மன ஆரோக்கியத்துக்கு ஈகோ பசி தீர வேண்டும்!



உளவியல் தொடர்
 
விமர்சனம் செய்பவர்களுக்கு வழி தெரியும், வாகனம் ஓட்டத் தெரியாது
  - கென்னெத் தினன் ­  ஈகோ மொழி

ஒரு நதியை நீந்தி, நடந்து, பறந்து என்று மூன்று விதமாக கடந்து செல்லமுடியும் என்று சொல்வார்கள். ஆனால், உறவுகளுடனான வாழ்க்கைப் பயணத்தில் எவ்விதமான சிக்கல்களுமின்றிக் கடந்து செல்ல ஈகோவைத் திறம்படக் கையாள்வதுதான் சிறந்த வழியாக இருந்துவருகிறது.

ஈகோவுடன் கைகோத்து நகரும் பயணத்தில் சுயமதிப்பை உயர்த்திக்கொள்ளும் வழிமுறைகள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம். சுயமதிப்பை உயர்த்திக்கொள்வது என்பது உணர்வுரீதியான கட்டமைப்பைக்கொண்டு உயர்த்திக்கொள்வது.

உணர்வுரீதியான கட்டமைப்புகள்தான் உறவுகளை மேம்படுத்தும் வல்லமை நிறைந்தவை. பரத்தும், ஆனந்தும் அண்ணன் தம்பிகள். பரத் மூத்தவன், ஆனந்த் இளையவன். பரத் படிப்பில் கில்லாடி. வகுப்பிலேயே மிகவும் புத்திசாலி. எல்லா தேர்வுகளிலும் முதல் மார்க் எடுப்பான். அதேநேரம், ஆனந்த் ஒரு சராசரியான மாணவன். பார்டரில் மார்க் எடுக்கக் கூடியவன்.

தெரிந்தோ தெரியாமலோ  பெற்றோர்கள் அடிக்கடி அவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டே இருப்பார்கள். பரத்தின் மார்க்கை குறிப்பிட்டுப் பாராட்டும் அதேநேரம், அதை ஆனந்தின் மார்க்குடன் ஒப்பிட்டு அவனை மட்டம் தட்டியவாறே பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த ஆரோக்கியமற்ற ஒப்பீடு ஆனந்தின் மனதிற்குள் ஒரு கசடுபோல் படியத் தொடங்கியது.

அது ஆனந்தின் ஈகோவை பாதிப்படையச் செய்து, அடக்கப்பட்ட ஈகோ நிலை கொண்டவனாக மாற்றியது. அதனாலேயே அவன் தாழ்வுமனப்பான்மை கொண்டவனாக மாறிப்போனான். இந்த நிலை தொடர, பெற்றோர்களிடமிருந்து கிடைக்கவேண்டிய கவனம், அனுதாபம், முக்கியத்துவம் போன்ற அடிப்படை எதிர்பார்ப்புகள் ஆனந்திற்கு கிடைக்காமலே போனது. 

ஆனந்திற்குள் அப்படியான ஓர் ‘உளவியல் எதிர்பார்ப்பு’ ஏக்கத்துடன் தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவனது பெற்றோர் அறிந்திருக்கவே இல்லை. அதுதான் பரிதாபம். அவர்கள்பாட்டுக்கு தேர்வுக்குத் தேர்வு ஆனந்தை பரிகசித்துக்கொண்டே இருந்தார்கள். ஒப்பீடுகளாலான விமர்சனமும் அதைக் கிண்டல் தொனியுடன் சொன்ன விதமும் பெரிய பாறைகளாக எதிர்பட்டு ஆனந்தின் ஈகோ கப்பலோடு மோதி உடைத்துச் சிதறடித்தது.

சில சமயம் விமர்சனத்தைப் பொறுக்க முடியாமல் ஆனந்த் கைவிரல்களை அழுத்தி மடக்கி கோபத்துடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயற்சிப்பான். ஆனால் அதையும் அவனது பெற்றோர்கள் அடக்கிவிட, சொல்ல வருவதைச் சொல்ல வழி தெரியாமல் அடங்கிப்போவான்.  விமர்சனங்களையும், அவமானங்களையும், கேலி கிண்டல்களையும் எதிர்கொள்ள வேறு வழிதெரியாமல் தனக்குள் விழுங்கிக் கொள்பவனாக மாறிப்போனான்.

