நல்ல விஷயம் 4



வளாகம்

படிக்க வேண்டிய புத்தகம் - பணமே பணமே ஓடோடி வா  ஏ.எல்.சூர்யா

இன்றைய நவீன யுகத்தில் ‘பணம் இல்லாதவன் பிணம்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகவும் அவசியமான தேவையாகிப்போன பணத்தை சம்பாதிப்பது எப்படி? அதைத் தக்கவைத்துக்கொள்ளும் முறைகள் எவை? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைதரும் புத்தகமாக வடிவமைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர் ஏ.எல்.சூர்யா. மூளையின் காந்த சக்தியில் ஊடுருவி பணத்தைச் சம்பாதிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து விஞ்ஞானரீதியில் எளிமையான நடையில் விவரிக்கிறது இந்நூல்.

பரம்பரை பரம்பரையாக உழைத்துவரும் பாட்டாளி மக்கள் ஏன் இன்னும் பணக்காரர் ஆகமுடியவில்லை என்ற நிதர்சனத்தை விளக்கியுள்ளது அருமை. மேலும், அவர்கள் முன்னேறுவதற்கான வழிகள் தொகுக்கப்பட்டு சிறந்த வழிகாட்டியாக வடிவம் பெற்றுள்ளது இந்நூல்.

பணத்தைப் பற்றிய நிஜமனிதர்களின் மன ஓட்டங்களைப் பதிவு செய்து சாதனை புரிவதற்கான சக்தி அனைவரிடமும் உள்ளது என்பதை உணர்த்தி, தன் தனிச்சிறப்பை நிலைநாட்டுகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.(வெளியீடு: பி பாஸிட்டிவ் புரொடக்‌ஷன்ஸ், 36-A சீனிவாசன் தெரு, தி.நகர், சென்னை - 17. விலை: ரூ.300. தொடர்புக்கு: 044-42147911)

அறிய வேண்டிய மனிதர் சவிதா வைத்தியநாதன்

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் இருபது ஆண்டுகளாக வசித்து வரும் சவிதா வைத்தியநாதன் முதுநிலைப் படிப்பான எம்.பி.ஏ முடித்துவிட்டு அமெரிக்க நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்தின் குப்பர்டினோ நகரிலுள்ள  பள்ளிகளில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் தனியார் வங்கிகளில் பணியாற்றியதுடன் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

உலக அளவில் பிரபலமான கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் இந்நகரில்தான் அமைந்துள்ளது. மேலும் இந்த நகரில் வாழும் அனைவரும் கல்வியறிவில் சிறந்து விளங்கி வருவதாக ‘போர்ப்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இப்படி பல பெயர்களைப் பெற்றுள்ள இந்நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சவிதா வைத்தியநாதன். அமெரிக்காவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல்பெண் என வரலாற்றில் பெயர் பெற்றுள்ளார் .மேலும் விவரங்களுக்கு https://en.wikipedia.org/wiki/Savita_Vaidhyanathan

வாசிக்க வேண்டியவலைத்தளம் www.panippookkal.com

அன்றாட செய்திகளில் ஆரம்பித்து உள்நாட்டு வெளிநாட்டு நிகழ்வுகள், சுற்றுலாத் தலங்கள், பெண்களுக்கான சமையல் குறிப்புகள், இலக்கியம், கலாசாரம், கதை, கவிதை, நகைச்சுவை, ஆன்மிகம், திரைப்படச் செய்திகள் என அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சக தளமாக செயல்படுகிறது இத்தளம்.

மேலும், சிறுவர்களுக்காகத் தனிப் பக்கம் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கான கவிதை, கட்டுரைப் போட்டிகளை வைப்பது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புச் செய்திகளை வழங்குவது போன்ற பன்முகத்தன்மையோடு செயல்படுவது இத்தளத்தின் தனிச்சிறப்பு.

பார்க்க வேண்டிய இடம் - தலக்காடு

கர்நாடகாவில் காவிரியின் இடக்கரையில் அமைந்துள்ள நகரம்தான் தலக்காடு. இது மைசூரிலிருந்து 45கிமீ தொலைவிலுள்ளது. கி.பி. 350-1050  வரை மேலைக் கங்கர்களின் தலைநகரமாக விளங்கிய இந்நகரம் பின் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கைப்பற்றப்பட்டது.

ஒரு காலத்தில் 30 கோயில்களைக்கொண்டிருந்த கோயில் நகரமாக விளங்கிய இந்நகரம் 16ம் நூற்றாண்டில் இயற்கைப் பேரிடர்களால் மணலில் புதையுண்டது. வைத்தியநாதேஸ்வரர் கோயில், பாதாளேஸ்வரர் கோயில், மருளேஸ்வரர் கோயில், அர்கேஸ்வரர் கோயில், மல்லிகார்ஜுனா கோயில் எனும் ஐந்து முக்கியமான கோயில்களுக்காக இந்நகரம் பிரசித்திபெற்றது.

இந்த நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பஞ்சலிங்க தரிசனம் எனும் திருவிழா மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு https://en.wikipedia.org/wiki/Talakadu