புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை படைத்த தமிழக மாணவர்கள்!



சாதனை

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் அறிவியல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும், தேசிய புதிய கண்டுபிடிப்புக்கான அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

சிறுவர் முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு 2017ம் ஆண்டுக்கான விருது கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

இந்த விருதுக்காக இந்தியா முழுவதிலுமிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 65,000 ஆய்வுக் கட்டுரைகளில் 29 புதிய கண்டுபிடிப்புகள் மட்டுமே தேர்வானது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் விருது பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளும் அவற்றின் பயன்களையும் இனி பார்ப்போம்…

பெயர்    :     அபர்ணா சந்திரசேகர்,
கல்வி    :    4ம் வகுப்பு
பள்ளி    :     பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளி,
  மயிலாப்பூர், சென்னை.

கண்டுபிடிப்பு: எதிரிகள் மீது மயக்க மருந்து தெளிக்கும் கைக்கடிகாரம் (Watch with button for pungent spray on bullies)கண்டுபிடிப்பின் பயன்: குழந்தைகள், மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோரின் சுய பாதுகாப்புக்கானது.

அந்நியர்கள் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயலும்போது இதயத் துடிப்பு அதிகரித்து பயப்படும்போது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டம் மாறுபடும். இந்த மாறுபாடு சென்சார் மூலம் உணர்ந்து கைக்கடிகாரத்திலிருந்து ஒரு துர்நாற்றம் எதிராளியின் முகத்தில் தெளிக்கும். எதிராளி மயங்கிவிடுவார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லலாம்.

கண்டுபிடிக்க காரணம்: ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாறியபோது மொழி தெரியாமல், பாடம் புரியாமல்  சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் துன்புறுத்தப்பட்டேன். மொழி தெரியாமல் ஆசிரியைகளும் திட்டினர். அவர்களை என்னால் அடிக்கவோ, திட்டவோ முடியவில்லை.

ஆனால், அவர்கள் மீது கோபம் வந்தது. நாம் கையில் கட்டும் வாட்சின் மூலம் அவர்கள் முகத்தில் மருந்து தெளித்து அவர்களை மயக்கமடையச் செய்தால் என்ன என வந்த கோபம்தான் இந்தக் கைக்கடிகாரம் உருவாகக் காரணம்.எதிர்காலத் திட்டம்: இந்தக் கைக்கடிகாரத்தைத் தயாரித்து அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். விண்வெளி விஞ்ஞானி யாக வேண்டும்.

பெயர்    :     ஹர்சா அ.சத்பதி
கல்வி    :    10ம் வகுப்பு
பள்ளி    :     எம்.சி.சி மேல்நிலைப் பள்ளி,
        சேத்துப்பட்டு, சென்னை.

கண்டுபிடிப்பின் பெயர்: உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க பயன்படும் கருவி (Wearable Indicator to Ensure Body Hydration)கண்டுபிடிப்பின் பயன்: தன்னை மறந்து வேலையில் ஈடுபடுபவர்களும், வயதானவர்களும், குழந்தைகளும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் பல உடல்நலக் கோளாறு களுக்கும், நோய்களுக்கும் ஆளாகிறார்கள். குறைந்த அளவில் நீர் பற்றாக்குறை உடலில் ஏற்பட்டால்கூட உடனே நீர் அருந்த வேண்டும் என சமிக்ஞை மூலம் சுட்டிக்காட்டும் இந்தக் கருவியை அணிவதால் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்து நோய் வராமல் தடுக்கலாம்.

கண்டுபிடிப்பதற்கான காரணம்: நடைமுறை வாழ்க்கையில் சந்தித்த பலர் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டால் நோயில் விழுந்து அவதிப்படுவதைக் கேட்டபோது இதற்கொரு கருவி கண்டுபிடித்தால் என்ன எனத் தோன்றியது.

எதிர்காலத் திட்டம்: மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு உதவக்கூடிய பல கருவிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். அறுவைசிகிச்சை மருத்துவராக வேண்டும். டென்னிஸ், கவிதை, சமையல், இசை மற்றும் பாடல் கேட்பது விருப்பம். பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவற்றில் பாடுவது விருப்பம். அரபு மற்றும் ஜப்பானிய மொழிகளைக் கற்க வேண்டும்.

பெயர்    :     P.K.ராகுல்
கல்வி    :    10-ம் வகுப்பு
பள்ளி   : ஆதர்ஷ் வித்யாகேந்திரா, நாகர்கோவில்.

