மாணவர்களின் தனித்திறனை மெருகேற்றும் ஆசிரியர்!சேவை

எழுத்தறிவிப்பவன் இறைவன் ஆவான் என்பதை உண்மையாக்கி, தொழில்நுட்பம் தொடங்கி பொது சேவை வரை பள்ளிப் பிள்ளைகளை மெருகேற்றிவருகிறார் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் சாலைஅகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் ஸ்ரீனிவாசன்.

வகுப்பறைக் கற்றலில் புதுமை புகுத்தியதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் 2007 ஆம் ஆண்டு விருது, சிறந்த கணினி பயன்பாட்டுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 2010ஆம் ஆண்டு சான்றிதழ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சார்பில் அறிவியல் இயக்கப் பார்வையில் 2012 ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியர் விருது, எனத் தன்னலம் கருதாத தலைமுறையை உருவாக்கும் ஸ்ரீனிவாசனின் விருதுகள் பட்டியல் நீள்கிறது. எங்கிருந்து தொடங்கியது இவரின் சேவைப்பணி என்பதை நம்மோடு பகிர்ந்துகொண்டார் ஸ்ரீனிவாசன்.

‘‘இப்பணியின் தொடக்கம் நெடிய பயணத்தை உடையது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் புராஜெக்ட் பேஸ்டு லேர்னிங் என்ற பயிற்சிக்காக 2011-ம் ஆண்டு சென்றிருந்தபோது டி.எஃப்.சி. குறித்து நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. ஆனால், பள்ளி அளவிலான ஒரு பிரச்னையைத் தேர்ந்தெடுத்து, அதை மாணவர்களே எப்படித் தீர்வு காண வேண்டும் என்பதை அப்பயிற்சியின் வாயிலாக அறிந்துகொண்டேன்.

We Too Are Traffic Police என்ற I Can School Challenge-ஐ எடுத்துக்கொண்டு மாணவர்கள் சாலையை ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு எவ்வாறு கவனமாகக் கடக்கலாம் என்பதற்கு ஒரு செயல்திட்டம் தயாரித்தோம். மாணவர்களைக் கொண்டே STOP போர்டு தயாரித்து சாலையின் இருபுறமும் காண்பித்து போக்குவரத்தை நிறுத்தி சாலையை விபத்தின்றி கடக்க வைத்தோம். ஆனால் அதைச் சரியான முறையில் ஆவணப்படுத்துவதில் கோட்டை விட்டோம்!

மீண்டும் முயற்சியைக் கைவிடாமல் 2013-ம் ஆண்டு ‘தமிழிலும் எழுதுவோம்! தரணியைக் கலக்குவோம்!’ என்ற செயல்திட்டத்தை எடுத்துக்கொண்டு பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள அனைத்துக் கணினிகளையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து, மாணவர்களை NHM WRITER கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய வைத்தோம்.

இம்முறை ஆவணப்படுத்துதலில் பிழை ஏதும் இல்லை. ஆனால் வீடியோவின் வடிவத்தில் வந்தது பிரச்னை! அதாவது AVI, MP4, MPEG, MOV இவற்றில் ஏதாவது ஒரு வடிவத்தில் கேட்டார்கள். நாங்களோ WMV வடிவத்தில் கொடுத்ததால் அது ஓடவில்லை.

விடுவோமா நாங்கள்? அடுத்த 2014-ம் ஆண்டு ‘மூங்கில் முள்ளால் வேலி! கவலைகள் இனிமேல் காலி!’ என்ற செயல்திட்டத்தை எடுத்து, ‘‘தானே” புயலால் கீழே விழுந்துவிட்ட பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவர்களைக்கொண்டே மூங்கில் முள்ளால் வேலி அமைத்தோம்!!’’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார் ஸ்ரீனிவாசன்.

மேலும் அவர், ‘‘அடுத்து வீடியோ, பவர் பாயின்ட் செய்யாமல் புகைப்படக் கதை தயாரித்தோம். சொல்லவந்த கருத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டது. 2015-ம் ஆண்டு நான் சோர்ந்து போயிருந்த வேளையில், எங்கள் மாணவர்கள் முழுமையாகக் களத்தில் இறங்கினார்கள்.

சுண்ணக்கட்டியின் தூசால் ஆஸ்துமா நோயாளியாகி அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த என் வேதனைக்கும், தினம் தினம் கரும்பலகையை அழிக்கும்போது மாணவர்களுக்கு ஏற்படும் தும்மல், இருமலுக்கு விடைகாணும் பொருட்டு, ‘Say Bye To Chalkpiece Dust!’ என்ற செயல் திட்டத்தைச் செய்தார்கள்!

ஆரம்பத்தில் கொட்டாங்குச்சியில் சாக்கை கட்டி கரும்பலகையை அழித்தோம்! ஒவ்வொருமுறையும் சாக்கை அவிழ்க்காமல் இருக்க, வீணான பிளாஸ்டிக் குளிர்பான பாட்டிலை இரண்டாக வெட்டி அடிப்பகுதியை PEN STAND ஆகவும், மூடியுடன் இருக்கும் மேல்பகுதி அழிப்பான் செய்யவும் பயன்படுத்தினோம். இப்போது சாக்கை அவிழ்க்காமல், குளிர்பான பாட்டிலின் மூடியைத் திறந்து சுண்ணக்கட்டித் தூசுகளை வெளியேற்றுவது சுலபமாக இருந்தது.

