கிரேட் சல்யூட்!



வாசகர் கடிதம்

செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து சரியான தருணத்தில் வெளியிடுவது தான் கல்வி-வேலை வழிகாட்டி இதழின் டிரேடு மார்க் முத்திரை. அவ்வகையில் தமிழ் மாணவர்களின் கல்வித்தரத்தை பற்றிய கட்டுரை மிகத் தெளிவாகவும் விரிவாகவும் அலசுகிறது. இவ்வாய்வின் முடிவுகளை ஆறுதல் தரும் முடிவுகள் மற்றும் வருத்தம் தரும் முடிவுகள் என பகுத்து வருத்தம் தரும் முடிவுகளைச் சரிசெய்ய கல்வி நிபுணர்களின் ஆலோசனைகள் என அற்புதமான கட்டமைப்பில் உருவாக்கிய இக்கட்டுரையின் நேர்த்தி அருமை.
  -ஆர்.ஜெகன்னாதன், சங்கரன்கோவில்.
 
தொடராக வெளிவரும் சுயதொழில் முனைவு குறித்த வழிகாட்டும் கட்டுரைகளின் தொடர்ச்சியான ‘ஸ்டேஷனரி கடை வைக்கலாம் மாதம் ரூ.25,000 சம்பாதிக்கலாம்’ எனும் கட்டுரை அற்புதம். வேலையில்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்களை சுயதொழில் பக்கம் ஈர்க்கும் விதமாக இருந்தது. பல சிறந்த தொழில்முனைவோர்களை உருவாக்கிய னிவாசனின் நேர்காணலாகக் கொடுத்தது சிறப்பு. இளைஞர்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களைக் கேள்விகளாகத் தொகுத்து நிபுணரின் ஆலோசனைகள் பெறச் செய்த விதம் பாராட்டுதலுக்குரியது.
  -எம்.ஜெயசீலன், மார்த்தாண்டம்.
 
தன் தாத்தாவை இழந்து தான் அடைந்த துன்பம் இப்பூவுலகில் யாரும் அடையக்கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு ஹார்ட் அட்டாக்குக்கு புதிய கருவி கண்டுபிடித்த தமிழ் மாணவனின்  முயற்சி மகத்தானது. அதற்காக தேசிய விருது கிடைத்திருப்பது என்பது பெருமைகுரிய விஷயம். பிரச்னைகள்தான் எப்போதும் மனிதகுலத்தை முழுமையான தீர்வை நோக்கி நகர்த்துகிறது என்ற கூற்றை நிரூபிப்பதாக உள்ளது சைலன்ட் ஹார்ட் அட்டாக்கிற்கு தீர்வு கண்ட சாதனை மாணவன் குறித்த கட்டுரை.
  -எஸ்.குணசேகர், வேலூர். 
 
எழுத்தறிவிப்பவனே இறைவன் ஆவான் எனும் சான்றோர் கூற்றை நிரூபணமாக்கும் விதமாக ‘மாணவர்களின் தனித்திறனை மெருகேற்றும் ஆசிரியர்‘ என்ற கட்டுரை அமைந்திருந்தது. நாளைய வரலாற்றைப் படைக்கவிருக்கும் சமூகம் சிறந்த அறிவுத் தேடல்களையும்,  மேன்மை பொருந்திய மனிதப் பண்புகளையும் கொண்டதாக அமைவதில் ஆசிரியர்கள் பங்குதான் அதிகம். அப்பொறுப்பினைத் தட்டிக்கழிக்காமல் செவ்வனே செய்திருக்கும் னிவாசன் போன்ற ஆசிரியர்களுக்கு கிரேட் சல்யூட்!
  -கே. நந்தகுமார், கம்பம்.