மருத்துவம் படிக்க நீட் தேர்வுக்கு தயாராகுங்க!



வழிகாட்டுதல்

பல பிரச்னைகளையும் விமர்சனங்களையும் கடந்து மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு கடந்த ஆண்டு நடைமுறைக்கும் வந்துவிட்டது. வேறு வழியே இல்லை என்று ஆகிவிட்ட நிலையில் வருகின்ற 2018-2019ம் கல்வியாண்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பும் வந்தாகிவிட்டது. விண்ணப்பிக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய, கவனிக்க வேண்டிய விவரங்களைப் பற்றி ஆர்.ஜி.ஆர். அகாடெமியின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான ஆர்.கோவிந்தராஜ் வழங்கும் வழிகாட்டுதலைப் பார்ப்போம்…

சிறந்த மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கும் நோக்குடன் Medical Council of India-வால் உருவாக்கப்பட்ட நுழைவுத் தேர்வுதான் National Eligibility Cum Entrance Test (NEET). இதைத்தான் தேசிய அளவில் தகுதி காண் நுழைவுத் தேர்வு என்று தமிழில் கூறப்படுகிறது. இந்தக் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் www.cbseneet.nic.in என்ற இணையதள முகவரி மூலம் பெறப்பட்டு வருகிறது. நுழைவுத் தேர்வு மே 6-ம் தேதி நடக்கவுள்ளது. தேர்வுக்கான நேரம் காலை 10 மணி முதல் 1 மணி வரை.

இந்தத் தேர்வின் மூலம் M.B.B.S மற்றும் B.D.S. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 15 சதவீத இடம் மத்திய அரசும் 85 சதவீத இடம் மாநில அரசின் கலந்தாய்வு மூலமும் நிரப்பப்படும். இதில் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளிலும், மாநில அரசின் 85%, மத்திய அரசின் 15% மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இடமும், அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படும். தேர்வு முடிவு வெளியானவுடன் மாணவர்கள் தனித்தனியாகக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டைப்போலவே இருக்கும். இதில் எந்தவித மாறுதல்களும் செய்யப்படவில்லை. இந்தத் தேர்வானது Central Board of Secondary Education (CBSE) ஆல் நடத்தப்படுகிறது. இந்தப் பாடத்திட்டத்தில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பில் பயிலும் இயற்பியல், வேதி
யியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட வினாக்கள் தலா 45 கேட்கப்படும். சரியான விடையாக இருந்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்
படும். தவறான விடையாக இருந்தால் 1 மதிப்பெண் கழிக்கப்படும். மாணவர்கள் பதில் அளிக்காதபட்சத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது. மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.

பிளஸ்1 வகுப்பிலிருந்து 50 சதவிகிதக் கேள்விகளும், பிளஸ்2 வகுப்பிலிருந்து 50 சதவிகிதக் கேள்விகளும் கேட்கப்படும். அதனால் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளின் பாடத்தையும் நன்றாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.

Online-ல்  விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள்:

விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 10-ம் தேதி வரை வழங்கப்படும். தேர்வுக்கான கட்டணம் SC/ST பிரிவுக்கு ரூ.750, OBC/UR பிரிவுக்கு ரூ.1400 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் Online-ல் மட்டுமே பெற முடியும். அதற்கான இணையதள முகவரி www.cbseneet.nic.in. மாணவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் Information Bulletin எனப்படும் தகவல் அறிக்கையை முழுவதுமாகப் படித்து தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இத்தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறைகள் மற்றும் பின்பற்றக்கூடிய / பின்பற்றக்கூடாத அனைத்து விஷயங்களும் அவ்வறிக்கையில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் முன் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :

1. ஆதார் அட்டையில் மாணவரின் பெயரும், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் கொடுக்கப்பட்ட பெயரும்
சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
2. அகில இந்திய ஒதுக்கீட்டில் (15%) கலந்துகொள்ளும் மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவராக இருந்தால் OBC-NCL என்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
3. மாணவரின் புகைப்படம் (Passport-size) 3.5 cm அகலமும், 4.5 cm உயரமும் உள்ளபடி  அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், அப்புகைப்படத்தில்
பெயரும், போட்டோ எடுக்கப்பட்ட தேதியும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
4. புகைப்படத்தின் Background வெள்ளை நிறமாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
5. புகைப்படத்தின் File size 10 kb முதல் 100 kb-க்குள்ளும் File Format JPEG-யிலும்  இருக்க வேண்டும்.
6. மாணவரின் கையெழுத்தும் 3Kb முதல் 20Kbக்குள் இருக்குமாறு JPEG Format-ல் ஸ்கேன் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும். 
7. தொலைபேசி மற்றும் இ-மெயில் முகவரி கண்டிப்பாக மாணவருக்கு இருக்கும்படி
பார்த்துக்கொள்ளவும்.

