நல்ல விஷயம் 4வளாகம்
 
படிக்கவேண்டிய புத்தகம் வங்கி மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?

எஸ்.ஜெகன்னாதன்

இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளை நம்பிக்கையோடு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இப்படி இருக்கும் வங்கிகளைப் பயன்படுத்தித்தான் கடன் கணக்கு மோசடிகள், அந்நிய செலாவணி கணக்கு மோசடிகள், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மோசடிகள் என  அதிகப்படியான மோசடி கள் அரங்கேறுகின்றன.

வங்கிகளில் அன்றாடம் நடக்கும் மோசடிகள் பற்றியும், அவற்றிலிருந்து வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் தங்களை எப்படிப் பாதுகாப்பது? இவ்வங்கிகளில் நடக்கும் மோசடிகளின் வகைகள்,  இம்மாதிரியான மோசடிகள் செய்பவர்கள் யார்? என்பனவற்றை அறிந்துகொண்டு, இனி வருங்காலத்தில் வங்கியைப் பாதுகாப்பான விதத்தில் மக்கள் பயன்படுத்தும் வழிகாட்டியாக இந்நூலைப் படைத்துள்ளார் நூலின் ஆசிரியர் எஸ்.ஜெகன்னாதன்.

வங்கி ஊழியராகப் பணியிலிருக்கும் எஸ்.ஜெகன்னாதன் தன் வாழ்க்கைப் பாதையில் நிகழ்ந்த மோசடி சம்பவங்களை மையமாக வைத்து எழுதிய இந்நூலானது தெளிவான நடையில் மோசடிகளை விவரித்து அவற்றைத் தவிர்க்கும் வழிகளைக் கூறியுள்ளது தனிச்சிறப்பு.
(வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், எண்:7(ப.எண்:4), தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை  600 017. விலை: 150. தொடர்புக்கு: 044-2434 2926.)

அறியவேண்டிய மனிதர் தீபா மாலிக் தீபா மாலிக் இந்தியாவில் அரியானா

மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் 30.9.1970 ஆம் ஆண்டு பிறந்தார். ரியோ டி ஜெனிரோவில் நடந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் 4.61 மீட்டர் தூரத்திற்குக் குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தவர். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண். ஈட்டி எறிதல், நீச்சல், மோட்டார் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றிலும் வல்லவர்...

சிறந்த பேச்சாளரும்கூட. தீபா மாலிக் ஒரு மாற்றுத்திறனாளி. அவருடைய இடுப்புக்குக் கீழே கால்கள் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியின் உதவியினால் இயங்கி வருபவர். இவரது 26 வயதில் முதுகுத்தண்டில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.163 தையல்கள் போடப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின் அவரது மார்புப் பகுதிக்குக் கீழே உறுப்புகள் செயலிழந்தன. சக்கர நாற்காலியில் இருந்தபடியே குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றார். தொடர்ந்து தேசிய, சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினார். யமுனை நதியில் நீரோட்டத்திற்கு எதிராக ஒரு கிலோமீட்டர் தூரம் நீந்தி லிம்கா சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தார். பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த தீபா மாலிக் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார். இவ்விருதினைப் பெறும் முதல் மாற்றுத்திறனாளி வீராங்கனை இவர்தான். 2017 மார்ச் மாதம் இந்தியக் குடியரசுத்தலைவர் கைகளால் பத்ம விருதையும் பெற்றுள்ளார். இவரைப்பற்றி மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/தீபா_மாலிக்

பார்க்கவேண்டிய இடம் நாமக்கல் கோட்டை

தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையாகும். இந்தக்கோட்டை 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் இருந்த சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது.

இதைக் கட்டியவர் மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா என்ற கருத்தும் நிலவுகிறது. திப்பு சுல்தான் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்ெபனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையைப் பயன்படுத்தினார். கோட்டைக்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில் ஆகியவை புகழ்பெற்றவை. மலையைச் செதுக்கி குடைவரைக் கோயில்கள் செய்யப்பட்டுள்ளன.

இங்குள்ள நரசிம்மர் கோயிலும் அரங்கநாதர் கோயிலும் மலையைக் குடைந்து செய்யப்பட்டவையாகும். மலையின் கிழக்குப் பகுதியில் அரங்கநாதர் கோயிலும் மேற்குப் பகுதியில் நரசிம்மர் கோயிலும் உள்ளன. இக்கோயில்களை கி.பி 784ல் அதியமான் மரபைச் சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோயில்களின் மண்டபங்களும் பிற கோயில்களும் பின்னால் கட்டப்பட்டவையாகும்.
மேலும் அறிய https://ta.wikipedia.org/ wiki/நாமக்கல்_கோட்டை

வாசிக்கவேண்டிய வலைத்தளம் www.valaitamil.com

தமிழ் இலக்கியம், அரசியல், நடப்பு நிகழ்வுகள், மொழி, ஆன்மிகம், சினிமா, விவசாயம், அறிவியல், தமிழ் அகராதி என பலதரப்பட்ட தகவல்களின் பெட்டகமாக வடிமைக்கப்பட்ட தளம் இது. தமிழ் பாரம்பரிய உணவுகளைத் தயாரிப்பது குறித்த டிப்ஸ்கள், அன்றாட நிகழ்வுகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள் போன்ற சிறப்புக் கட்டுரைகளால்  அலங்கரிக்கப்பட்டிருக்கும் இத்தளமானது வயது பேதமின்றி அனைவருக்கும் உபயோகப்படும் விதமாக செயல்படுகிறது.