உயிருக்கு உலைவைக்கும் ‘ப்ளூவேல்’ஆன்லைன் கேம்!



எச்சரிக்கை

உயிருக்கு உலைவைக்கும் ப்ளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்ததோடு சமூக வலைத்தளங்கள் அதற்கான லிங்குகள் அனைத்தையும் நீக்கவும் உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் தொடர்ச்சியாக இந்த விளையாட்டு மூலம் மாணவர்களின் இறப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இளைஞர்களின் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்திலும், புதுவையிலும் நிகழ்ந்துவிட்டது கொடுமையிலும் கொடுமை. இந்தத் தற்கொலை விளையாட்டைப்பற்றி ஐ.டி நிறுவன சி.இ.ஓ.வும் தொழில்நுட்ப வல்லுநருமான காம்கேர் கே. புவனேஸ்வரியும், உளவியல் மருத்துவரான ஜெயக்குமாரும் கூறிய விவரங்களைப் பார்ப்போம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி ஐ.டி நிறுவன சி.இ.ஓ,தொழில்நுட்ப வல்லுநர்சட்டம் போட்டெல்லாம் இந்த விளையாட்டை தடை செய்வது என்பது கடலில் அலை நிற்கும் வரை காத்திருக்கும் செயலாகும். ஏனெனில் ஆன்லைனைப் பொறுத்தவரை எந்த ஒரு அப்ளிகேஷனாக அல்லது சாஃப்ட்வேராக இருந்தாலும் அதன் லிங்க், மூலாதாரம் போன்றவற்றை முழுமையாக நீக்குவது என்பதெல்லாம் 100% இயலாத காரியமாகும்.

ஏனெனில் யோசிக்காமல் நாம் செய்யும் மவுசின் ஒரு கிளிக்கில் அல்லது ஸ்மார்ட் போனில் ஒரு டச்சில் தகவல்கள் பிரதி எடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். வெவ்வேறு வெப்சைட்டுகளில், தெரியாத லிங்குகளில், மறைமுக த்ரெட்டுகளில் நாம் தொடரும் அந்த விளையாட்டின் காப்பி எங்கெங்கோ வைரலாகப் பரவிவிடும். ஆன்லைனில் நாம் பதிவு செய்து வைத்திருக்கும் நம்மைப் பற்றிய தகவல்களும் அப்படியே.பிறகு என்னதான் செய்வது? அதற்கு முன் இந்த கேமைப் பற்றிய சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

அப்படி என்னதான் செய்கிறது ப்ளூவேல் கேம்?

கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் விளையாடப்படும் ப்ளூவேல் என்ற இந்த ஆன்லைன் கேமை விளையாடுபவர்களுக்கு 50 டாஸ்க்குகள் கொடுக்கப்படும். ஒவ்வொன்றாகச் செய்து அதைப் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். காலை 4.30 மணிக்கு எழுந்திருப்பது, நடுநிசியில் பேய்ப்படம் பார்ப்பது, கூர்மையான கத்தி முனையால் உடலில் அவர்கள் சொல்லும் உருவத்தை டாட்டூ போல் வரைந்துகொள்வது, அவர்கள் சொல்லும் நேரம் சுடுகாட்டுக்குச் செல்வது, ஆள் அரவம் இல்லாத ரயில்வே டிராக்குக்குச் செல்வது, மேம்பாலத் தடுப்புச் சுவரின் நுனியில் நிற்பது இப்படியாக ஒவ்வொரு டாஸ்க்கும் இருக்கும். இறுதியாகத் தற்கொலை செய்துகொள்ள உத்தரவு பிறப்பிக்கும் இந்த கேம். இதுவே இறுதி டாஸ்க்காக இருக்கும்.

அந்த கேமில் இருந்து பாதியில் விலக நினைத்தால்?

கேமை விளையாடுபவர்கள் பாதியில் நிறுத்திக்கொள்ள விரும்பினால் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். அவர்கள் பார்க்கின்ற தவறான வெப்சைட்டுகள், ஆபாச யு-டியூப் வீடியோக்கள், அவர்கள் சாட் செய்யும் தகவல்கள் போன்றவற்றை அம்பலப்படுத்துவோம் என்ற ரீதியில் அந்த மிரட்டல்கள் இருக்கும்.
எப்படி விளையாடுபவர்களின் தகவல்கள் அவர்களுக்குக் கிடைக்கிறது?

