ஆயிரம் லைக்குகள் போடலாம்!



வாசகர் கடிதம்

முன்மாதிரி ஆசிரியர்கள், பள்ளிச் சீருடையில் பாடம் நடத்தும் தலைமை ஆசிரியர், தனியார் பள்ளிக்கு சவால் விடும் கொடுங்கையூர் மற்றும் பூம்புகார் அரசுப் பள்ளிகள் என ஆசிரியர் தின ஸ்பெஷல் கிளாசிக்காக இருந்தது. தேர்ந்தெடுத்த ஆசிரியர்களின் நற்பணிகள், கல்வியின் தரம், புது புது முயற்சிகள்  எனச் சுட சுட கட்டூரைகளைத் தந்து இப்படிப்பட்ட அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் அடையாளம் காட்டிய கல்வி - வேலை வழிகாட்டி இதழின் பணி சிறக்க வாழ்த்துகள்.
 - ஆர்.ராஜபாஸ்கர், திருத்தங்கல்.
 
ஒரு காலத்தில் ஓஹோவென இருந்த எஞ்சினியரிங் பட்டப்படிப்பு தற்போது படிப்பதற்கு ஆள் இல்லாமல், பல ஆயிரம் சீட்கள் காலியாக உள்ள அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது ‘எஞ்சினியரிங் படிப்புகளுக்கு மவுசு குறைந்தது ஏன்?’ என்ற கட்டுரை. எஞ்சினியரிங் கல்லூரிகளின் நிலைமையும், கல்வித் தரம், நடைமுறையில் உள்ள அவுட்டேட் பாடத்திட்டங்கள் என இதனுள் பொதிந்துள்ள காரணங்களையும் முழுமையாகவும் தெளிவாகவும் பட்டியலிட்டது பாராட்டுதலுக்குரியது.
- ஏ.லீனா, வேளாங்கன்னி.
 
நவீன தொழில்நுட்பங்களை எப்படி முறையாக கற்றலுக்குப் பயன்படுத்துவது என்பதை வழிகாட்டும் டெக்னாலஜி பக்க கட்டுரை, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வேலை ரெடி! பகுதி, கல்விச் செய்திகளை சுருக்கமாக வழங்கும் கேம்பஸ் நியூஸ் பகுதிகள் அருமை. இப்படி முக்கியமான செய்திகளையும், கட்டுரைகளையும் தொகுத்து  மாணவர்களுக்கு அருகிலிருந்து வழிகாட்டும் கல்வி-வேலை வழிகாட்டிக்கு ஆயிரம் லைக்குகள் போடலாம்!
- கே.மணிகண்டன், திருநள்ளார்.
 
கல்வி மறுக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் என்பது சமூகத்தை கேலி செய்யும் விதமாகவே உள்ளது. இந்நிலையை மனதில் வைத்து ‘பாதை’ தம்பதிகள் முயற்சி மேற்கொண்டு சிறப்பாக செயலாற்றிவருவது பாராட்டப்படவேண்டியது.

கல்வி யானது அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை உரிமை என்பதை அடித்து சொல்கிறது இக்கட்டுரை. ‘பசித்தவனுக்கு மீனை கொடுப்பதை விட மீன் பிடிப்பதை கற்றுக்கொடுத்தால் அதுவே நிரந்தரத் தீர்வாகும்’என்ற கூற்றை ஆணித்தரமாக உண்மையாக்கும் அமல், சுனிதா தம்பதியருக்கு வாழ்த்துகள்.
- வி.சீனிவாசன், தஞ்சாவூர்.