மாதம் ரூ.1,00,000 லாபம் தரும் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு!



சுயதொழில்

நாம் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் பல தொழில்கள் இருக்கின்றன. ஆனால், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை போன்றவை நல்ல லாபம் தரக்கூடிய தொழில் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளான சிப்ஸ் தயாரிப்பு பெருகியுள்ளதைப் பல இடங்களில் கண்கூடாகக் காணமுடியும்.

பல தின்பண்டங்களை மக்கள் தங்களின் வீட்டிலேயே செய்து சாப்பிடுகின்றனர். ஆனால், இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்வது சற்று கடினம். எனவே, இதனை மக்கள் பெரும்பாலும் கடைகளில் வாங்கித்தான் சாப்பிடுகின்றனர். மேலும் இதில் நாம் சில நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி சிப்ஸ் தயாரிப்பதால் தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க முடியும்.

சிறப்பம்சங்கள்

* இந்தத் தொழிலுக்கு போட்டிகள் மிகவும் குறைவு.
* இயந்திரங்களைப் பயன்படுத்தி தயாரிப்பதால் குறைந்த  நேரத்தில் அதிக அளவிலான சிப்ஸ் தயாரிக்கலாம்.
*எந்தவித நச்சு மற்றும் வேதிப் பொருட்கள் கலப்படம் இல்லை. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
* இதற்கு மிகக் குறைந்த அளவிலான இடம் போதுமானது.
* நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.
* அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

செயல்முறை

உலகில் விவசாயத்தில் அதிக அளவு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. உருளைக்கிழங்கு நமது உணவில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இதில் மாவுச்சத்து அதிகம். தென் இந்தியாவைவிட வட மாநிலங்களில் உருளைக்கிழங்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் என இருவகை உள்ளது.

இது முழுக்க முழுக்க இயற்கை உணவாகும். சாப்பிடும்போது மொறு மொறு தன்மையுடன் இருக்கும். காரம், மசாலா, உப்பு கலந்து சாப்பிடும்போது சுவை அதிகமாகும். நல்ல தரமான எண்ணெயில் வறுக்கும் சிப்ஸ்கள் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தயாரிப்பு முறைதரமான உருளைக்கிழங்குகளை மண்டிகளில் சென்று வாங்கி, சில நாட்கள் சாதாரண சீதோஷ்ண நிலையில் ஸ்டாக் வைக்கலாம். எளிதில் கெட்டுப்போகாது. தேவைக்கேற்ப ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை மொத்தமாகக் குறைந்த விலையில் வாங்கி வைத்துக்கொள்ளலாம். உருளைக்கிழங்கை முதலில் தோல் நீக்கும் இயந்திரத்தில் போட வேண்டும். உருளைக்கிழங்கு தோல் நீக்கி தண்ணீரில் கழுவி வெளிவரும். இந்தத் தோல் நீக்கிய உருளைக்கிழங்கை சிப்ஸ் வடிவில் வெட்டும் இயந்திரத்தில் போட வேண்டும். இங்கும் தண்ணீருடன் வெட்டி வெளிவரும் அதிகமான ஸ்டார்ச் கழுவிவிடும்.

ஈரமான உருளை சிப்ஸ்களை நீர் வெளியேற்றி காய வைக்கும் இயந்திரத்தில் போட வேண்டும். இது துணி துவைக்கும் இயந்திரம் போல நீரைச் சுழற்சி மூலம் வெளியேற்றி ஈரம் குறைந்த சிப்ஸ்களை தரும். இந்த சிப்ஸ்களை எண்ணெய் கொப்பரையில் கொட்ட வேண்டும். உருளைக்கிழங்கு சிப்ஸ் இதில் நன்றாகப் பொரிந்துவிடும். பின் எண்ணெயை வடியவிட்டு சிப்ஸ்களைத் தனியாக எடுக்க வேண்டும்.

இந்த சிப்ஸை ஒரு உருளும் இயந்திரத்தில் இட்டு தேவையான உப்பு, காரம் மற்றும் சுவைக்காக மசாலாப் பொருட்களைச் சேர்க்க வேண்டும். இப்போது சிப்ஸ்களை முறையாகப் பாலிதீன் பைகளில் போட்டு சீல் செய்து விற்பனை செய்யலாம். பல நாட்கள் வைத்து விற்பனை செய்ய நைட்ரஜன் கேஸ் பேக்கிங் செய்யலாம். அனைத்திற்கும் இயந்திரம் உண்டு.

அனைத்து பேக்கரிகள் சில்லறைக் கடைகள், பார்கள், பெரிய ஓட்டல்கள், ஸ்வீட் கடைகள் போன்றவற்றுக்கு சப்ளை செய்யலாம். இதே இயந்திரத்தை கொண்டு வீல், பிரயம் போன்ற பொருட்களையும் பொரித்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.
திட்ட அறிக்கை முதலீடு