அந்த விளையாட்டை ஆரம்பிக்கும்போதே விளையாடுபவர்களின் சமூகவலைத்தளங்களில் இருந்து அவர்களின் பர்சனல் தகவல்கள் திரட்டப்பட்டு ப்ளூவேல் கேமின் டேட்டாபேஸுக்குச் சென்றுவிடுகிறது. பொதுவாகவே ஆன்லைனில் சமூக வலைத்தளங்களில் ஏராளமான ஆப்கள் சென்ற பிறவியில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள், அடுத்தப் பிறவியில் எங்கு பிறக்க இருக்கிறீர்கள், உங்களை மறைமுகமாக நேசிக்கும் உங்கள் நண்பரை அறிய வேண்டுமா எனப் பல்வேறு ஆசை வார்த்தைகள் மூலம் தூண்டில் போட்டு உங்களை அவர்கள் ஆப்களைப் பயன்படுத்த சுண்டி இழுக்கும்.

அதை கிளிக்செய்து உள்ளே நுழையும்போது ‘சமூக வலைத்தளத்தில் நீங்கள் பதிவு செய்துள்ள உங்கள் பர்சனல் தகவல்களைப் பயன்படுத்துகிறோம்’என்ற ஒரு எச்சரிக்கை தகவலை வெளிப்படுத்தும். நாம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஓகே என சொல்லி உள்ளே நுழையும்போது நம்
பர்சனல் தகவல்களை நம்மை அறியாமலேயே அவர்களுக்குத் தாரை வார்த்துக்கொடுக்கிறோம். ப்ளூவேல் கேமிலும் இதுதான் நடக்கிறது.

யார் தற்கொலை வரை செல்கிறார்கள்?

விளையாடும் அத்தனைபேருமே பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான். அறியா பருவம். டீன் ஏஜின் அத்தனை ஆர்வங்களையும் உள்ளுக்குள் பொதிந்து வைத்திருப்பவர்கள். செய்துதான் பார்ப்போமே என்ற த்ரில்லுக்காக எதையும் செய்யத் துணியும் பயமறியா கன்றின் செயல்பாடுகளை செய்யும் வயதினர். இந்த இரண்டு பிரிவினர்கள்தான் இந்தக் கொடூர கேமை கடைசிவரை விளையாடுகிறார்கள்.

நம் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது?

பொதுவாகவே நம் குழந்தைகளைப் பற்றி நமக்கு உயர்ந்த அபிப்பிராயமே இருக்கும். இப்போதெல்லாம் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால்கூட அவர்கள் தங்கள் அறையில் அடைந்து கிடக்கிறார்கள். கேட்டால் படிக்கிறார்கள், பிராஜெக்ட் செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் முந்திக்கொண்டு பெருமையாகப் பதில் சொல்கிறார்கள்.

தங்கள் பிரத்யேக அறையில் கதவைப் பூட்டிக்கொண்டு லேப்டாப்பில் அல்லது ஸ்மார்ட்போனில் அவர்கள் பிராஜெக்ட் செய்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் வீடியோ பார்க்கிறார்களா எனப் பெற்றோர் அறிந்துகொள்ள விரும்பவில்லை. டீன் ஏஜ் பருவத்தில் தனிமை, தனி அறை, உயர்
ரக லேப்டாப், ஹைகிளாஸ் ஸ்மார்ட் போன் என்றிருக்கும்போது அவர்கள் மனதுக்குள் படிப்புடன் சேர்ந்து பல்வேறு எண்ணங்களும் உண்டாவது இயற்கைதானே.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நிறைய பேச வேண்டும். தனி அறையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவ்வப்போது பார்க்க வேண்டும். மானிட்டர் செய்ய வேண்டும். பெற்ற பிள்ளைகளானாலும் அவர்களைக் கண்காணிப்பது தவறில்லை. ஏனெனில் நாம் கண்காணிக்கவில்லை என்றால் உலகமே அவர்களைக் கவனிக்கத் தொடங்கிவிடும். சதையும் ரத்தமுமாக நாம் பெற்ற செல்லங்களை ப்ளூவேல் கேம் உள்வாங்கிக்கொள்ளும்.
பெற்றவர்கள் சொல்லும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அவர்களால் செய்ய முடிவதில்லை.

 பின்பற்ற முடிவதில்லை. ஆனால், ப்ளூவேல் என்ற கேம் சொல்வதை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் மனித மூளையை மழுங்கடிக்க வைக்கிறது என்று பாருங்கள்.உளவியல் மருத்துவர் ஜெயக்குமார் ரஷ்யாவில் செயல்படும் தற்கொலை இயக்கத்தின் உறுப்பினரும், சைக்காலஜி மாணவனுமான பிலிப் என்பவர் கண்டுபிடித்ததுதான் இந்த ப்ளூவேல் கேம். சமூகத்திற்குத் தேவையில்லாத தனிமனிதர்களை  சமூகக் கழிவுகளாக இனம் கண்டு அவர்களை அகற்றி சமூகத்தை சுத்திகரிப்பது தான் அவர்கள் இயக்கத்தின் கொள்கைகள்.

