பாலைவனத்தில் கிடைத்த பானகம்!வாசகர் கடிதம்

என்ன படிப்பது, எங்கு படிப்பது, எப்படி விண்ணப்பிப்பது என்று தவிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக பல்வேறு பட்டப்படிப்புகள் குறித்து தெளிவாக கொடுப்பதில் கல்வி-வேலை வழிகாட்டி எப்போதும் முத்திரை பதிக்கிறது. அதை உறுதி செய்யும் விதமாக ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு குறித்த விரிவான கட்டுரையை வழங்கியிருந்தது அருமை.           
  -ஏ.செந்தில்நாதன், திருச்செங்கோடு.
   
சுயதொழில் செய்ய விரும்புவோர் என்ன தொழில் செய்யலாம், எவ்வளவு முதலீடு செய்யலாம், எங்கு கடன் பெறலாம், எவ்வளவு கடன் பெறலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை பட்டியலிட்டு கொடுப்பது அருமை. பாக்குமட்டை பாக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.40,000 சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை விளக்கிய கட்டுரை அற்புதம்.
  -எம்.ஜெகன், மதுராந்தகம்.
 
தென்னக ரயில்வே பணி வாய்ப்பு, ஐ.டி.பி.ஐ. வங்கியில் எக்ஸிகியூட்டிவ் பணி வாய்ப்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள் வேலை தேடும் இளைஞர்களுக்கு பாலைவனத்தில் கிடைத்த பானகம் போன்றது. ஆர்வமும் முயற்சியும் இருந்தால் அரசுப் பணிகளில் சேர்வதற்கான முறையான வழிகாட்டுதலை வழங்குவதற்கு நன்றி. 
  -எஸ்.ராகவேந்திரன், ஈரோடு
 
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் குருக்ஷேத்திரா என்ற அமைப்பின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் நடத்திவரும் அறிவியல் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த புதிய கண்டுபிடிப்புகள் சூப்பர். வித்தியாசமான சிந்தனையோடு மக்களுக்கு பயன்படும் விதமாக மாணவர்கள் உருவாக்கிய கருவிகளைப் பற்றிய தகவல்கள் வியப்பில் ஆழ்த்தின.
  -கே.ராஜேஸ்வரி, வேளச்சேரி, சென்னை-42.