விண்ணப்பம் பூர்த்தி செய்வது நான்கு படிகளை உள்ளடக்கியதாக உள்ளது. முதல் படியாக மாணவரின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து. அதைத் தொடர்ந்து அவர் தேர்வு எழுதுவதற்கான மொழியைத் தேர்வு செய்து, தேர்வு எழுதும் மையத்தைத் தேர்ந்தெடுத்து, 10, 11 மற்றும் +2 வகுப்பு சம்பந்தப்பட்ட தகவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அப்போது விண்ணப்ப ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் கிடைக்கும். அடுத்தபடியாக புகைப்படம் மற்றும் கையெழுத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் மிக முக்கியமானது, கட்டணத்தொகையைச் செலுத்த வேண்டியது.
இந்த இரண்டு படிநிலைகளை முடித்தபின் கட்டணம் செலுத்துவதற்காக மூன்று வழிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

(1) Credit card
(2) Debit card
(3) Net Banking. கணக்கு வைத்தவரின் விவரங்கள் கேட்கப்படும். முறையாகக் கொடுத்தால் தொகை செலுத்தியபின் பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தது என்று குறிப்பிட்டிருக்கும். கட்டணம் செலுத்திய பின் Confirmation Page-ஐ பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் கவனத்துக்கு…

* தேர்வு நேரம் காலை 10 மணி முதல் 1 மணி வரை என்ற காரணத்தினால் தேர்வு மையத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிடுவது நல்லது. காலை 9.30 மணிக்குப் பிறகு எந்த மாணவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆகையால் மாணவர்கள் இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

* எந்தப் பொருட்களையும் மறைத்துக் கொண்டு வரும்படியான ஆடைகளை அணிந்து வரக்கூடாது.

* ஆண்கள் அரைக்கை சட்டை அணிய வேண்டும். செருப்பு மட்டுமே அணிய வேண்டும்.

* தேர்வு அறைக்குள் நுழையும்போது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்ட அட்மிட் கார்டை காட்டவேண்டும். வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்கு ஒரு புகைப்படத்தை (PP) எடுத்து வரவேண்டும்.

* அட்மிட் கார்டு, புகைப்படம் தவிர வேறு எதையும் கொண்டு வரக்கூடாது.

* தேர்வு அறையில் தேர்வு எண் குறிப்பிடப்பட்ட இடத்தில்தான் அமர வேண்டும்.

* தேர்வு தொடங்கும்போதும் முடியும்போதும் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும். அத்துடன் வருகைப் பதிவேட்டிலும் கைரேகையை பதிவு செய்யவேண்டும்.

* தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடம் முன்னதாக சீலிடப்பட்ட தேர்வு வினாத்தாள் வழங்கப்படும்.

* அந்த புக்லெட்டில் முன்பக்கத்தில் தேர்வு எண், பெயர் உள்ளிட்ட விவரங்களை பால்பாயின்ட் பேனா மூலம் பூர்த்தி செய்யவேண்டும்.

* அறிவிப்பு வந்ததும் டெஸ்ட் புக்லெட்டை திறக்கலாம். விடைத்தாளை தனியே எடுக்க வேண்டும்.

* டெஸ்ட் புக்லெட்டில் உள்ள குறியீடும், விடைத்தாளில் உள்ள குறியீடும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மாற்றிக்
கொள்ளவும்.

* தேர்வு மையத்தில் வழங்கப்படும் நீலம் அல்லது கறுப்பு நிறப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* விடைத்தாளில் ஒரு கேள்விக்கு ஒரு பதிலை மட்டும்தான் நிரப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்படின் அக்கேள்விக்கு மதிப்பெண் வழங்கப்படாது.

* டெஸ்ட் புத்தகத்தில் ரஃப் ஒர்க் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* தேர்வு நேரம் முடிவதற்கு முன்னால் மாணவர்கள் வெளியே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* பென்சில் பாக்ஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், பவுச், அழிப்பான், ஸ்கேல், கால்குலேட்டர், பர்ஸ், பெல்ட், பேக், தொப்பி, ஹேர்கிளிப், தோடுகள், மூக்குத்தி, மோதிரம், சங்கிலி, வளையம், நெக்லஸ், டாலர், பிரேஸ்லெட், வாட்ச், ஷூக்கள், கேமிரா பேனா, பென்டிரைவ், மொபைல்போன் போன்றவற்றை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது.

- தோ.திருத்துவராஜ்