நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு தேவைதானா?சர்ச்சை

கருத்து சொல்கிறார்கள் கல்வியாளர்கள்!

நீட் பிரச்னையே இன்னும் முடிவு காணப்படாமல் இருக்கும் சூழலில் அடுத்ததாக தலைதூக்கியுள்ளது நவோதயா பள்ளி பிரச்னை. தமிழக மாணவர்களைத் தலைநிமிரவிடாமல் செய்வதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
குமரி மகா சபையின் செயலர் ஜெயக்குமார் தாமஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘கல்விக்காகத் தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும். இதனால், ஜவஹர் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும். இந்தப் பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இவ்வகைப் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசு போதிய இடங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், மாநில அரசு, இந்தப் பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’எனக் கூறப்பட்டிருந்தது.

ஜெயகுமார் தாமஸின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது குறித்து தமிழக அரசின் கருத்தை தெரிவிக்குமாறு  உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு வந்தவுடன்,  நவோதயா பள்ளிகள் பற்றிய விவாதங்கள் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்துக்கொண்டுள்ளது.

அவ்வகையில் ‘தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் அவசியம் தானா?’ என்ற கேள்வியைக்
கல்வியாளர்கள் பாடம் நாராயணன், இரத்தின புகழேந்தி, ராஜராஜன் ஆகியோரின் முன் வைத்தோம். அவர்களின் பார்வையில் நவோதயா பள்ளி அவசியமா என்பதைப் பற்றி இனி பார்ப்போம்.

பாடம் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையானது தமிழகத்தில் நவோதயா பள்ளி கள் கண்டிப்பாக திறக்கப்பட வேண்டும் என முடிவாகச் சொல்லவில்லை. மாறாக பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என தமிழக அரசை முடிவெடுக்க சொல்லியிருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவோதயா பள்ளிகள், இந்தியாவில் இருக்கும் அனைத்து பள்ளிகளும் எப்படி செயல்படவேண்டும் என்பதை காட்சிப்படுத்தும் விதமாக முன்மாதிரி பள்ளி களாக தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

இப்படி மாதிரி பள்ளிகளாகச் செயல்படும் பள்ளி களுக்கு மத்திய அரசு அதிக அளவில் நிதியை ஒதுக்குவதோடு மாவட்டத்திற்கு ஒன்று என தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரவும் மாநில அரசிடம் முறையிடுகிறது.

இப்படி உருவாகும் நவோதயா பள்ளியானது, மாவட்ட அளவில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வு வைத்து தன் பள்ளிக்கான மாணவ சேர்க்கையை நடத்துகிறது. தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தரமான கல்வியை கொடுத்தாலும் அப்பள்ளிகளில்  மொத்தம் எண்பது கிராமப்புற மாணவர்கள் தான் ஓராண்டிற்கு படிக்க இயலும்.

கிராமப்புற மாணவர்கள் தரமான கல்வியை பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக இத்திட்டம்  இருந்தாலும், வெறும் எண்பது மாணவர்கள் படிப்பதற்கு 30 ஏக்கர் நிலம், உயர்தர கட்டமைப்பு என ஒரு பள்ளிக்கு அதிக நிதியை ஒதுக்குவது என்பது அர்த்தமற்ற செயல். அதற்கு பதிலாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சமமான நிதியை வழங்கி தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் அளிக்கலாமே.

இதை செய்யாமல், நான் 99 சதவீத பள்ளிகளை மோசமாக வைத்துக்கொண்டு ஒரு பள்ளியை மட்டும் நாடு போற்றும் முன்மாதிரி பள்ளியாக உருவாக்குவேன் என்பது நியாயமற்ற செயல். மும்மொழி பாடத்திட்டங்களைக் கொண்ட இப்பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதன் காரணமாக தான் தமிழக அரசு தொடர்ந்து இத்திட்டத்தை எதிர்த்துக் கொண்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தின் மூலமாகப் பெரிய அளவில் கல்வி புரட்சி நடக்கவும் வாய்ப்பில்லை. ராஜீவ் காந்தி காலத்தில் அமல்படுத்தப்பட்ட இப்பள்ளிகளில் படித்தவர்கள் மட்டும் தான் திறமைசாலிகள் என்றும் அறிவாளிகள் என்றும் சொல்லும் அளவிற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்றும் கூட சாதாரண பள்ளிகளில் படித்தவர்கள் அதிகம் சாதித்தித்துள்ளனர். ஆகவே,  அனைவருக்கும் சமமான தரமான கல்வி என்பது அரசின் கடமை.

