தேர்வு நேரத்திலும் உடற்பயிற்சி உற்சாகத்தைத் தரும்..!பொதுத்தேர்வு டிப்ஸ்

பொதுத்தேர்வு என்பதால் கண்விழித்துப் படித்துப் படித்து உடலும் மனமும் சோர்ந்துபோய் இருக்கும். உடல் ஆரோக்கியமாகவும் மனம் உற்சாகமாவும் இருக்க சிறிது உடற்பயிற்சி செய்தால் தைரியமாகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்’’ என்கிறார் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரபிரசாத். அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆவலாக இருக்கிறது. அப்படி நீண்டநேரம் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்பட்டுவிடும்.

அதனால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். கவனக்குறைவு, மீள்பார்வையின் தரம் குறைதல், இலக்கை எட்ட இயலாமை, எதைப் பார்த்தாலும் வெறுப்பு, கோபம், சுறுசுறுப்பைக் கொடுக்கும் கார்ட்டிசால் ( Cortisol) என்னும் என்சைம் குறைந்துபோதல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இவற்றிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஒரேவழி சின்னச் சின்ன உடற்பயிற்சிகள்தான் உதவும்.

காலை எழுந்ததும் சுமார் 15 நிமிடமாவது கை, கால்களை உயர்த்தி நீட்டி மடக்கி வார்ம்அப் செய்துகொள்ள வேண்டும். மொட்டை மாடியிலோ அல்லது வெளியிடத்திலோ சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவும், பிராணவாயுவின் அளவும் அதிகரிக்கும்.

மூளையின் நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறும். Norepinephrine and Endorphins அளவு அதிகரிப்பதால் மனஅழுத்தம் குறையும். சிறு உடற்பயிற்சிகூட Hippocampus வளர்ச்சிக்கு உதவிபுரிந்து நினைவாற்றலை வளர்க்கும். இதுதான் இந்த நேரத்தில் ஒரு மாணவருக்கு மிக முக்கியமானது. எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்றால், நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றைச் சொல்லலாம். இது மிகக் குறைந்த நேரத்தில் அதிக பலனைத் தரக்கூடியது.

தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுக்க நினைப்பவர்களுக்குப் பாட்டுக் கேட்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது. ஏனெனில், இந்த நேரம் பொன்னானது. இப்போது கஷ்டப்படுவது பின்னாளில் கூடுதல் பலனைத்தரும். உடல்நலனையும் பேணிவிட்டு தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தங்கள் மன ஒருமைப்பாட்டிலும், விடைகளை வெளிப்படுத்தும் திறனிலும், நினைவாற்றல் திறனிலும் மிகச் சிறந்த நேர்மறை மாற்றத்தைக் காணமுடியும் என்பது உறுதி.