கரும்பலகையை இன்னும் சுத்தமாக அழிக்கும் பொருட்டு உள்ளே ஸ்பாஞ் வைத்தோம். அது மேல்புறத்தில் இறுக்கமாக இருப்பதற்காகக் குச்சிகளை உடைத்து கூட்டல் குறி வடிவத்தில் இடையில் செருகினோம். இவை அனைத்தையும் எங்கள் மாணவர்களே முயன்று தவறி மீண்டும் முயற்சித்து இறுதி வடிவம் கொடுத்தார்கள்! சுண்ணக்கட்டி தூசுக்கு விடை கொடுத்தார்கள்!!

ஐ.சி.டி. மட்டும் இல்லையென்றால் இந்த வாய்ப்பு எனக்கு கிட்டி இருக்குமா? தெரியாது! கிராமப்புற ஏழை மாணவர்களின் வகுப்பறைக் கற்றலில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஐ.சி.டி மூலம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமும், முயற்சிகளும் உடையவன் என்பதால் பெரும்பாலும் புராஜக்டர் மூலமே கற்றல் நடக்கும். தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் மாணவர்களே செய்வார்கள்!’’ என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்.

மாணவர்களின் தனித்திறனைக் கண்டு பெருமிதம் கொள்ளும் ஆசிரியர் ஸ்ரீனிவாசன் மேலும் தொடர்ந்தார். ‘‘அடிப்படைக் கணினி அறிவை எங்கள் பள்ளிப் பிள்ளைகள் அனைவரும் அறிவர். எட்டாம் வகுப்பு மாணவர்கள் கணினி பழுது நீக்குதல், ஆபரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வார்கள்!! எனது சொந்தச் செலவில் மூன்று, பள்ளிச் செலவில் மூன்று என மொத்தம் ஆறு மேசைக் கணினிகளும், அது மட்டும் இல்லாமல் ஐந்து மடிக்கணினிகளும் சேர்த்து மொத்தம் பதினோரு கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. எங்கள் ஒன்றிய அளவில் கணினியில் ஏற்படும் பழுதுகளை எங்கள் பள்ளிக்கு எடுத்து வந்து எங்கள்பள்ளிப் பிள்ளைகளிடமே இலவசமாகச் சரிசெய்து எடுத்துச் சென்றுவிடுவார்கள்!

Collaborative Learning Through Connecting Class Room மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் பள்ளிப்பிள்ளைகளின் திறமைகளை மற்றவர்கள் கண்டு வியக்கவும், அவர்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் இதைப் பயன்படுத்தி வருகிறோம். இப்பணிகளில் நண்பர்கள் திலீப், கருணைதாஸ், அன்பழகன், நேசமணி ஆகியோரின் உதவிகளும், ஒத்துழைப்பும் மறக்க முடியாதவை’’ என்று நெகிழ்ச்சியோடு பதிவு செய்தார்.

‘‘ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ் மனப்பாடப் பகுதிகளை ராகத்தோடு பாடி ஒலி ஒளி வடிவில் எங்கள் பள்ளிப்பிள்ளைகளே தயாரித்துள்ளார்கள். அவர்களின் படைப்புகள் youtube-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழில் குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதுவதும், நற்சிந்தனைகளை வளர்க்கும் பாடல்களை எழுதுவதும் என் பொழுதுபோக்கு. ஆங்கிலத்தில் உள்ள மனப்பாடப் பகுதிகளைத் தமிழ்ப்பாடலாக மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். அவற்றை என் வலைப்பூவில் www.vasanseenu.blogspot.com காணலாம். கணக்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எளிமையான வழிமுறைகளைக் வீடியோக்களாகத் தயாரித்துள்ளேன்.

வாய்ப்பாட்டினை எளிமையாகக் கற்கும்பொருட்டு பிளாஷ் அனிமேஷனில் 20 வாய்ப்பாடுகளைக் குறுந்தகடாகத் தயாரித்து வலைப்பூவில் இலவசப் பதிவிறக்க வசதியுடன் வெளியிட்டுள்ளேன். அறிவியல் ஆர்வத்தினை வளர்க்கும் பொருட்டு இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்தி அறிவியல் சோதனைகள் மேற்கொள்வார்கள்.

National Award For School Teachers Using Ict For Innovation In Educationக்காக 2012 ஆம் ஆண்டு மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு போட்டியாளர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி. 2015-ம் ஆண்டு DFC-ல் TOP-20ல் எங்கள் பள்ளியும் இடம் பிடித்துள்ளது என்பதை நினைக்கும்போது எனது மாணவர்களைக் கண்டு வியக்கிறேன்’’ என்கிறார் பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீனிவாசன்.இவரைப்போன்ற ஆசிரியர்கள்  இன்னும் பல பேர் உருவானால் அரசின் உதவி இல்லாமலே மாணவர்களின் கல்வி செம்மையாகும் என்பதில் சந்தேகமில்லை.

- எம்.நாகமணி