உயிரி தொழில்நுட்பத்தில் Ph.D படிக்க BET 2018 தகுதித் தேர்வு!



தகுதித் தேர்வு

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினரால்  வழங்கப்படும் உயிரி தொழில்நுட்பத்திற்கான  ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்புக்கான அறிவிப்பு வெளியாகி யுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!வளரும் நாடுகளின் பட்டியலில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியில் மிகுந்த முனைப்பு காட்டிவருகிறது.

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சி ஏற்படுத்திட  இத்துறைகளில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசால் வழங்கப்படுவதே இவ்வாய்ப்பு.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையினரால் ஒவ்வொரு ஆண்டும் இந்த டி.பி.டி. ஜூனீயர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (Department of Biotechnology - DBT-Junior Reserch Fellowship) வழங்கப்பட்டுவருகின்றது. அதன்படி இந்த ஆண்டு ஃபெல்லோஷிப் வழங்குவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த ஜனவரி 2ம் தேதி தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bcil.nic-ல் வெளியிட்டது இந்திய அரசு. இ்தில் வெற்றி பெறுபவர்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பிஎச்.டி படிப்பை மேற்கொள்ளலாம்.

கல்வித்தகுதி: இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இ்த்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் முதுநிலை பயோடெக்னாலஜியில் எம்.எஸ்சி. அல்லது எம்.டெக் அல்லது எம்.வி.எஸ்சி படித்திருத்தல் அவசியம். மேலும் எம்.எஸ்சி நியூரோசயின்ஸ், எம்.எஸ்சி மாலிகுலர் அண்ட் ஹியூமன் ஜெனிடிக்ஸ், எம்.எஸ்சி பயோ இன்ஃபர்மேடிக்ஸ், எம்.டெக் பயோ பிராசஸ் டெக்னாலஜி மற்றும் இளநிலை பயோ டெக்னாலஜியில் பி.டெக் அல்லது பி.இ. படித்திருப்பவர்களும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பி.இ.  பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண் தகுதி: சரியான கல்வித் தகுதியோடு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அந்தந்த பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களையோ அல்லது அதற்கு இணையான கிரேடையோ பெற்றிருத்தல் வேண்டும். மேலும் எஸ்.சி / எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 55% மதிப்பெண்களைக் கொண்டிருத்தல் அவசியம்.

வயதுவரம்பு: பொதுப் பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கடைசி நாளான பிப்ரவரி 5ம் தேதி அன்றின்படி 28 வயதிற்குள் இருத்தல் வேண்டும். மேலும் எஸ்.சி / எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து வருட வயதுத் தளர்வும், மற்றும்  ஓ.பி.சி மாணவர்களுக்கு மூன்று வருட வயதுத் தளர்வும்  வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  http://www.bcil.nic  என்ற இணையதளத்தை அணுகி தங்கள் சான்றிதழ்களையும் ஆவணங்களையும் பதிவேற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்தி ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்.  எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் விதம்: ஆய்வுசெய்ய முனைப்பும் சரியான கல்வித் தகுதியும் கொண்டு விண்ணப்பிப்பவர்களுக்குக் கணினி சார்ந்த பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு வைக்கப்படும். இத்தகுதித் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்கிங் வரிசையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் விண்ணப்பிப்பவர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து நகரங்களில் சென்டர் அமைக்கப்பட்டு இத்தகுதித் தேர்வானது  நடத்தப்படும்.

முக்கிய தேதிகள்: உயிரித் தொழில்நுட்பத் துறையில் புதுப் புது ஆய்வுகளை மேற்கொண்டு சாதிக்க விரும்பும் மாணவர்கள் தனது விண்ணப்பப் படிவத்தை பிப்ரவரி 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்படிப் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மார்ச் 18ம் தேதி பயோடெக்னாலஜி தகுதித்தேர்வு வைக்கப்பட்டு ஏப்ரல் 27ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு http://www.bcil.nic என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்,
படம்: ஏ.டி.தமிழ்வாணன், மாடல்: திவ்யா குமார்