டிசைன் & ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகளில் சேர NIFT2017 நுழைவுத்தேர்வு!



நுழைவுத்தேர்வு

விண்ணப்பிக்க தயாராகுங்க!


தேசிய அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technolgy-NIFT) இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. இதன் கல்வி நிறுவனங்கள் பெங்களூரு, போபால், சென்னை, சண்டிகர், காந்திநகர், ஐதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரலி, சில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், ஸ்ரீநகர் ஆகிய 16 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

 இந்தக் கல்வி நிறுவனங்களில் Bachelor of Design (B. Des), Bachelor of Fashion Technology (B.F.Tech) எனும் இரு வகையான இளநிலைப் பட்டப்படிப்புகளும், Master of Design (M.Des), Master of Fashion Management (M.F.M) மற்றும் Master of Fashion Technology (M.F.Tech) ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளும் இருக்கின்றன. இந்தப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பட்டப்படிப்புகளுக்கான இடங்கள்: இந்தக் கல்வி நிறுவனத்தின் இளநிலைப் பட்டப்படிப்புகளில் Bachelor of Design எனும் பட்டப்படிப்பில் Fashion Design பிரிவில் 450 இடங்கள், Leather Design பிரிவில் 120 இடங்கள், Accessory Design பிரிவில் 420 இடங்கள், Textile Design பிரிவில் 390 இடங்கள், Knitwear Design பிரிவில் 210 இடங்கள், Fashion Communication பிரிவில் 420 இடங்கள் என மொத்தம் 2010 இடங்கள் இருக்கின்றன. Bachelor of Fashion Technology பட்டப்படிப்பில் Apparel Production எனும் பிரிவில் 360 இடங்கள் இருக்கின்றன. முதுநிலைப் பட்டப்படிப்புகளில் Master of Design படிப்பில் 120 இடங்கள், Master of Fashion Management படிப்பில் 420 இடங்கள், Master of Fashion Technology படிப்பில் 100 இடங்கள் என மொத்தம் 640 இடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி: Bachelor of Design பட்டப்படிப்பில் சேர்வதற்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Bachelor of Fashion Technology பட்டப்படிப்பில் சேர்வதற்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்குப் பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்பிற்கு மூன்றாண்டு எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும். முதுநிலைப் பட்டப்படிப்புகளில் Master of Design மற்றும் Master of Fashion Management படிப்புகளில் சேர்வதற்கு ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது NIFT (National Institute of Fashion Technology), NID (National Institute of Design) போன்ற நிறுவனங்கள் வழங்கிய மூன்று ஆண்டு கால அளவிலான பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Master of Fashion Technology படிப்பில் சேர்வதற்கு NIFT நிறுவனம் வழங்கிய Bachelor of Fashion Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ/பி.டெக் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 1.10.2017 அன்று 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு வயது வரம்பு ஏதுமில்லை. நுழைவுத்தேர்வு: NIFT நிறுவனத்தின் படிப்புகளில் சேர்வதற்கு இந்நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வினை எழுத விரும்புவோர் www.nift.ac.in/admissions.html எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வில் பங்கேற்க பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1500, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.750 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இத்தேர்வுக்குத் தாமதக்கட்டணமின்றி விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29.12.2017. விண்ணப்பக் கட்டணத்துடன் ரூ.5000 தாமதக்கட்டணம் சேர்த்துச் செலுத்தி விண்ணப்பிக்கக் கடைசி நாள் 2.1.2018.

தேர்வு மையங்கள்: இத்தேர்வு தமிழ்நாட்டிலிருக்கும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் 32 மையங்களில் 21.2.2018 அன்று நடைபெற இருக்கிறது. Bachelor of Design மற்றும் Master of Design ஆகிய படிப்புகளுக்குத் தேர்வு நாளில் காலையில் படைப்பாற்றல் தகுதித் தேர்வு (Creative Ability Test (CAT)), பிற்பகலில் பொதுத் தகுதித் தேர்வு (General Ability Test (GAT)) எனும் இரண்டு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும்.

Bachelor of Fashion Technology, Master of Fashion Management, Master of Fashion Technology ஆகிய படிப்புகளுக்குக் காலையில் பொதுத் தகுதித் தேர்வு எனும் எழுத்துத் தேர்வு மட்டும் நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கான அனுமதி அட்டையினை 9.1.2018 மதியம் 1.00 மணிக்குப் பின்னர் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்தேர்வுகளுக்குப் பின்னர் நிலைத் தேர்வு (Situation Test), குழுக் கலந்தாய்வு (Group Discussion) மற்றும் நேர்காணல் போன்றவை 2018 ஆம் ஆண்டு, ஏப்ரல் முதல் மே மாதங்களில் நடத்தப்படும். மாணவர் சேர்க்கை: Bachelor of Design படிப்புக்குப் படைப்பாற்றல் தகுதித் தேர்வு 50%, பொதுத் தகுதித் தேர்வு 30% மற்றும் நிலைத் தேர்வு 20% எனக் கணக்கிடப்படும். Master of Design படிப்புக்குப் படைப்பாற்றல் தகுதித் தேர்வு 40%, பொதுத் தகுதித் தேர்வு 30% மற்றும் குழுக்கலந்தாய்வு/நேர்காணல் தேர்வுக்கு 30% எனக் கணக்கிடப்படும்.

Master of Fashion Management, Master of Fashion Technology ஆகிய படிப்புகளுக்குப் பொதுத் தகுதித் தேர்வு 70% மற்றும் குழுக்கலந்தாய்வு/நேர்காணல் தேர்வுக்கு 30% என கணக்கிடப்படும். Bachelor of Fashion Technology படிப்பிற்கு பொதுத் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் கொண்டும் இறுதி முடிவுகள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் மே மாதக் கடைசி வாரத்தில் அல்லது ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்.

அதன் பின்னர் ஜூன் மாதத்தில் இந்திய அரசின் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வின் (Counselling) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்பில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, NIFT கல்வி நிறுவனத்தின் மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது NIFT கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றை நேரில் அணுகியோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறலாம். தமிழ்நாட்டிலிருப்பவர்கள் சென்னையிலிருக்கும் NIFT கல்வி நிறுவனத்தின் 044  22542759 என்ற தொலைபேசி எண்ணில் வேலைநாட்களில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

- தேனி மு.சுப்பிரமணி