அது மெல்லமெல்ல எதையும் எதிர்த்து நிற்க திராணியற்ற கோழையாக மாற்றியது. சிறிய அன்பும், அன்பான பாராட்டு வார்த்தைகளும் வெளிப்படுத்தி அரவணைத்திருக்க வேண்டிய பெற்றோர், காயப்படுத்திக் கொண்டே இருக்க, உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாதவனாக ஆனான் ஆனந்த். ஒரு நாள் வழக்கம்போல் பெற்றோர் விமர்சிக்க ஆனந்த் கைதட்டினான்…

தட்டினான்… தட்டினான்… தட்டிக்கொண்டே இருந்தான். அப்போதுதான் எங்கோ, எதுவோ தவறு என்று புரியவந்தது. அவனை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிப் போனபோது… காலம் கடந்துவிட்டிருந்தது. ஆனந்த் Insane ஆக (பைத்திய நிலை) இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஊரில் பாதிப்பேர் வீடுகளில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். ஆனந்த் Insane நிலையை ஏன் அடைய வேண்டும்? என்பதுதான்.

Insane நிலை ஒரு பிறழ்நிலை. தெளிவிற்கும் பிறழ்விற்குமான மெல்லிய வித்தியாசத்தில் நிகழ்வது. அழுத்தங்களால் தள்ளப்பட்டவன் நகர முடியாத எல்லைக்குச் சென்றதும் நிலைமாற வைக்கும் நிலை. காரணம், மன ஆரோக்கியம் கெட்டுப்போவதுதான்.

ஆரோக்கியமான வாழ்விற்கு நல்ல உடல்நிலை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நல்ல மனநிலையும் அவசியம். மனநிலை ஆரோக்கியமாக இருக்க ஈகோவின் பசி பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். காரணம், இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டது.

அன்புக்கு ஏங்கும் ஈகோவின் பசிக்கு சரியான தீனி கிடைக்காதவர்கள்தான் நிலைமாறி Insane ஆகவும், திறனற்றவர்களாகவும் மாறிப்போகிறார்கள். எப்போதும் தங்களுக்கான முக்கியத்துவம் கிடைக்காதபோதும், மறுக்கப்படும்போதும்தான் பலரும் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமானவர்களாக மாறிப்போவதை கவனித்திருக்கலாம்.

ஒரு மனிதன் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் ஆரோக்கிமான செயல்பாடு கொண்டவராக இருக்க, அவனுள் ஊற்றெடுக்கும் எதிர்ப்புகளான (ஈகோ பசி) பாராட்டு, முக்கியத்துவம், மரியாதை போன்றவை நிறைவேற்றப்பட்டவையாக இருக்கவேண்டும். உலக அளவில் உடல்ரீதியான நோயாளி களைவிட, உளரீதியான பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகள்தான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்குக் காரணம் அவர்களின் ஈகோ பசி நிறைவேற்றப்படாமலும், பசிக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவாறும் இருப்பதுதான். அதனால்தான், ஆரோக்கியமான உடல்நிலைக்கு எப்படி ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வோமோ, அதேபோல் ஈகோ பசிக்கு ஊட்டச்சத்து நிறைந்த செயல்பாடுகளை (சுயமதிப்பு திருப்தி கொள்ளுமாறு) மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், தாங்கள் மற்றவர்களால் மதிக்கப்படும் மனிதராகவும், தங்களது கண்ணியம் பாதுகாக்கப்பட்டவாறும் இருக்கவேண்டும் என்றே நினைத்திருப்பார்கள்.

அதுவே ஒவ்வொருவருக்கும் அடிப்படை நியாயமாக இருந்துகொண்டிருக்கிறது. தன்னிச்சையான உணர்வாகவே இருந்துகொண்டிருக்கிறது. ‘எனினும் ஏன் சிலரது எதிர்பார்ப்பு இடறிப்போகிறது?’, ‘ஏன் சிலர் உதாசீனப்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?’ , ‘ஏன் சிலர் மதிக்கப்படாதவர்களாக இருக்கிறார்கள்?’ என்று கேட்கத் தோன்றும்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் என்னவென்றால், தங்களது சுயமதிப்பையும், கண்ணியத்தையும் உணர்ந்து உயர்த்திக் கொள்ளும் முறையைப் பின்பற்றாமல் போவதுதான். தங்களது மனநலத்திற்கு ஈகோ பசியாற்றப்பட வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் போவதுதான். பசி உணர்வு ஏற்படத்தான் செய்கிறது.

