் உரிமை பற்றி மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றால் திருவண்ணாமலை உட்பட ஆறு மாவட்டங்களில் குழந்தைகள் பிச்சை எடுப்பது குறைக்கபட்டுள்ளது.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிகள் ஏற்படுத்தி கல்வி கற்கச் செய்வது, நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளைப் பராமரிப்பது, பழங்குடிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவது போன்ற செயல்களை செய்துவருகிறோம்.

மேலும் பொருளாதார ரீதியில் யாரையும் சாராமல் இருப்பதற்கு  குழந்தைகளுக்கு எலக்ட்ரிக் ஒர்க், பிளம்பிங் ஒர்க், பேக்கரி பொருட்களைத் தயார் செய்தல், பட்டு நெய்தல் , எம்ப்ராய்டரி டிரெய்னிங், இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளைப் பல வருடங்களாக தொடர்ந்து வழங்கிவருகிறோம்.

எங்கள் இல்லத்தில் வளர்ந்த குழந்தைகள் பிசியோதெரபி, சைக்காலஜி, எஞ்சினியரிங் ஆகியவற்றை படித்து சிலர் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வேலை செய்து வருகின்றனர்’’ என்ற செழியன் தன்னுடைய இருபத்தைந்து வருட பயணத்தில் கண்ட மிகவும் சவாலான சம்பவங்களையும் தன்னுடைய அடுத்த இலக்கையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘திருவண்ணாமலைக்கு அருகே ஜவ்வாது மலையில் மரங்களால் சூழப்பட்டு பரந்து விரிந்த காடுகளாக உள்ளது. காடுகள் அதிகம் என்பதால் காட்டை சார்ந்து வாழும் பழங்குடி மக்களும் அதிகம். காட்டைத் தவிர்த்து பொருளாதார ரீதியில் வேறெதுவும் தெரியாததால் அம்மக்களின் அறியாமையை சேலம் பருத்திக் காட்டு ஏஜென்டுகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆதலால் சேலம் பருத்திக் காட்டு விவசாயத்திற்காக கொத்தடிமைகளாக ஜவ்வாது மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி குழந்தைகள் ஏற்றுமதியாக்கப்பட்டதை தடுப்பதுதான் எங்களுக்கு மிகவும் சவாலான காரியமாக இருந்தது.

பெற்றோர்களின் அனுமதியுடன் அரங்கேறும் இதுபோன்ற காரியங்களைக் களைவதற்கு ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தி அவர்களைக் குழந்தைகளுக்கு பாதுகாவலர்களாக மாற்றினோம்.

இதன் விளைவால் கொத்தடிமைகளாக இருந்த சுமார் 900 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த  குழந்தைத் தொழிளார்கள் இதன் மூலம் 80% மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் செயலை பிரதானமாகக் கொண்டுதான் எனக்கு தேசிய விருது கிடைத்தது. இருந்தாலும் குழந்தைத் தொழிலாளர்களை முற்றிலும் களைவது என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.

குழந்தைத் தொழிலாளர்களே இல்லாமல் செய்வது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் இல்லாமல் செய்ய அக்குழந்தைகளுக்கான உரிமையை மீட்டு பாதுகாப்பிற்கு உறுதி செய்த பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதை தான் எங்கள் அமைப்பின் லட்சியமாக கொண்டு செயல்படப்போகிறோம்’’ என எதிர்கால திட்டத்தை திட்டவட்டமாக கூறி  முடித்தார் ஆதரவற்ற குழந்தைகளின் காவலனான செழியன் ராமு.

- வெங்கட்