இடம்    : வாடகை
கட்டடம்    : வாடகை 
இயந்திரங்கள் மற்றும்
உபகரணங்கள்    : 3.50  லட்சம்
மின்சாரம் &
நிறுவும் செலவு    : 0.20 லட்சம்
இதர செலவுகள்    : 0.30 லட்சம்
நடைமுறை மூலதனம்    : 1.00 லட்சம்
மொத்த முதலீடு    : 5.00 லட்சம்
இந்தத் தொழிலை அரசின் மானியத்துடன் கடன் பெற்று தொழில் செய்யலாம்.
மொத்த திட்ட மதிப்பீடு    : 5.00 லட்சம்
நமது பங்கு 5%    : 0.25 லட்சம்
அரசு மானியம் 25%    : 1.25 லட்சம்
வங்கிக் கடன்    : 3.50 லட்சம்
தமிழக அரசின் வேலையில்லா இளைஞர் களுக்கான வேலை உருவாக்கும் திட்டம் (UYEGP). இந்தத் திட்டம் மாநில அரசின் திட்டமாகும் இதில் உற்பத்தித் துறைக்கு ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெறலாம். மானியம் முதல் 5 லட்சம் வரை அல்லது அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை பெறலாம். உங்கள் பங்கு 5%, அரசின் மானியம் 25% (அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை) மாவட்டத் தொழில் மையத்தை அணுகிப் பெறலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்குத் திட்ட அறிக்கை தேவை.   

தேவையான இயந்திரங்கள்

உருளைக்கிழங்கு தோல் சீவும் இயந்திரம்
சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரம்
தண்ணீர் வெளியேற்றி உலரவைக்கும் இயந்திரம்
சிப்ஸ் வறுக்கும் இயந்திரம்
மசாலா சேர்க்கும் இயந்திரம்
பாக்கெட் போடும் இயந்திரம்

மூலப் பொருட்கள்

* உருளைக்கிழங்கு
* எண்ணெய்
* மசாலாப் பொருட்கள்
* பேக்கிங் பொருட்கள் அடிப்படை விவரங்கள்
* உருளைக்கிழங்கு மொத்த சந்தையில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ. 20 வரை விற்கப்படுகிறது. நாம் கிலோ ரூ.20க்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். ஒரு வாரத்திற்குத் தேவையான உருளைக்கிழங்கு வாங்கு வதால் விலை குறைவாகக் கேட்டு வாங்கலாம்.

100 கிலோ உருளைக்கிழங்கிலிருந்து சுமார் 35 கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும்.
100gm பேக்கிங் செலவு ரூ.1.50 மற்றும் ஒரு கிலோ சிப்ஸ் பேக்கிங் செலவு ரூ.15 என வைத்துக்கொள்வோம்.
100 கிலோ உருளைக்கிழங்கு பொரிப்பதற்கு 14 லிட்டர் எண்ணெய் தேவைப்படும்.

*மசாலா விலை ரூ.50 என வைத்துக்கொள்வோம்.

கேஸ் சிலிண்டர்

இரண்டு நாட்களுக்கு ஒரு சிலிண்டர் தேவைப்படும். ஒரு நாளைக்கு சிலிண்டர் செலவு ரூ.750. ஒரு மாதத்திற்கு ரூ.19,000 செலவாகும்.
மூலப்பொருட்களின் தேவை:
ஒருநாள் தேவையான
உருளைக்கிழங்கு    - 300 கிலோ
300 X Rs.20    - ரூ. 6000/-        
ஒரு மாதத்திற்கு    - ரூ.1,50,000/-
எண்ணெய் ஒரு நாளைக்கு
45 லிட்டர் X ரூ.70    -  ரூ. 3150/-
ஒரு மாதத்திற்கு    -  ரூ. 78,750/-
மசாலா பவுடர்
ஒரு மாதத்திற்கு    - ரூ. 4,000/-
மொத்தம்     - ரூ.2,34,000/-

உற்பத்தி மற்றும் விற்பனை வரவு:

ஒரு நாளைக்கு 100 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு மாதத்திற்கு 2,500 கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும்.
ஒரு கிலோ சிப்ஸ் ரூ.300 to ரூ.320-வரை சில்லறை விலையில் கடையில் கிடைக்கிறது. நாம் மொத்த விலைக்கு விற்கும்போது ரூ.200-க்கு விற்பனை செய்யலாம்.

ஒரு நாளைக்கு 100 கிலோ சிப்ஸ் ரூ.20,000
ஒரு மாதத்திற்கு ரூ.5,00,000-க்கு விற்பனை செய்யலாம்.
வேலையாட்கள் சம்பளம்:
மேலாளர் 1    : ரூ.7,000  
பணியாளர் 2    : ரூ.10,000
விற்பனையாளர்    : ரூ.6,000  
மொத்த சம்பளம்    : ரூ.23,000 
மொத்த செலவு:
மூலப்பொருட்கள்    : ரூ.2,34,000
பேக்கிங் மெட்டீரியல்    : ரூ.38,000  
கேஸ் சிலிண்டர்    : ரூ.19,000  
மின்சாரம்     : ரூ.54,000  
சம்பளம்    : ரூ.23,000  
இயந்திரப் பராமரிப்பு    : ரூ.3,000  
மேலாண்மைச் செலவு     : ரூ.3,000
விற்பனைச் செலவு    : ரூ.3,000
தேய்மானம் 15%     : ரூ.5,000
கடன் வட்டி    : ரூ.4,000  

கடன் தவணை

(60 தவணை)    : ரூ.6,000  
மொத்தம்    : ரூ.3,97,000  
லாப விவரம்
மொத்த வரவு    : ரூ.5,00,000  
மொத்த செலவு    : ரூ.4,00,000  
லாபம்     : ரூ.1,00,000  
சொந்தத் தொழில் செய்து வாழ்வில் உயர நினைக்கும், உடல் உழைப்பை மூலதனமாக்க தயாராக இருக்கும் யாரும் இந்தத் தொழிலை மேற்கொள்ளலாம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்