கேம்பஸ் நியூஸ்பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்குத் தடை!
கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல்கலாம் பிறந்த நாள், ஆண்டு விழாக் கொண்டாட்டம் போன்றவற்றின்போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அப்போது, சில தனியார் பள்ளிகளில் சினிமா நடிகர், நடிகையர் போன்று பேசுவது, நடிப்பது, திரைப்படப் பாடல்களை இசைக்கச் செய்து ஆடுவது உட்பட, பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவையெல்லாம், பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தைக் கெடுப்பதாக, உயர் அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றுள்ளன. அதனால், பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறி நடத்தினால் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் மாணவர்கள் புகார் அளிக்கலாம் எனப் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்க சிறப்புச் சலுகை!
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டு களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைப் பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாகச் சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இச்சலுகையைப் பெற விரும்பும் மனுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 22.8.2017 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 21.11.2017-க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக்கொள்ளலாம். அவ்வாறு நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாகப் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் 21.11.2017-க்குள் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அடுத்த ஆண்டு (2018)நடத்த உள்ள ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வில் கலந்துகொள்ள உள்ள மாணவர்களுக்குத் தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்க உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின்கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இலவச உணவு மற்றும் தங்கும் இடத்துடன் கூடிய இப்பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்கள் 225. அதில் எஸ்.சி. பிரிவினருக்கு 92, எஸ்.சி.(ஏ) பிரிவினருக்கு 18, எஸ்.டி. பிரிவினருக்கு 3, எம்.பி.சி. மற்றும் சீர்மரபினருக்கு 40, பி.சி.க்கு 54, பி.சி.(மு) பிரிவினருக்கு 7, மற்றுத்திறனாளி களுக்கு 7, பொதுப்பிரிவினருக்கு 4 இடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளன. இங்குப் பயிற்சி பெற விரும்புவோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 1.8.2017 தேதியின்படி 21 முதல் 32 வரை இருக்க வேண்டும்.

இலவசப் பயிற்சி பெற விரும்பும் தமிழக மாணவர்கள் இதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இலவசப் பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு நவம்பர் 5-ல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அரசு மையத்தில் ஏற்கெனவே முதல் நிலைத் தேர்வுக்கு முழுநேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள்  20.9.2017.

நாகரிக உடை அணிய பெற்றோருக்குப் பள்ளிகள் அறிவுரை!
மாணவர்களை அழைக்க வரும்போது, நாகரிகமான உடை உடுத்தி வருமாறும், கவர்ச்சியான உடைகளைத் தவிர்க்குமாறும், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் போன்றவற்றில் பெரும்பாலும் மாணவர்களே பள்ளிக்குச் சென்று, வீடு திரும்புவர். நகர்ப்புறம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மகளிர் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவியரை அழைத்து வர, பெரும்பாலும், பெற்றோரில் ஒருவரோ அல்லது உறவினரோ பள்ளி செல்வது வழக்கம். இப்படி, பள்ளிக்குச் செல்லும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் உறவினர்களில் பலர், சரியான உடைகளை அணிந்து செல்வதில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

ஆண்கள் லுங்கியைக் கால் முட்டிக்கு மேல் கட்டிச் செல்வது; அரைக்காலுக்கு மேல் டிரவுசர்கள் அணிந்து செல்வது, அழுக்கான உடைகளை அணிந்து ஒழுக்கமின்றிப் பள்ளிக்குள் நுழைவதாகப் புகார்கள் உள்ளன. பெண்களில் சிலர் அலங்கோலமாக, மாணவ மாணவியரின் கவனத்தைத் திசை திருப்பும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும், உடை அணிந்து செல்வதாகவும் பள்ளிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதையொட்டி சில அரசு மகளிர் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், பெற்றோருக்கு நாகரிகமான உடை அணிந்து வர வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.