உலகமெங்கும் இதுபோன்ற கேம் விளையாடு பவர்களில் பெரும்பாலானவர்கள் டீன் ஏஜ் எனச் சொல்லப்படும் இளம் வயதினர்தான். வயதின் காரணமாக எது சரி, எது தவறு என பிரித்துப் பார்க்கத் தெரியாதவர்கள் அவர்கள். அதிலும் டெக்னாலஜிகள் புகுந்து விளையாடும்  இந்த யுகத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தனிமை உணர்வும், வாழ்க்கை மீதான வெறுப்பும் குழந்தைகளிடையே ஒரு வெறுமையை ஏற்படுத்துகிறது.

வலைத்தளங்களில் இருக்கும்  நல்லது கெட்டதுகளை பெரியவர்களாலேயே தீர்மானிக்க முடியாத இக்காலத்தில் ஏதுமறியா குழந்தைகள்,  எதையும் செய்ய என்னால் முடியும் என இந்த இளம் வயதில்  இருக்கும் சாகச உணர்வின் காரணமாக வெகு சீக்கிரமே இப்படிப்பட்ட கேமினால் கவரப்
படுகின்றனர்.  இந்த கேமின் விதிமுறைகளே  தன்னைத் தானே காயப்படுத்த வேண்டும் என்பதைப் போதிக்கிறது.

கேமை கண்டறிந்தவர் உளவியல் மாணவரானதால் மெஸ்மரிஸம் எனப்படும் மனிதர்களை வசியப்படுத்தும் டிரிக்குகளைக்  கொண்டு கேமை உருவாக்கியுள்ளார். நள்ளிரவில் தூக்கத்தை கலைத்தால் அவனுடைய மனமானது டிஸ்டர்ப்பாகி இருக்கும். அப்போது அவனை சுடுகாட்டுக்கு செல்ல வைத்து மனிதனிடம் இருக்கும் பயத்தை குறைக்கிறது. டிப்ர‌ஷனால் பாதிக்கப்பட்ட உலக மக்கள் அனைவரும் தற்கொலை செய்யாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தற்கொலை மீதான பயம்தான்.

அதனால் சைக்கோ படங்களைப் பார், கொடூர கொலைகள் அதிகம் உள்ள படங்களை நள்ளிரவில் பார் என டாஸ்க்குகள் கொடுத்து தற்கொலை மீதான பயத்தை குறைக்கிறது. பின் உயரமான மாடிக்குச் சென்று போட்டோ எடுத்து அனுப்பச் சொல்கிறது. இதுவரை போகாத அந்த உயரமான இடத்தில் நின்று செல்பி எடுக்கும்போது மனதின் பயத்தின் விகிதம் மேலும் குறைகிறது. இப்படி தொடர்ந்து ஐம்பது நாட்களாக தன் கட்டளைகளை செய்யச் சொல்லி கடைசி டாஸ்க்கில் கேம் விளையாடுபவர்களை தற்கொலைக்கு துணிய வைக்கின்றது.

பாதியில் விலக நினைத்தால் தாங்கள் பார்த்த ஆபாச படங்களையும், செய்த டாஸ்க்குகளையும் வீட்டில் அனைவருக்கும் காட்டிவிடுவேன் என மிரட்டுகிறது. இந்த மிரட்டல்களாலே தொடர்ந்து அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. மேலும் ஒரு விஷயத்தை தனிமையில் தொடர்ந்து செய்து வந்தால் அவர்களின் மனம் அந்த விஷயத்திற்கு அடிமையாகிவிடும். டிரக் அடிக்ட் மாதிரி அதிலிருந்து மீள்வதே மிகவும் சிரமம். மனம் அந்த விஷயத்தையே தேடிக்கொண்டிருக்கும்.

இந்தப் பிரச்னையை சரி செய்ய ஸ்மார்ட் போன்களை வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள், பிள்ளைகள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இருபது நிமிடமாவது குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனம் விட்டுப் பேச வேண்டும். பள்ளிகளில் கவுன்சிலராக ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

மாணவர்களின் அனைத்துக் கஷ்டங்களையும், பிரச்னைகளையும் புரிந்துகொண்டு மனம் விட்டு பேசி கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். எவனோ ஒருவன் கொடுக்கும் கட்டளைகளை அதுவும் தன்னைப் பாதிக்கும் கட்டளைகளை தான் ஏன் செய்ய வேண்டும் என்ற சுய அறிவு மாணவர்களுக்கு  அவசியம். பிள்ளைகளிடம் அறிவை வளர்க்கும் ஆரோக்கியமான சூழலைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும், நம் சமூகமும் சேர்ந்து உருவாக்கினாலே இதுபோன்ற சிக்கல்களை எளிதில் தூக்கி எறியலாம்.

- குரு

படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்

மாடல்: கமலா தவநிதி