பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி!வாய்ப்பு

7,883 பேருக்கு வாய்ப்பு!


மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்று கடுமையாக முயற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் எப்போதுமே உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவ்வப்போது பெரிய எண்ணிக்கையில் பணி வாய்ப்பு
களைத் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் வங்கித்துறையும் ஒன்று.

கடந்த 6 ஆண்டுகளாக முன்னணியில் வங்கித்துறை திகழ்கிறது. இத்துறையில் சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்குத் தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாகப் பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது.

இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளுக்கு, ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பீ.பி.எஸ்.’ (Institute of Banking Personnel Selection) தேர்வாணையம் ஏற்றுள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் ‘கிளார்க்’, ‘புரபேஷனரி ஆபீசர்ஸ்’, ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ்’, கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ தேர்வுகளை நடத்திவருகிறது.

தற்போது கிளார்க் பணிகளுக்கான 7-வது எழுத்துத் தேர்வை (சி.டபுள்யூ.இ.-7) ஐ.பீ.பி.எஸ். அறிவித்து உள்ளது. மொத்தம்
7, 883 பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 1277 இடங்கள் உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதத்தில்் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாகப் பள்ளி அல்லது கல்லுாரிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பாக டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.9.2017ம் தேதியில் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 2.9.1989 மற்றும் 1.9.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை: முதலில் பிரிலிமினரி ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இதில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்குத் தேர்வு செய்யப்படுவர். மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப் பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவர். பிரிலிமினரி தேர்வு 100 மதிப்பெண்ணுக்கும், மெயின் தேர்வு 200 மதிப்பெண்ணுக்கும் நடைபெறும்.

கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 ஐ கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், விண்ணப்ப செலான்களைப் பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடையவர்கள் www.ibps.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்துகொள்ளுங்கள். விண்ணப்பம் சமர்ப்பித்ததும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தைப் பிற்கால உபயோகத்திற்காக 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.10.2017
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 2.12.2017, 3.12.2017, 9.12.2017, 10.12.2017
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் 21.1.2018
மேலும் விரிவான விவரங்களை அறிய www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.