அரசுப் பள்ளியை முன்மாதிரி பள்ளியாக்கிய ஆசிரியர்கள்!காலம் காலமாக அடுத்த தலைமுறைகளைப் படிப்பறிவுள்ள, குற்றமில்லா தூய சமூகமாக செதுக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது. அப்படி  அடுத்த தலைமுறை மாணவர்களை  வருங்காலக் சூழலுக்கு ஏற்றவாறு  செதுக்குவது என்பது சுலபமில்லை. தினம் தினம் எக்ஸ்பையர் ஆகி அப்டேட்டாகும் அறிவியலும், தொழில்நுட்பமும் கொண்ட வருங்காலம் என்பது வரலாறு காணாத போட்டிகளைக் கொண்டது.

அப்போட்டிகளை உள்வாங்கி  நுட்பமாக எதிர்கொண்டு தன்னம்பிகையுடன் செயல்படப் பயிற்சி அளித்து, அதே சமயம் சகமனிதனிடம் சகோதரத்துவத்துடன் பழகி அன்பு பாராட்டும் சமூகமாக உருவாக்கும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. இப்படி ஆசிரியர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் தங்கள் கொள்கைகளாகக்கொண்டு  சிறப்பாகச் செயலாற்றும் முன்மாதிரி ஆசிரியர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் வரிசையில் சென்னை கொடுங்கையூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் இடம்பெறுகின்றனர்.

ஸ்மார்ட் கிளாஸ், மாடித்தோட்டம், மீன் தொட்டி, ஏ.சி. கிளாஸ் ரூம், பயோமெட்ரிக் வருகைப் பதிவு எனத் தனியார் பள்ளிகளுக்குச் சவால் விடும் வசதிகளுடன் செயல்பட்டுவரும் இப்பள்ளியானது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்று தமிழகத்தின் சிறந்த பள்ளி களுள் ஒன்றாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இப்பள்ளி ஆசிரியரும் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத் தலைவருமான  இளமாறன்  இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, “இந்த அரசுப் பள்ளிக்குச் சுமார் ஐம்பது வயதாகிறது. 1999 ஆம் ஆண்டு  உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. அதுவரை பள்ளிக்கு இரண்டு கட்டடம் மட்டுமே இருந்தன. இது உயர்நிலைப் பள்ளியாக மாறியபோது மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் மாணவர்கள் படித்தார்கள்.  இப்பள்ளி மட்டுமல்ல அந்த நாட்களில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

தமிழ்நாட்டின் பல அரசுப் பள்ளிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக  இருப்பதை உணர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக நம் பள்ளி திகழ வேண்டும் என்பதை நான் ஆசிரியர் சங்கத் தலைவராகப் பொறுப்பில் இருக்கும்போது இலக்காகக் கொண்டேன். அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து புதுப் புது திட்டங்கள் தீட்டினோம்” என்ற இளமாறன் இன்று வரை மாணவர் சேர்க்கையில் வித்தியாசமான முறையைக் கையாண்டு வருகிறார்.“உயர்நிலைப் பள்ளியாகப் பரிணமித்த நேரத்தில் தனியார் பள்ளிகளை எதிர்கொண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதுதான் மிகவும் சவாலாக இருந்தது.

எனவே, நாங்கள் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று கல்வியின் அவசியத்தைக் கூறி இப்பள்ளியில் செயல்படுத்தப்போகும் திட்டங்களை மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் விளக்கி மாணவர் சேர்க்கையை செயல்படுத்தினோம். இன்றுவரை இதே நடைமுறையைத் தான் பின்பற்றி வருகிறோம். அடுத்தது மாணவர்கள் தாங்களே விரும்பி கல்வி கற்குமாறு  சூழலை உருவாக்க எண்ணினோம். மாடித்தோட்டம், மீன்வளர்ப்பு தொட்டி ஆகியவற்றை ஏற்பாடு செய்தோம். தோட்டத்தில் செடிகள் வளர்ப்பது, மீனுக்கு உணவு கொடுப்பது என மாணவர்களே ஆர்வமாக முன்வந்து தனக்குப் பிடித்ததைச் செய்கின்றனர்.

அப்படி மாணவர்கள் வளர்த்த காய்கறிகளைத்தான் சத்துணவிற்கு பயன்படுத்துகிறோம். பொதுவாக பயோமெட்ரிக் வருகைப் பதிவை ஆசிரியர்களின் பயன்பாட்டுக்குத்தான் உபயோகிப்பார்கள். ஆனால்,  நேரம் தவறாமை அனைவருக்கும்  அவசிய மானது என்பதால், எங்கள் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவை அமைத்தோம். பள்ளிக்குத் தனியாக ஒரு நூலகம் மற்றும் ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி நூலகங்கள் என அமைத்து பாடங்களை மட்டும் படிக்காமல் பொது அறிவு சார்ந்த விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்ளவும் ஊக்கப்படுத்துகிறோம்.  

மாணவர்களின் பிறந்தநாளுக்கு சாக்லேட் கொடுக்காமல் ஒரு புத்தகத்தைக் கொடுக்க வைக்கின்றோம். ஸ்மார்ட் கிளாஸ், ஏ.சி. வகுப்பறை, தவறுகளைக் கண்காணித்து திருத்த சி.சி.டி.வி. கேமரா, நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள தொலைக்காட்சிப் பெட்டி என படிப்படியாக திட்டம் போட்டு செயல்படுத்தினோம். இத்திட்டங்களின் பலனால்தான் தொடர்ந்து ஐந்து வருடம் எங்களால் பத்தாம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சி அடையமுடிந்தது” என்கிறார் இளமாறன்.

மேலும் தொடர்ந்த அவர், “பள்ளியின்  உள்ளே நுழையும்போதே மீன் தொட்டி மற்றும் பசுமையான தோட்டத்தைப் பார்த்துவிட்டு வருவதால் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுகின்றனர். பாசிட்டிவ் எண்ணங்களுடன் பாடங்களை படிக்கின்றனர்.  பத்தாம் வகுப்பு மாணவர்களை கூடுதல் அக்கறையுடன் கவனிக்கின்றோம். ஸ்பெஷல் கிளாஸ் வைக்கும் நாட்களில் தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற  ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தந்து கொஞ்சநேரம் எந்த சுமையையும் கொடுக்காமல் தூங்க வைக்கின்றோம். தூங்கி எழுந்த உடன் புத்துணர்ச்சியோடு வகுப்புகளைத் தொடர்கிறோம்.

இனி வரும் காலங்கள் டெக்னாலஜிகள் புகுந்து விளையாடும் அறிவியலின்  உச்சகட்டமாக இருக்கும். அச்சூழலை எதிர்கொள்ளப் போகும்  மாணவர்களுக்கு  நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாடங்கள் எடுக்கிறோம். இரண்டு கட்டடங்களுடன் இடிக்கப் போகும் நிலையில் இருந்த இந்தப் பள்ளியில் தற்போது முன்னூறு மாணவர்கள் படிக்கின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியிலும் சாதனை படைத்திருக்கின்றோம். தனியார் பள்ளிகளுக்குச் சவாலாக சென்னையில் ஒரு அரசுப் பள்ளி என்ற பெயரையும் பெற்றுள்ளோம். ஒரு அரசுப் பள்ளியில் இவ்வளவும் செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறோம். எங்கள் பள்ளியை  முன்மாதிரியாக வைத்து  ஆசிரியர்கள் செயல்பட்டு மற்ற அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோளாக முன் வைக்கின்றோம்” என்றார் நிறைவாக.

- குரு.