முதுநிலை மானுடவியல் பட்டப்படிப்புகள்!



அட்மிஷன்

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை!


ஐஐடி சென்னை என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (இ.தொ.க. சென்னை, Indian Institute of Technology Madras) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய அளவில் இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும்.

இங்கு வழங்கப்படும் பாடப்பிரிவில் மிகப் பழமையான மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை கடந்த ஐம்பது ஆண்டுகளாக, அறிவுத் தொடர்பாகவும், கலாசார அடிப்படையிலும் நிகழ்காலத் தேவைகளை அடியொற்றி மனித உறவுகளை, பண்புகளை ஆய்வு செய்யும் துறையாகும். இத்துறை இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, மக்கள் வாழ்க்கையைப் பற்றி ஆய்வு செய்து தெரிந்துகொள்ளவும், சமூகம் மற்றும் மனிதர்களின் சுற்றுச்சூழல் பற்றியும் கற்றுத் தருகிறது.

இப்படிப்பில் 46 இடங்கள் உள்ளன. இவற்றில் 23 இடங்கள் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (Development Studies) என்ற பிரிவுக்கும்,
23 இடங்கள் ஆங்கிலப் படிப்பிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்துறையில் தகுதி பெற்றவர்கள் ஆய்வு நிலையங்கள், வணிக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நிரந்தரப் பணி வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (Development Shudies) என்ற பிரிவில் இவ்வுலகில் மனித முன்னேற்றத்திற்கான வழிகள், முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் காரணிகள், மனிதர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிக்கொள்வதற்கான வழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் சமூக அறிவியல், பொருளாதார முன்னேற்றம், சந்தைகளின் நிலை, உலக மயமாதல், சமத்துவம், வறுமை, ஆண் - பெண் உறவுகள், சுற்றுப்புறச்சூழல், பல்வேறு சமுதாயச் சிக்கல்கள், புதிய சமூகச் சிந்தனை, அரசியல் கிராமப்புற, நகர்ப்புற வாழ்வியல், உலகளாவிய உறவுகள் கற்பிக்கப்படுகின்றன.

ஆங்கிலப் பிரிவில், இலக்கியமொழித் திறனாய்வு, தற்கால இலக்கிய ஆய்வு வினாத்தாள்கள் குறித்து கற்பிக்கப்படுகின்றன. அடிப்படை தொடங்கி உயர்நிலை வரை ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. ஆங்கில இலக்கியம் கற்பிக்கப்படுவதுடன், ஆங்கிலமொழியின் மீது ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய  நாடுகளில் மொழிகளின் தாக்கம் கற்பிக்கப்படுகிறது. இத்துடன் பொருளாதாரம், சமூக இயல், வரலாறு, தத்துவயியல் ஆகியவையும் பாடத்தில் உள்ளன.

விண்ணப்பிக்கத் தகுதி: இப்படிப்பிற்கு +2 அல்லது அதற்குச் சமமான படிப்பில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது வரும் இறுதியாண்டுத் தேர்வை எழுதவிருப்போரும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறைந்தது 60 %, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அக்டோபர் 2, 1993 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஐந்து வருட வயதுத் தளர்ச்சி உண்டு. அரசு விதிப்படி இடஒதுக்கீடு உண்டு.

நுழைவுத்தேர்வு: இப்படிப்பிற்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய மூன்று மணி நேர நுழைவுத்தேர்வு நடத்தப்படும். முதல் பகுதி ‘சரியான விடையைத் தேர்வு’செய்யும் முறையிலான, 2½ மணி நேரத்தில் ஆன்லைன் தேர்வாகும். இதில் ஆங்கிலம், ஆங்கில காம்பிரிஹென்சன், அனாலிட்டிக்கல் மற்றும் குவான்டிடேடிவ் எபிலிட்டி, இந்திய பொருளாதாரம், இந்திய சமூகம் மற்றும் கலாசாரம், உலக நிகழ்வுகள் உள்ளிட்ட பொது அறிவு,  சுற்றுப்புறச்சூழல், ஈகாலஜி  ஆகிய தலைப்புகளிலிருந்து வினாக்கள் இருக்கும்.

இரண்டாவது பகுதியான அரை மணி நேர எழுத்துத் தேர்வில், ஆழமான சிந்தனை உள்ளிட்ட கட்டுரை கேட்கப்படும்.  நுழைவுத்தேர்வு அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், கவுஹாத்தி, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, திருவனந்தபுரம், வாரணாசி ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://hsee.iitm.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.2400. பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள் ரூ.1200 செலுத்தினால் போதும். கட்டணத்தை ஆன்லைனில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது இந்தியன் வங்கி செலான் வழியாகவோ செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.1.2018.மேலும் விவரங்களை அறிய http://hsee.iitm.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.