ஆசிய அளவிலான டென்னிஸ் போட்டி!



சாதனை

வெண்கலம் வென்ற தமிழ் மாணவன்!


சர்வதேச அளவில் இயங்கும் இந்திய நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனமும், மகாராஷ்டிரா மாநில டென்னிஸ் சங்கம் மற்றும் இன்டர்நேஷனல் டென்னிஸ் ஃபெடரேஷனும் இணைந்து பதினெட்டு வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஆசிய அளவில் டென்னிஸ் சேம்பியன்ஷிப்பை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடத்திவருகிறது.

தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், மலேசியா, சீனா, ஜப்பான், இலங்கை, இந்தியா, ஈரான் என மொத்தம் பதினோரு நாடுகளிலிருந்து 32 போட்டியாளர்கள் பங்குபெறும் இப்போட்டியானது இந்தோனேஷியாவில் கடந்த ஆகஸ்டு மாதம் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்தது.

உலக அளவில் நடத்தப்படும் டென்னிஸ் போட்டிகளிலேயே இரண்டாவது பெரிய போட்டியான இப்போட்டியை,  ஜூனியர் டென்னிஸ் பிளேயர்கள்  தங்களுக்கான  சர்வதேச ரேங்கிங்கை உருவாக்கிக்கொள்ளும் மிக முக்கி யமான போட்டியாக கருதுகின்றனர்.

இப்படி சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் இப்போட்டியை மலேசியாவுடன் போட்டியிட்டு வென்று வெண்கலப் பதக்கத்தை இந்தியாவிற்கு சொந்தமாக்கியிருக்கிறார்கள்  இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட எட்டு பேர். இந்த வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் உரிமை கொண்டாடும் வகையில் எட்டில் ஒருவராக வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார் திருச்சி கேம்பன் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ராஜேஷ் கண்ணன்.

“கடந்த வருடம் டிசம்பர் மாதம்  ஜூனியர்களுக்கான  தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி மைசூரில் நடைபெற்றது. மொத்தம் 33 மாநிலங்களிலிருந்தும் பள்ளி மாண வர்கள் அப்போட்டியில் கலந்து கொண்டனர். அதில் வென்றவர்கள்தான் ஆசிய போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கலந்துகொண்டு இரண்டாம் இடமான சில்வர் மெடலை தேசிய அளவில் நான் வென்றேன். மேலும் என்னோடு சேர்த்து  இப்போட்டியில் வென்ற 32 பிளேயர்களைத்  தேர்ந்தெடுத்து புனேவில் மற்றுமொரு போட்டி நடத்தப்பட்டு போட்டியாளர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டார்கள். இப்போட்டியே ஆசிய அளவில் நாங்கள்  விளையாடுவதற்கான கடைசி தகுதிச் சுற்று. மைசூரில் மெடல் வென்றவர்களுக்கு இடையே  அப்போட்டியானது  நடத்தப்பட்டது.

புனேவில் நடந்த போட்டியில் ஐந்தாம் இடத்தில் வென்று இந்தோனேஷியா போகும் எட்டு பேர் கொண்ட இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டேன்” என தான் போட்டியில் பங்கேற்ற விதத்தை விளக்கிய ராஜேஷ் ஆசிய போட்டியை பற்றி விளக்கலானார்.  “ஜூனியர் டென்னிஸ் பிளேயர்கள் தங்கள் திறமையைக் காட்டும் விதத்தில்  உருவாக்கப்பட்ட சர்வதேச பிளாட்ஃபார்ம் தான் இந்த ஆசிய போட்டி. உலக அளவில் நடக்கும் டென்னிஸ் சேம்பியன்ஷிப்களிலேயே மிக முக்கியமான சேம்பியன்ஷிப் இது.

ஏனென்றால் இந்தப் போட்டியில் கலந்துகொண்டால் அந்த பிளேயர்களுக்கு சரவதேச அங்கீகாரம் கிடைக்கும். மேலும் பிளேயர்கள் தங்களது சர்வதேச  தரவரிசையை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பாகவும் இப்போட்டி விளங்குகிறது. தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட மொத்தம் 11 ஆசிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

முதலில் லீக் சுற்றில் வென்று செமி ஃபைனலுக்கு இந்தியன் டீம் முன்னேறினோம். செமி ஃபைனலை தாய்லாந்துடன் எதிர்கொண்டு தோல்வி அடைந்தோம். பின் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மலேசியாவுடன் போட்டி போட்டு வென்றோம்” என்ற ராஜேஷ் டென்னிஸ் விளையாட்டில் உண்டான  ஆர்வம் பற்றியும் விவரித்தார்.

“அப்பா ஒரு ஸ்போர்ட்ஸ் பிரியர். எப்போதும் ஏதாவது ஒரு ஸ்போர்ட் பத்தி பேசிகிட்டு இருப்பார். ஃப்ரீ டைம்ல கிரவுண்டுக்கு எங்களைக் கூட்டிட்டு   போவார். அதனால் சின்ன வயசுலயே எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் மேல ஆர்வம் வந்தது. அப்படிதான் நானும் அக்காவும் ஸ்விமிங்கை தேர்ந்தெடுத்தோம்.

அக்காவும் நானும்  ஸ்விம்மிங் போட்டிகளில் கலந்துகொண்டு அக்கா கோல்டு மெடலும், எட்டு வயதினருக்கான போட்டியில் நான் நான்காம் இடத்தையும் வென்றேன். அப்படி ஒரு நாள் பள்ளிகளுக்கு இடையே நடந்த  ஸ்விம்மிங் போட்டியில் டைவ் அடிக்கும்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவிற்கு தலையில் பெரிய அடி பட்டுவிட்டது.

தலையில் ஆப்பரேஷன் செய்ததால் என்னால் தொடர்ந்து நீந்த முடியவில்லை. இப்படி நான் கஷ்டப்பட்டதை பார்த்து அப்பா, ‘இனி நீ ஸ்விம்மிங் செய்ய வேண்டாம்’என்றார். அப்படி தான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது டென்னிஸை தேர்ந்தெடுத்தேன். அப்போது இருந்து தொடர்ந்து ஏழு வருஷம் டென்னிஸ் கற்று  வருகிறேன். இந்திய அளவிலான டென்னிஸ் போட்டிகளை எதிர்கொண்டு வென்றுள்ளேன்.

மைசூரில் சில்வர் மெடல் வென்றதற்காக இந்திய டென்னிஸ் பிளேயர் மஹேஷ் பூபதியிடம்  விருது வாங்கியது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். தற்போது ஆசிய போட்டிகளை எதிர்கொண்டுள்ளேன். மேலும் உலகப் போட்டிகளில் பங்கு பெற்று இந்தியா சார்பாக விளையாடி  இந்தியாவிற்கு பதக்கங்கள் குவிப்பதே என் லட்சியம்” என தன்னம்பிக்கை ததும்பும் வார்த்தைகளால் முடித்தார் ராஜேஷ் .
 

-குரு

படம்: சுந்தர்