MBA படிக்க CMAT 2018 தேர்வு!



நுழைவுத் தேர்வு

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு (All India Council for Technical Education - AICTE) எனும் தன்னாட்சி அமைப்பு.

இவ்வமைப்பினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றிருக்கும் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு (MBA) மற்றும் பட்டயப்படிப்புகளில் (PGDM/PGCM) 2018-19 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான பொது மேலாண்மைச் சேர்க்கைத் தேர்வு - 2018 (Common Management Admission Test CMAT 018) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

கல்வித்தகுதி: இணையம் வழியிலான இந்தக் கணினி வழித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப்படிப்பில் (10+2+3) இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.aicte-cmat.in/College/Index_New.aspx எனும் இணையதளத்திற்குச் சென்று முதலில் பதிவு (Registration) செய்துகொள்ள வேண்டும். பதிவுக்குப் பிறகு, பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் ரூ.1400 எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.700 பதிவுக் கட்டணத்தை ஆன்லைனிலோ அல்லது பாரத வங்கிக் கிளைகளிலோ பணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் பணம் செலுத்தியவர்களுக்கு மின்னஞ்சலில் கட்டணம் செலுத்தியற்கான உறுதி மின்னஞ்சலும், செல்லிடப்பேசிக்குக் குறுந்தகவலும் (SMS) அனுப்பி வைக்கப்படும். பாரத வங்கிக் கிளையில் பணம் செலுத்திடப் பதிவு செய்தவுடன் கிடைக்கும் சலானைக் கொண்டு, அருகிலுள்ள ஏதாவதொரு பாரத வங்கிக் கிளையில் பணம் செலுத்திட முடியும். பணம் செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின்னர், இணையதளத்தில் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தேர்வுக்குப் பதிவு செய்யக் கடைசி நாள்: 18.12.2017. பதிவுக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 19.12.2017. விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பிச் சமர்ப்பிக்க கடைசி நாள்: 20.12.2017. இந்தத் தேர்வு 21.1.2018 அன்று நடைபெற இருக்கிறது. விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில், குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இணையம் வழியில் நடத்தப்படும் இத்தேர்வினை எழுத முடியும்.

இத்தேர்வு முடிவுகளைக் கொண்டு மத்தியக் கலந்தாய்வு மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்புகளிலும், முதுநிலை மேலாண்மைப் பட்டயப்படிப்புகளிலும் சேர்க்கையினைப் பெற முடியும்.    

-  உ.தாமரைச்செல்வி