இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர GATE 2018 தகுதித் தேர்வு!



 தகுதித் தேர்வு

இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) மற்றும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் பல உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் மேற்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறுவதற்கும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குமான பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு  2018 (Graduate Aptitude Test in Engineering  GATE 2017) அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இத்தகுதித் தேர்வு பொறியியல், தொழில்நுட்ப மேற்படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகள் போன்றவற்றுக்கான நிதியுதவியினைப் பெறுவதற்கும் உதவுகின்றன. மேலும், பாரத மிகுமின் நிறுவனம், இந்திய எண்ணெய்க் கழகம், தேசிய அனல் மின் நிறுவனங்கள், இந்திய அணு ஆற்றல் கழக நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், மின்கட்டமைப்புக் கழகம் போன்ற இந்திய அரசு நிறுவனப் பணிகளுக்கும் GATE தேர்வு மதிப்பெண் தகுதியும் ஒன்றாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்கான அமைப்பு: பெங்களூரிலிருக்கும் இந்திய அறிவியல் கழகம் மற்றும் மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்க்கி என ஏழு இடங்களிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் என்று மொத்தம் எட்டு கல்வி நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வினைச் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நடத்திவருகின்றன. 2018 ஆம் ஆண்டுக்கான தேர்வினை கவுகாத்தி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் நடத்தவிருக்கிறது.

தாள்கள்: இத்தேர்வு 1. Aerospace Engineering 2. Geology and Geophysics, 3. Agricultural Engineering, 4. Instrumentation Engineering, 5. Architecture and Planning, 6. Mathematics, 7.  Biotechnology, 8. Mechanical Engineering, 9. Civil Engineering,  10. Mining Engineering, 11. Chemical Engineering, 12. Metallurgical Engineering, 13. Computer Science and Information Technology, 14. Petroleum Engineering, 15. Chemistry, 16. Physics, 17. Electronics and Communication Engineering, 18. Production and Industrial Engineering, 19. Electrical Engineering, 20. Textile Engineering and Fibre Science, 21. Ecology and Evolution, 22. Engineering Sciences, 23. Life Sciences, என 23 தாள்களுக்கு நடைபெற இருக்கிறது.

கல்வித்தகுதி: GATE 2018 தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
பொறியியல்/தொழில்நுட்பம்/மருந்தாளுமை (BE/B.Tech/BPharm) அல்லது கட்டடக் கலை (B.Arch) அல்லது நான்காண்டு கால இளநிலை அறிவியல் (ஆய்வியல்) (B.Sc (Research)/B.S) படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருத்தல் வேண்டும்.அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினிப் பயன்பாடுகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளில் முதுநிலைப் பட்டம் (M.Sc/M.A/M.C.A or Equivalent) பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.

நான்காண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int.M.E/M.Tech) அல்லது இளநிலை அறிவியல் (Post -  B.Sc) படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2, 3 மற்றும் நான்காம் ஆண்டுகளில் படித்துக்கொண்டு, 2019ஆம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int.M.E/M.Tech) அல்லது இரண்டு பட்டப்படிப்புகள் (Dual Degree) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2018ஆம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள் (Int. M.Sc) அல்லது ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வியல் படிப்பு (Int.B.S-M.S) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.

மனிதவள மேம்பாட்டுத்துறை (MHRD), இந்திய தேர்வாணையக் கழகம் (UPSC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) போன்றவைகளால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் நடத்தும் பொறியியல் படிப்புகளுக்கு இணையான படிப்புகள் (B.E/B.Tech/B.Arch Equivalent examinations of Professional Societies, recognized by MHRD / UPSC / AICTE) (உதாரணமாக A.M.I.E, AMICE)

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://gate.iitg.ac.in  என்ற இணையதளத்தில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் படித்துத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் பொறியியல் பட்டதாரித் தகுதித்தேர்வு இணைய விண்ணப்பச் செயல்திட்ட அமைப்புக்கான (GATE Online Application Processing System (GOAPS)) http://appsgate.iitg.ac.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியாவிலுள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்யும் நிலையில், பொதுப்பிரிவினர் ரூ.1500, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.750 என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வெளிநாட்டுத் தேர்வு மையங்களைத் தேர்வு செய்யும் நிலையில், அடிஸ் அபாபா, கொழும்பு, டாக்கா மற்றும் காத்மண்டு (Addis Ababa, Colombo, Dhaka and Kathmandu) ஆகிய மையங்களுக்கு 50 அமெரிக்க டாலர் (US$ 50) என்றும், துபாய் மற்றும் சிங்கப்பூர் (Dubai and Singapore) மையங்களுக்கு 100 அமெரிக்க டாலர் (US$ 100) என்றும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 5.10.2017.

தேர்வு மையங்கள்: GATE-2017 தேர்வுக்கு இந்தியா மற்றும் வங்கதேசம், எத்தியோப்பியா, நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் முக்கிய நகரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனும் மண்டலத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில நகரங்கள் என்று மொத்தம் 47 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம்,
விருதுநகர் என 19 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம்.

ஆகமொத்தம் 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த பின்னர் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால், அதற்குரிய கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும். தேர்வு மையம் மாற்றிக்கொள்ளக் கடைசி நாள்: 17.11.2017.

அனுமதிச் சீட்டு: இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://appsgate.iitg.ac.in எனும் இணையதளத்திலிருந்து 5.1.2018 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அனுமதி அட்டையுடன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட கடவுச்சீட்டு (Passport), PAN Card, Voter ID, Aadhar UID, College ID, Employee ID, Driving License அடையாள அட்டையினைத் தேர்வு எழுதும் மையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். தேர்வு நாட்கள்: இணைய வழியில் நடத்தப்படும் இந்த கணினி வழித் தேர்வு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்தப்படும். GATE 2018 தேர்வு 3.2.2018, 4.2.2018 மற்றும் 10.2.2018, 11.2.2018 ஆகிய நான்கு நாட்கள் நடத்தப்பட இருக்கிறது.

தேர்வு முடிவுகள்: GATE 2018 தேர்வு முடிவுகள் http://gate.iitg.ac.in/ இணையதளத்தில் 17.3.2018 அன்று வெளியிடப்படும். இத்தேர்வுக்கான மதிப்பெண் அட்டையினை http://appsgate.iitg.ac.in எனும் இணையதளத்திலிருந்து 20.3.2018 முதல் 31.5.2018 வரை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

மதிப்பெண் சான்றிதழினை அலுவலகத்திலிருந்து தனியாகப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் படித்துத் தெரிந்துகொண்டு, அதற்கான கட்டணமாக ரூ.500 செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் வரைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள http://gate.iitg.ac.in எனும் இணையதளத்தினைப் பார்க்கலாம் அல்லது தமிழ்நாட்டிற்கான மண்டல அலுவலகமாக இருக்கும் சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது 044 - 22578200 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிந்துகொள்ளலாம்.

  - தேனி மு.சுப்பிரமணி