இன்டர்நேஷனல் ஸ்கூல், சி.பி.எஸ்.இ, மாநில அரசுப் பள்ளிகள் என  அனைத்து விதமான பள்ளிகளும்  தமிழகத்தில் இருக்கும் இச்சூழலில் நவோதயா பள்ளிகள் வருவது என்பது ஒரே கல்வியைப் போதிக்கும் வெவ்வேறு பள்ளிகள் என்ற எண்ணிக்கையில் தான் சேரும்.

இரத்தின புகழேந்திமத்திய அரசின் கொள்கைகளை தான் நவோதயா பள்ளிகளின் வழியே தமிழகத்தில் திணிக்கப் பார்க்கிறது மத்திய அரசு. உதாரணமாக, நவோதயா பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்ட மொழி. எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்தையும் கற்க வேண்டும் என்பது மாணவனின் கடமை. ஆனால், அவனுக்கு இதை ‘நீ படித்தே ஆகவேண்டும்!’ என ஹிந்தியை திணிக்க முற்படுவது எவ்விதத்தில் நியாயம்.

கல்வியானது  மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலில் இடம் பெயர்ந்தால் தான் மத்திய அரசு கல்வியில் ஆதிக்கம் செலுத்த நேரிடுகிறது. நவோதயா பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகிறது என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மும்மொழி பாடத்திட்டம் என்ற பெயரில் ஹிந்தியைத் திணிக்க முற்படுவது, தமிழ் சமூகத்தின் பண்பாடு, வரலாறுகளை தமிழ் மாணவனுக்கு வழங்காத பாடத்திட்டங்கள் என  இப்பள்ளிகளை தமிழகத்தில் கொண்டுவரும் மத்திய அரசின் நோக்கம்தான் தவறானது.

இப்பள்ளிகளின் பாடத்திட்டங்கள் தரமானவையாக இருந்தாலும் தமிழ் மாணவனுக்கு அத்தியாவசியமில்லாத வட இந்திய வரலாறுகளையும், அம்மொழியையும் கல்வியாக வழங்குவது என்பது அவசியமற்றது. மேலும் இப்பள்ளி தமிழகத்தில் வந்தால் மிகப்பெரிய அளவில் அறிவுப் புரட்சி ஏற்படும் என திட்டவட்டமாக கூற முடியாது.

நவோதயா பள்ளிகளில் படிப்பவர்கள் நீட் தேர்வுகளை எளிதில் வெல்லலாம் என தமிழகத்தின் நீட் ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. வெறும் போட்டித் தேர்வுகளுக்கு மட்டும்தான் கல்வியா? சகமனிதனிடம் சகோதரம் பேணுதல், பண்புள்ள சமூகத்தை உருவாக்குவதல் என மனிதனுக்கு பண்பை வளர்ப்பது தான் கல்வி. ஆகவே, வெறும் போட்டித் தேர்வுகளை வெல்வதற்காக மாணவர்களை உருவாக்குவதும், இப்பள்ளியில் படித்தால் தான் சிறப்பான மாணவன் எனக் காட்சிப் படுத்துவதற்காகவும் அதிக பொருட்செலவில் கொண்டுவரப்படும் இந்த நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு வேண்டாமே.

ஆர்.ராஜராஜன் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தேவையா? இல்லையா? என்பதைவிட இங்கு இருக்கும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது தான் சிறந்தது என்பது என் கருத்து. ஒரு கல்வியாளர் என்ற முறையில் என் ஆசை என்பது  தமிழகத்தில் இருக்கும் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தைக் குறைத்தாக வேண்டும் என்பதே. இன்னும்கூட பல கிராமப்புற மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நம்பித்தான் உள்ளனர். தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளை, அப்பள்ளிகளின் ஏதேச்சதிகாரம் ஆகியவற்றை குறைத்தல் அவசியம்.

தமிழகத்தில் இருக்கும் அரசுப்  பள்ளி

களின் தரத்தை மேம்படுத்த இயலாத  போது கூடுதலாக ஒரு பள்ளி தமிழகத்திற்கு எதற்கு? என்பதுதான் என் அடிப்படை வாதம். வெறும் மதிப்பெண்களுக்காகவும், போட்டித் தேர்வுகளை வெல்வதற்காகவும், ஸ்டேடஸ்காகவும் மாணவர்களை உருவாக்கும் தனியார் பள்ளிகளும், நவோதயா பள்ளிகளும் தமிழகத்திற்கு தேவையில்லையே.

இவை தரமான கல்வியே வழங்கினாலும் அவை அனைவருக்கும் போய்ச் சேராது என்பது தான் கொடுமையான விஷயம்.  தரமான கல்வியை போட்டித் தேர்வுகளின்றி, பேதம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்குவது தான் அரசின் கடமை. இக்கடமையை செயல்படுத்துவதில் அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

- குரு