தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு!



இந்தியாவில் ஆசிரியர் பயிற்சி பெறாமல், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நிறைய ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்குத் தேசியத் திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் (National Institute of Open Schooling) மூலம் கடைசி வாய்ப்பாகத் தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிப் பட்டயப்டிபடிப்பு அளிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

நிறுவனம்: இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் (Ministry of Human Resource Devlopment) தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டுவரும் தேசியத் திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் பொதுப்பாடப் பிரிவு மற்றும் தொழிற்கல்விப் பாடப்பிரிவுக் கல்வியை வழங்கிட 15 பிராந்திய மையங்கள், 2 துணை மையங்கள், 5,000 கற்றல் மையங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.  இந்நிறுவனத்தில் இடைநிலை வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பு ஆகியவற்றில் கல்வி கற்போர்கள் எண்ணிக்கை 2.02 மில்லியனாக இருக்கிறது. இதனால், இக்கல்வி நிறுவனம் உலகிலேயே மிகப்ரிய திறந்தநிலைப் பள்ளியாக இருக்கிறது.

பயிற்சித் திட்டம்: இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு இலவசக் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியராகப் பணியாற்றும் அனைவரும் தகுதியுடைய ஆசிரியப் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டம் 1.4.2010 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பின்பு, இந்தியாவில் தொடக்கப்பள்ளிகளில் உரிய ஆசிரியப் பயிற்சி பெறாமல் ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் ஐந்தாண்டு காலத்திற்குள் தகுதியுடைய ஆசிரியப் பயிற்சியினைப் பெற்றிட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.  

ஆசிரியப் பயிற்சி பெறாமல் ஆசிரியராகப் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிப்பது மிகவும் கடினமாக இருப்பதால், அவர்களுக்குத் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்திப் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தேசியத் திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இந்நிறுவனமும் அதற்கேற்ற பாடங்களை வடிவமைத்து இரண்டாண்டு கால அளவிலான தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிப் பட்டயப்படிப்பினை (D.El.Ed) வழங்கி வருகிறது.

பயிற்சிக்கான தகுதி: ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரையிலான தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் மேல்நிலைக்கல்வியில் 50% பெற்றிருக்க வேண்டும். எஸ்சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு உண்டு. இதேபோல் ஆறு முதல் எட்டு வகுப்புகள் வரையிலான உயர் தொடக்கநிலையில் இளநிலைப் பட்டம் (B.A/B.Sc) பெற்றுப் பயிற்சித் தகுதி யின்றி பணியாற்றி வருபவர்களும் இப்பயிற்சியில் சேர்க்கையினைப் பெற முடியும். இப்பயிற்சிச் சேர்க்கைக்கு மாநில அரசின் பரிந்துரை கட்டாயம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் ஆசிரியர் எவரேனும் 12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெறாமலிருந்தால், அவர்கள் (On Demand Examinations) மூலம் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை மேம்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிக்கு இந்நிறுவனத்திலேயே விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் 12ஆம் வகுப்பு மதிப்பெண் உயர்வுக்கான பயிற்சி, தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிப் பட்டயப்படிப்பு என இரண்டு பயிற்சிகளையும் இந்நிறுவனத்தின் வழியாக ஒரே நேரத்தில் பெறமுடியும்.

பயிற்சிக் காலம்: இப்பட்டயப்படிப்புக்குக் குறைந்தபட்ச பயிற்சிக்காலம் இரண்டாண்டு களாக இருக்கிறது. இருப்பினும், இத்திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் ஆசிரியரின் பதிவுநிலை (Registration) மூன்று ஆண்டுகள் வரை செல்லும். இப்பயிற்சிக்கு முதலாமாண்டு கட்டணமாக ரூ.4500 ஐ இணைய வழியில் செலுத்த வேண்டியிருக்கும்.

கடைசி வாய்ப்பு: 2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் பயிற்சி பெறாமல், அரசு/அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் 31-3-2019க்குள் குறைந்தபட்சத் தகுதியைப் பெற்றிட வேண்டும். இல்லையேல், தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், இந்தப் பட்டயப்படிப்பில் சேர்ந்து, உரிய ஆசிரியப் பயிற்சியினைப் பெற இந்த ஆண்டு கடைசி வாய்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

விண்ணப்பப் பதிவு: இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் தேசியத் திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் http://dled.nios.ac.in எனும் இணையப்பக்கத்திற்குச் சென்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கக் குறிப்பேட்டை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொண்டு, அதன் பிறகு, பதிவுக்கான நடைமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இப்பயிற்சியில் சேரக் கடைசி நாள்: 15.9.2017. 

சுய பயிற்சி: இப்பயிற்சியில் சேர்க்கை பெறுபவர்கள், ஆசிரியப் பணியில் அனுபவமுடையவர்கள் என்பதால், அவர்களாகவே சுயமாகப் பயிற்சி பெற்றுக்கொள்ள முடியும். இப்பயிற்சிக்கு உதவும் தானே கற்கும் பாடங்கள் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சுயம் (Swayam) அமைப்பின் https://swayam.gov.in இணையதளத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த அமைப்பின் தொலைக்காட்சி (Swayam Prabha Dth Tv) வழியாகவும் பார்க்கலாம். மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள தேசியத் திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் இணையதளம் அல்லது சுயம் அமைப்பின் இணையதளம் ஆகியவற்றைப் பார்வையிடலாம். மேலும், சென்னை, திருவல்லிக்கேணியில் லேடி வெல்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் தேசியத் திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது இவ்வலுவலகத்தின் 044 - 28442237, 28442239 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டோ தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  - உ.தாமரைச்செல்வி