நல்ல விஷயம் 4



வளாகம்
 
அறிய வேண்டிய மனிதர் ஹோமி ஜஹாங்கீர் பாபா

இந்திய அணு இயற்பியலின்  தந்தை என உலக மக்களால் வர்ணிக்கப்படும் ஹோமி ஜே பாபா 1909ம் ஆண்டு அக்டோபர் 30 ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பம்பாய் நகரில் பிறந்தவர். இவர் தன் பள்ளிப்படிப்பு மற்றும் இளநிலைப் படிப்பை பம்பாயிலும் உயர்கல்வியை இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.

‘அப்சார்ப்ஷன் ஆஃப் காஸ்மிக் ரேய்ஸ்’எனும் இயற்பியல் கோட்பாட்டை 1933ம் ஆண்டு வகுத்து அணு இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் இக்கண்டுபிடிப்புக்காக ‘ஐசக் நியூட்டன் ஸ்டூடண்ட்ஷிப்’ என்ற விருதை வென்றார்.  பின் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சில காலம் எலக்ட்ரான் சிதறல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டதால் அந்தத் துறைக்கு இவர் பெயர்வைத்து அழகு பார்த்தனர் இங்கிலாந்து ஆராய்சியாளர்கள்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் இந்தியா வந்த இவர் இந்திய இயற்பியலாளர் சர் சிவி.ராமன் தலைமையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் இயற்பியலாளராகப்  பணியாற்றினார்.

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் மற்றும் அடாமிக் எனர்ஜி ரிசர்ச் சென்டர் ஆகிய அணு ஆராய்ச்சி மையங்களை  உருவாக்கிய இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருது அளித்து பெருமைப்படுத்தியுள்ளது. இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Homi_J._Bhabha

பார்க்க வேண்டிய இடம் - தமுக்கம் அரண்மனை

தமுக்கம் என்றால் கோடைக்காலத்தில் இளைப்பாறும் இடம் அல்லது வசந்த மாளிகை என்று பொருள்.  மதுரையின் வடகிழக்கில் அமைந்துள்ள தமுக்கம் அரண்மனையானது கி.பி. 1670ம் ஆண்டு நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.  நாயக்க மன்னர்களின் வம்சாவளிகளில் வந்த ராணி மங்கம்மாவின் கோடைக்கால மாளிகையாகப் பயன்படுத்தப்பட்ட இந்த அரண்மனையானது பின் கர்நாடக நவாபிடம் இருந்தது.

பின் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலமாகப் பயன்படுத்தப்பட்டு தற்போது காந்தி அருங்காட்சியகமாகக் காட்சியளிக்கிறது. 17ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை யானைப் போர் முதலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், அரச விழாக்களும் நடைபெற்ற தமுக்கம் மைதானம் இந்த அரண்மனையைச் சேர்ந்ததாகும். ராணி மங்கம்மாள் கடல் காற்று போன்ற காற்று வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக அரண்மனையின் பின்புறம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய ஏரி உருவாக்கப்பட்டது. அன்றைய ஏரி சுருங்கி தற்போது வண்டியூர் கண்மாயாக மாறி நிற்கிறது. மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Tamukkam_Palace

வாசிக்க வேண்டிய வலைத்தளம் - www.tntam.in

தமிழ்நாட்டு ஆசிரியர்களால் நடத்தப்படும் இத்தளமானது அன்றாடக் கல்விச் செய்திகளில் தொடங்கி பொதுச் செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள், நீதிமன்றச் செய்திகள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள், பாடத்திட்டங்கள் என பன்முகத்துடன் செயல்படுகிறது. மேலும், மாணவர்களுக்குப் பயன்படும் வலைத்தளங்களைப் பட்டியலிட்டிருப்பது அறிவோம் என்ற தலைப்பில் அவ்வப்போது வெளியாகும் அரசாணைகள்,  தகவல்கள் மற்றும் ஆண்ட்ராய்டு அப்பிளிகேஷன் குறித்த பதிவுகள் எனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் accident, scholarship, cps form-elementry, cps form-hss/hs, festival advance, form 16, higher edu-permission, lpc, mc fitness,medical certificate, ml application, passport-no-objection, pf-loan, probation form,scholarship,surrunder போன்ற சான்றிதழ், விண்ணப்பம், கடிதம் ஆகியவற்றின் மாதிரி படிவங்கள், பள்ளிகளுக்குப் பயன்படும் பாடல்கள் எனப் பள்ளி மாணவர்களுக்கு A to Z தேவையான அனைத்துச் செய்திகளையும் கொண்டு செயல்படுகிறது இத்தளம்.

படிக்க வேண்டிய புத்தகம் :நமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம்  மோகன் சுந்தரராஜன்

சர்வதேச அறிவியல் அரங்கில் மரபணு பற்றிய புதுப்புது வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் எழுந்து மரபணு ஒரு புதிராக இருந்து வருகிறது. அதே சமயம் இத்துறையின் முன்னேற்றங்களையும், சவால்களையும் அறிந்து வியக்கும் இவ்வேளையில், மரபணு பற்றிய தவறான எண்ணங்களைத் தவிர்க்கவேண்டியதும் நம் கடமையாகும். இதை மனதில் வைத்து தமிழ் மாணவர்களுக்காக மரபணு அறிவியலைத் தமிழ்மொழியில் அறிமுகப்படுத்துகிறார் இந்நூலின் ஆசிரியர் மற்றும் அறிவியல் எழுத்தாளர் மோகன் சுந்தரராஜன்.

 மனிதனின் உடலில் மரபணு செலுத்தும் ஆதிக்கம் குறித்து அறிவியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். மரபணுவின் தோற்றத்தில் தொடங்கி  தற்கால மரபணு தொழில்நுட்பம் வரை இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், மருத்துவத் துறையில் இதன் முன்னேற்றங்கள், இத்துறையினால் மனித குலத்தில் ஏற்பட்ட அசாத்திய சாதனைகள், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகள் என மரபணுவின் ஆதி முதல் அந்தம் வரை  விளக்கமான படங்களுடன்  அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய தமிழில் விவரிப்பதே இந்நூலின் தனிச்சிறப்பு.(வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600108. தொடர்புக்கு:044-25361039. விலை ரூ.150.)