சட்டப்படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு CLAT-2018



நுழைவுத் தேர்வு

இந்தியா முழுவதும் உள்ள 19 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 5 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பும் (Under Graduate Program), ஒரு ஆண்டு முதுநிலை படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்பட்டப்படிப்புகளில் சேர தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்யும் பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு கொச்சியில் உள்ள ‘நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்டு லீகல் ஸ்டடிஸ்’ (National University of Advanced Legal Studies) நடத்தவுள்ளது.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, போபால், ஜோத்பூர், காந்திநகர், ரெய்ப்பூர், லக்னோ, பாட்டியாலா, பாட்னா, கொச்சி, கட்டாக், ராஞ்சி, கவுஹாத்தி, விசாகப்பட்டினம், திருச்சி, அவுரங்காபாத், நாக்பூர் ஆகிய இடங்களில் உள்ளன.

கல்வித்தகுதி: இளநிலைச் சட்டப்படிப்புகளான 5 ஆண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் பட்டப்படிப்புகளான B.A.LLB., (Hons), B.Sc.,LLB.,(Hons), BBA (LLB), B.Sc.LLB (Hons), B.Com., (LLB) ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் +2-ல் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், என்.ஆர்.ஐ, என்.ஆர்.ஐ ஸ்பான்சர் பிரிவினர் குறைந்தது 45 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தது 40 விழுக்காடும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் 20 வயதிற்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 22 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தற்போது +2 படித்துக் கொண்டுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஒரு ஆண்டு படிப்பான போஸ்ட் கிராஜூவேட் (Post Graduate) LLM படிப்பிற்கு விண்ணப்பிக்க, LLB அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பை முடித்திருந்து பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், என்.ஆர்.ஐ., என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் பிரிவினர் குறைந்தது 55 விழுக்காடும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தது 50 விழுக்காடும் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். இறுதி ஆண்டுத் தேர்வை எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: இத்தேர்வில் ஆங்கிலம், காம்பிரிஹென்சன், பொது அறிவு, தற்கால நிகழ்வுகள், அடிப்படைக் கணிதம், சட்ட நுண்ணறிவு, லாஜிக்கல் ரீசனிங் ஆகிய தலைப்புகளில் சரியான விடையைத் தேர்வு செய்யும் (அப்ஜக்டிவ் டைப்) முறையிலான வினாக்கள் இருக்கும்.இத்தேர்வில் ஆங்கிலம்/வெர்பல் எபிலிட்டியில் 40, கணிதம் (குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்) 20, லாஜிக்கல் ரீசனிங் 40, பொது அறிவு 50, லீகல் ஆப்டிடியூட் 50 என மொத்தம் 200 வினாக்கள் இருக்கும். சரியான விடைக்கு 1 மதிப்பெண் தரப்படும். தவறான விடைக்கு 1/4 மதிப்பெண் குறையும். ஆன்லைன் தேர்வு 2 மணி நேரம் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.clat.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.4,000.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2018
மேலும் விவரங்களுக்கு www.clat.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.