+1 வணிகவியலில் முழு மதிப்பெண் பெறும் வழிகள்!



+1 பொதுத் தேர்வு டிப்ஸ்

மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்து ஒரு வருட இடைவெளிக்குப் பின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவந்தனர். ஆனால், மாணவர்கள் நலன் கருதி பல்வேறு போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் இந்த ஆண்டு முதல் +1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதப்போகிறார்கள் என்ற நிலையில், ‘‘முதலில் மாணவர்கள் பொதுத்தேர்வு என்ற அச்சத்தை கைவிட வேண்டும். இது நமது எதிர்காலத்துக்கு முக்கியம் என்பதையும் இது நமது கடமை என்பதையும் உணர்ந்து பாடத்தை ஆர்வமும் தெளிவாக புரிந்துகொண்டு படித்தால் எந்த தேர்வானாலும் வெற்றி உறுதி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.’’ என்கிறார் விழுப்புரம் மாவட்டம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர் வ.எழிலன். அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்.

வணிகவியல் பாடம் என்பது மாணவர்கள் +1 வகுப்பில் இருந்து மட்டுமே முதன் முதலில் படிக்கத் தொடங்குவார்கள். இதற்குமுன் நீங்கள் வணிகவியல் பாடத்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, தொடங்கும்போதே அடித்தளம் சிறப்பாக அமைந்துவிட்டால் மேற்படிப்பு பயில்வதற்கு உங்களுக்கு எளிமையாக என்பதை மனதில் கொண்டு பாடத்தை புரிந்து படிக்க வேண்டும்.

சிறந்த தொடக்கமே பாதி வெற்றி என்பதுபோல் +1 வகுப்பை சிறப்பாகத் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் 100/100 உறுதி. வணிகவியல் பாடம் என்பது கடினமான பாடம் ஒன்று கிடையாது. நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் வணிகம் என்ற வார்த்தையோடு தொடர்பில் இருக்கிறோம். எனவே, வணிகம் பற்றி படிப்பதுதான் வணிகவியல் பாடமாகும். எனவே, நடைமுறை வாழ்க்கையோடு பாடத்தை தொடர்புபடுத்தி படித்தால் வணிகவியல் பாடத்தில் 100/100 உறுதி.

வினாத்தாள் வடிவமைப்பு (Blue print) ஏதும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படவில்லை. எவ்வாறு வினாக்கள் கேட்கப்படுகிறது என்று பார்ப்போம்.

பகுதி - 1

ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 20 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவை அனைத்தும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக என்ற அடிப்படையில் கேட்கப்படுகின்றன. இதில் பாடத்தின் பின்னால் உள்ள வினாக்களோடு பாடத்தின்  உள் இருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. அனைத்துக் பாடங்களையும் முழுமையாக புரிந்துகொண்டு படித்தால் ஒரு மதிப்பெண் வினாக்களை சிறப்பாக எதிர்கொண்டு 20 மதிப்பெண்கள் பெற்றுவிட முடியும். (வினாக்கள் 1-20)

பகுதி - 2

2 மதிப்பெண் வினாக்கள் 10 வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் ஏழு வினாக்கள் விடையளிக்க வேண்டும். இதில் 21 ஆம் எண் வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். 2 மதிப்பெண் வினாக்களுக்கு 2 points எழுதினால் போதுமானது. இதில் பெரும்பாலும் பாடத்தில் பின்னால் உள்ள வினாக்களே கேட்கப்படுகின்றன. எனவே, புத்தகத்தின் பின்னால் உள்ள வினாக்களை முழுமையாக படித்தால் இந்த பகுதியில் முழுமதிப்பெண் பெற்றுவிட முடியும். (வினா எண்: 21-30)

பகுதி - 3

3 மதிப்பெண் வினாக்கள் 10 கேட்கப்படும். இவற்றில் ஏழு வினாக்களுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது. இதில் 31-ம் எண் வினாவிற்கு கட்டாயம் விடையளிக்கவும். இந்தப் பிரிவிலும் பாடத்தின் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் வினாக்களே கேட்கப்படுகின்றன. அவற்றை மட்டும் படித்தால் இந்தப் பிரிவிலும் முழுமதிப்பெண் பெற முடியும். (வினா எண்: 31-40)

பகுதி - 4

5 மதிப்பெண் வினாக்கள் 7 கேட்கப்படும். இதில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். இவை அனைத்தும் ‘அல்லது‘ அடிப்படையில் கேட்கப்படும் (வினா எண்: 41-47)பெரும்பாலும் 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் அளவைப் பொறுத்து அதிக அளவில் கேட்கப்படுகின்றன. எனவே, அந்த அடிப்படையில் பெரிய அளவில் உள்ள பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
உனது சிந்தனைக்கும் செயலுக்கும் இடையே உள்ள தூரம்தான் உனக்கும் வெற்றிக்கும் உள்ள தூரம். எனவே, சிந்திப்பதை உடனே செயல்படுத்தி தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.