பசித்தால் சாப்பிடவேண்டும் என்று நினைத்தால்தானே? அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப்போடுவதால் அதற்கான விலையைத் தருகிறார்கள்.வாழ்வின் நகர்வில் சுயமதிப்புகண்ணியத்தை எப்படி உயர்த்திக்கொள்வது?

அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து அடுத்த இதழில் பார்ப்போம்…

குரு சிஷ்யன் கதை

முழுக் கவனம் தேவை!

ஆசிரமத்தின் திண்ணையில் அமர்ந்து வானத்தைப் பார்த்தபடி ஏதோ யோசித்துக்கொண்டிருந்த சிஷ்யன் முகவாட்டத்துடன், “ஒரே குழப்பமாக இருக்கிறது குருவே?” என்றான்.ஆச்சரியத்துடன் பார்த்த குரு “அப்படி என்ன குழப்பம்? விவரமாகச் சொல்!” என்றார்.

“பக்கத்துத் தெருவில் வடநாட்டிலிருந்து ஒரு மடாதிபதி வந்திருக்கிறார். அவரைக் காண எல்லோரும் போகிறார்கள். நானும் போயிருந்தேன். அவர் பூஜைகள் செய்துவிட்டு, பிரசங்கம் செய்தார். அப்போது அங்கு குழுமியிருந்த பலரும், இறைவனையும் கவனிக்கவில்லை, மடாதிபதியின் பிரசங்கத்தையும்  கேட்கவில்லை. ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்.

யாரும் பக்தியுடனோ கவனத்துடனோ இருக்கவே இல்லை. எங்கும் விரும்பிச் செல்லும் மனிதர்கள் ஏன் கவனத்துடன் இருப்பதில்லை என்று நினைத்தேன், குழப்பமாக இருந்தது” என்றான் சிஷ்யன்.சிஷ்யன் சொன்னதைக் கேட்ட குரு, “நீயும் அப்படி இருந்துவிட்டு இங்குவந்து கேள்வி கேட்கிறாய்!” என்றார்.சிஷ்யன் தலையைத் தடவிக்கொண்டே, “இல்லை குருவே நான் பயபக்தியோடுதான் இருந்தேன்” என்றான்.

உடனே குரு, “அப்படியானால் சரி, நீ இந்தக் குவளையில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் கொள்.  கோயிலுக்குச் செல். கோயிலை இரண்டு முறை வலம் வா. அப்படி வரும்போது, உன் கையிலிருக்கும் குவளையிலிருந்து தண்ணீர் ஒரு துளிகூட கீழே சிந்தக்கூடாது” என்றார்.

“இதோ வந்துவிடுகிறேன்” என்றபடி  சிஷ்யன் ஆர்வமாகக் குவளையை எடுத்துக்கொண்டு போனான். கோயிலை இரண்டு முறை சுற்றிவிட்டு வந்தான்.வெற்றிக்களிப்போடு, “பாருங்கள் குருவே தண்ணீர் சிறிதும் சிந்தவே இல்லை” என்றான் சிஷ்யன்.“நல்லது, இப்போது சொல், அந்தக் கோயிலில் நீ யாரையாவது பார்த்தாயா? யாராவது யாருடனாவது பேசிக்கொண்டிருந்தார்களா? எத்தனை பேர் பக்தியுடன் இருந்தார்கள்?” என்றார் குரு.
“நான் எதையும் கவனிக்கவில்லை குருதேவா. என் கவனம் முழுவதும் குவளையின் மீதும், சிந்திவிடக்கூடாதே என்று தண்ணீரின் மீதுமே இருந்தது“ என்றான்.

“இதுதான் கவனிப்பு. கோயிலுக்கு மட்டுமல்ல, எங்குச் சென்றாலும் எதற்காக அந்த இடத்திற்குச் சென்றிருக்கிறோமோ, அதில் கவனத்தை முழுமையாய் வைத்திருக்க வேண்டும். சுற்றி நடப்பவற்றைக் கவனித்தால், கவனம் சிதறிப்போகும். கவனத்தை ஒருமுகப்படுத்தும்போதுதான் மனம் தெளிவடையும். மனம் தெளிவடையும்போதுதான் குழப்பங்கள் விலகும்” என்றார் குரு.சிஷ்யனுக்கு குழப்பம் விலகி தெளிவு பிறந்தது.

- தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு