நல்ல விஷயம் 4



வளாகம்

அறிய வேண்டிய மனிதர்உடுப்பி ராமச்சந்திர ராவ்இன்று சர்வதேசத் தரத்தில் செயல்படும் இந்திய விண்வெளித் துறை ஆராய்ச்சி மையமான இஸ்ரோவை அணு அணுவாகச் செதுக்கியவர்களில் முதன்மையானவர் உடுப்பி ராமச்சந்திர ராவ். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா, இவரின் தலைமையில்தான் விண்ணில் ஏவப்பட்டது. கர்நாடக மாநிலம் அடமறு என்ற இடத்தில் மார்ச் 10, 1932ம் ஆண்டு பிறந்த இவர் தன் பிஎச்.டி இயற்பியல்  ஆராய்ச்சிப் படிப்பை இஸ்ரோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான விக்ரம் சாராபாய் வழிகாட்டுதலில் படித்து, காஸ்மிக் ரே விஞ்ஞானியாக அகமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆய்வகத்தில் பணியில் அமர்ந்தார்.

1972ம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை உருவாக்க தலைமை ஏற்று அதனைத் தொடர்ந்து பாஸ்கரா, ஆப்பிள், ரோகினி என மொத்தம் 18 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ வழிவகை செய்தார். இயற்பியல், விண்வெளி, எலக்ட்ரோ மேக்நெட்ஸ் போன்ற துறைகளில் இவர் செய்த சாதனைகளைக் கவுரவிக்கும் பொருட்டு  பத்மபூஷன், பத்மவிபூஷன் உட்பட மொத்தம் 32 விருதுகளை அளித்து இந்திய அரசு இவரைப் பெருமைப்படுத்தியது. மேலும் அறிவியல், விண்வெளி போன்ற துறைகளுக்காக 16 சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.  இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Udupi_Ramachandra_Rao

பார்க்க வேண்டிய இடம்  திருமயம் மலைக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள இம்மலைக்கோட்டையானது 1676ம் ஆண்டு ராமநாதபுரத்தை ஆண்ட விஜயரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின்  காலத்தில் கட்டப்பட்டது. தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோட்டையில் சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் குடைவரை கோயில்கள் உள்ளன. இது வட்டவடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காணமுடியும். 16ம் நூற்றாண்டில் அக்கால ஆழ்வார்களால் பாடல்பெற்ற தலம். இங்கே இசைக் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் இவ்வூர் வைணவர்களின் சிறப்புமிக்க இடமாகக் கருதப்படுகிறது.ராமநாதபுரம் சேதுபதிகள் 16, 17ம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தனர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இந்த ஊர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம். ராமநாதபுரத்துக்கு எல்லையாகத் திருமயம் கோட்டை இருந்துவந்துள்ளது. எதிரிகளிடமிருந்து பாதுகாக்க இக்கோட்டையில் பிரம்மாண்ட பீரங்கிகள் வைத்து காத்துவந்துள்ளார்.   இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடைவாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப்போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/ திருமயம்_மலைக்கோட்டை

படிக்க வேண்டிய புத்தகம்
திருக்குறள் அறத்துப்பால் தெளிவுரை - பி.வி சண்முகம்
‘திருக்குறளைக் கற்பதற்காகவே தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினேன். ஆனால், அதற்கான ஓய்வை ஆண்டவன் எனக்கு அருளினாரில்லை’என மகாத்மா காந்தி திருக்குறளைக் கற்க இயலாமல் வருத்தப்பட்டார். இவ்வகையில் தமிழகத்தில் பிறந்த அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்தான்.  செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்பை உலகமே போற்றும் வகையில் பெருமையடையச் செய்தது திருக்குறள். மனிதன் எப்படி வாழவேண்டும் என அறம் சார்ந்த கொள்கைகளை நெறிப்படுத்தி உலகமே வியக்கும் உலகப் பொதுமறையாக வானுயர்ந்து நிற்கிறது.  இத்தகைய பெருமைகளோடு  அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மனிதனின் வாழ்வை படம்பிடித்துக் காட்டும் திருக்குறளுக்குப் புலவர் பெருமக்கள் பலர் உரை எழுதியுள்ளனர். அதேபோன்ற ஒரு முயற்சியாக இந்நூலின் ஆசிரியர் பி.வி.சண்முகம் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என மொத்தம் 38 அதிகாரங்களைக்கொண்ட அறத்துப்பாலின் ஒவ்வொரு குறளுக்கும் தெளிவான முறையில் உரை எழுதி,  ஒவ்வொரு அதிகார முடிவிலும் அவ்வதிகாரத்தின் மையக்கருத்தை எழுதி தெளிவாக்கியிருப்பது தனிச்சிறப்பு. அனைவரும் அறம் சார்ந்த விஷயங்களை ரத்தினச்சுருக்கமாகப் புரிந்துகொள்ள உதவும் இந்நூல். (வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண்-4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை- 600 017. விலை ரூ.90. தொலைபேசி: 044-2434 2926/2434 6082)

வாசிக்க வேண்டிய வலைத்தளம் https://kalvikathir.blogspot.in
கல்வித்துறை சார்ந்த அன்றாட செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்யும் இந்தத் தளமானது பொதுச் செய்திகள், அரசாணைகள், வேலைவாய்ப்புச் செய்திகள், வரலாற்றுப் பதிவுகள், பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாக்கள், பாரதியார் பாடல்கள், பொருளாதாரம் எனச்  சமூகம் சார்ந்த நிகழ்வுகளைப் பதிவேற்றி  பாரதி தாசனின் ‘பார்வையை அகண்டமாக்கு’ என்ற வரிக்கு ஏற்றாற்போல் செயல்படுகிறது. மேலும் தினசரி நாளிதழ்கள், ஆன்லைன் பேங்கிங், தமிழ்நாட்டின் மாவட்ட அளவிலான வரைபடங்கள் எனப் பன்முகத்தன்மையோடு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சிறந்த வழிகாட்டியாகச் செயல்படுகிறது.