நல்ல விஷயம் 4போட்டித் தேர்வு

அறிய வேண்டிய மனிதர்வி.ஏ.சிவா ஐயாதுரை
 இரண்டாம் உலகப்போர் முடிந்து  அனைத்துத் துறையிலும் கணிசமான வளர்ச்சி அடைந்து அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருந்த  நேரத்தில், கணினிகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் என்பது அமெரிக்காவிற்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதுவரை தபால் வழியே தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தபோது  இந்தியாவைச் சேர்ந்த, தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சிவா ஐயாதுரை என்ற 14 வயது சிறுவன் இ-மெயிலைக் கண்டுபிடித்து கணினி வழித் தகவல் பரிமாற்றத்தை சாத்தியப்படுத்தினார்.

இவர் 1978-ல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை “EMAIL” என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிைம அலுவலகத்தில் இருந்து 1982-ல் பெற்றுள்ளார்.

இந்த ஸ்மார்ட் போன் யுகத்திலும் கூட தகவல் பரிமாற்றத்திற்கு முன்னோடியாகத் திகழ்வது இவர் கண்டுபிடித்த  இ-மெயில்தான். முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன்கூட இ-மெயில் குறித்த சந்தேகங்களுக்கு இவரை அணுகியுள்ளார். தன்னுடைய 14 வயதில் உலகமே வியக்கும் சர்வதேச தரத்தில்  இ-மெயில் எனும் இந்த சாஃப்ட்வேரை உருவாக்கிய பிறகுதான் மென்பொருள்களுக்கு காப்புரிமை பெறும் சட்டம் உலகமெங்கும் இயற்றப்பட்டது. இவரைப்பற்றி மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/சிவா_ஐயாதுரை

படிக்க வேண்டிய புத்தகம் வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் ச.சரவணன்
மனித வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உளவியல் ரீதியில் விவரிக்கும் நூலாகப் படைத்துள்ளார் இந்நூலின் ஆங்கிலப் பதிப்பான MAN’S SEARCH FOR MEANING என்ற நூலின் ஆசிரியர் விக்டர் பிராங்கல். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் வதைமுகாம்களில் மாட்டிக்கொண்ட பிராங்கல், அம்முகாம்களில்  துன்புறுத்தப்பட்டு இறந்த மக்களைப் பற்றிக் கூறாமல் உயிரோடு இருப்பவர்களின் மனநிலையைப் பதிவு செய்து, சாதாரண மனிதனின்  வாழ்விற்கும் சாவிற்கும் இடையே இருக்கும் நம்பிக்கை, அன்பு, மெய்மை எனும் வாழ்க்கையின்  நுண் அர்த்தத்தை வாசகனுக்கு வழங்கியிருக்கிறார்.

வதைமுகாம்களில் நிலவும் நெருக்கடி மற்றும் துன்புறுத்தலுக்கு நடுவே உயிர் வாழ்வதற்கும், எஞ்சியிருப்பதற்கும் ஆதாரமாக அவருக்கு அமைந்த நம்பிக்கையின் நீட்சியே இந்நூல். மனித விடுதலை, தன் மதிப்பு, வாழ்வின் அர்த்தம் குறித்த மெய்யான தேடல் பற்றிய ஆழ்ந்த பார்வையோடும் மனித மேன்மை குறித்த நோக்கோடும் உருப்பெற்றிருக்கும் புத்தகம் இது. இந்நூலைத் தமிழில் வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் என்ற தலைப்பில் அற்புதமாக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் ச.சரவணன். (வெளியீடு: சந்தியா பதிப்பகம், எண்:57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600 083. விலை:160. தொடர்புக்கு:044-24896979.)

பார்க்க வேண்டிய இடம்ம காகவி பாரதியார் நினைவு இல்லம் எட்டயபுரம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி அய்யர்-இலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாக 11.12.1882 ல் பிறந்தார் பாரதியார். இயற்பெயர் சுப்பிரமணியன், செல்லப் பெயர் சுப்பைய்யா. இவருடைய கவிபுனையும் ஆற்றலையும் அறிந்து எட்டயபுரம் ஜமீன் சூட்டிய பெயர் பாரதி. தமது கவிதைகள் மூலம் தமிழ்ப்பற்றையும், தேசபக்தியையும் ஊட்டி மகாகவியானார்.

பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949ம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம்
பாரதியாருடையதாகும். ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே’ எனப் பெண்ணுரிமையைப் பற்றிப் பாடினார். 1921ம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோயில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 1.30 மணிக்குக் காலமானார்.

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றிவருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13.02.2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_பாரதி

வாசிக்க வேண்டிய வலைத்தளம் http://www.tndce.in
பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மற்றும் முக்கியமாகப் பள்ளிக்கல்வி முடித்த அத்தனை மாணவர்களும் அறியவேண்டிய தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இது. அரசுக் கல்லூரிகள், அரசுடன் இணைந்து மற்றும் சுயமாகச் செயல்படுவது என மொத்தம்  தமிழகத்தில் இயங்கும் 1464 கல்லூரிகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பட்டியலிடுகிறது இத்தளம். மேலும் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப், தனக்கான துறையைத் தானே தெரிவு செய்வதற்கு வசதியாகவும், உயர்கல்வி குறித்த தெளிவு பெறவும் எனப் பலவிதங்களில் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் செயல்படுகிறது.