கண்டுபிடிப்பின் பெயர்: ‘முதியோருக்கான கூரறிவு மணிக்கட்டுப் பட்டை’ அல்லது ‘முதியோருக்கான ஸ்மார்ட் கைப் பட்டயம்’(Smart Wrist Band for Elderly)கண்டுபிடிப்பின் பயன்: வயதானவர்கள், முதியோர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களைக் குறைக்க உதவும் வகையில் இக்
கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள் கீழே விழுவதை அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கும் வகையிலும், தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளைக் கண்டறியும் வகையிலும், இதய நோயாளிகளின் நாடித்துடிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்க வேறுபாடுகளைக் கண்டறிய உதவும் வகையிலும் ‘அல்சைமர்’ என்னும் மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது வீடு மற்றும் குறிப்பிட்ட சுற்றுப்புறத்திலிருந்து தவறுதலாக வெளியேறினால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர காலங்களில் தேவைப்பட்டால் அருகில் இருப்போரின் கவனத்தை ஈர்க்க ‘பஸ்ஸர்’ஒலி எழுப்பும் வகையில் உள்ளது.

கண்டுபிடிப்பின் நோக்கம்: முதியோர்கள் காலம் தவறாமல் சரியான கால இடைவெளியில் பிறரின் உதவியின்றி அவர்களின் மருந்துகளை உட்கொள்வதற்கு. உதாரணமாக, காலையில் உட்கொள்ள வேண்டிய மாத்திரையைக் குறிக்க பச்சை நிற ஒளிரும் LED பல்பும், இரவு நீல நிற ஒளிரும் LED விளக்கும் சிறிய அளவில் பொருத்தப்பட்டுள்ளது.

எனவே, எளிதாக மருந்துகளை அடையாளம் கண்டறிய முடியும்.எதிர்காலத் திட்டம்: சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், பயன்பெறும் வகையில் குறைந்த பொருட்செலவில் பயனளிக்கும் வகையில் பல புதிய மற்றும் எளிய கருவிகளை உருவாக்க வேண்டும் என்பதே லட்சியம்.

பெயர்    :     சா. சிவசூர்யா
கல்வி    :    12-ம் வகுப்பு
பள்ளி    :     வேலம்மாள் மெட்ரிக்குலேஷன்
        மேல்நிலைப் பள்ளி, முகப்பேர்,சென்னை.

கண்டுபிடிப்பின் பெயர்: சோலார் மின்சாரம் மூலம் - ஆட்டோமேட்டிக் கன்ட்ரோலர் அமைப்புடன் விவசாய நிலத்தைச் சமப்படுத்தும் கருவி (Solar Wetland Leveller and Trimmer)கண்டுபிடிப்பின் பயன்: சிறு குறு விவசாயிகள் - தங்கள் நிலத்தைப் பண்படுத்துவதற்கு முக்கியமாக வயல்களில் நெற்பயிர் நடுவதற்கு, முன்னர் வயல்களில் நிலத்தை சமன்படுத்த-பொருளாதார வசதி இல்லாததால் மாடுகளைக் கட்டி மரக்கட்டையை வைத்து சமன்படுத்தினர். தற்போது மாடுகள் கிடைக்காத நிலையில் டிராக்டரைக் கொண்டும் சமன்படுத்த இயலாத நிலையில் மிகவும் துயரம் அடைகின்றனர்.

இந்நிலையில், மிகக் குறைந்த விலையில் சோலார் சக்தியைக் கொண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள proto type வடிவிலான இந்த வேளாண் கருவி சிறிய ஏழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை பெரிய அளவில் உற்பத்தி செய்யவும் இயலும்.

கண்டுபிடிப்புக்கான காரணம்: எனது தாத்தா மிகவும் பின்தங்கிய கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி. 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பெரிய டிராக்டர் கொண்டு பண்படுத்தி விவசாயம் செய்ய இயலாத நிலையில் மாடுகளைப் பயன்படுத்திப் பண்படுத்தி விவசாயம் செய்தபோது கண்ட கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என எண்ணியதன் முயற்சி இந்தக் கருவி.

எதிர்காலத் திட்டம்: குணப்படுத்த இயலாத மனித நோய்களுக்கான ஆராய்ச்சி செய்து மருந்து கண்டுபிடிக்கும் சிறந்த மருத்துவ விஞ்ஞானி ஆவது. அடுத்தகட்டமாக எனது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் பட்சத்தில் அந்தத் துறையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது.

- தோ.திருத்துவராஜ்