ஓவியம் வரைந்து அசத்தும் ஆட்டிஸ மாணவர்கள்!



சேவை

ஆட்டிஸ குறைபாடு உள்ள குழந்தைகள் பொதுவாகவே கொஞ்சம் வன்முறை செயல் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.  நம் உலகத்தைவிட முற்றிலும் வேறுபட்ட உலகம் அவர்களுடையது. அந்த உலகத்தில் அவர்களுக்குப் பரிச்சயமில்லாத நபர்களைக் கண்டால் ஆக்ரோஷத்துடன் அந்த நபர்களை வெறுப்பார்கள் என ஆட்டிஸ குழந்தைகளைப் பற்றி கூறப்படும் செய்திகள் புதிதல்ல.  ஆனால், ஆட்டிஸம் என்பது மூளையின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்புசார்ந்த குறைபாடே தவிர, அது ஒரு மனநோய் அல்ல. இயல்பான மனிதர்களின் செயல்பாடு களுக்கு முற்றிலும் நேர் எதிரான செயல்பாடுகளைக் கொண்ட அவர்களுக்கு இருப்பது நோய் அல்ல குறைபாடு மட்டும் தான்.

இந்தக் குறைபாடு அவர்களின் மூளையின் ஆற்றலை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்  ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட முத்துகுமார் மற்றும் நவீன். சாதாரண மனிதர்களிடம் சாமானியமாக  பழகுவதற்கான குணங்களிலும், பழக்கவழக்கங்களிலும் பாதிப்பு உடையவர்களாக இருந்தாலும், ஆட்டிஸ குழந்தைகள் சாதாரண மனிதர்களுக்கு நிகரான அறிவை பெற்றுள்ளனர் என்பதை நிரூபிக்குமாறு சமீபத்தில் அரங்கேற்றபட்டது இந்த ஆட்டிஸ குழந்தைகள் வரைந்த  ஓவியக் கண்காட்சி. இக்குழந்தைகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டும், இக்கண்காட்சியை அரங்கேற்றியவருமான உஷா ரவிசங்கர் ஆட்டிஸ குழந்தைகளுக்கான  ஃபுட்பிரின்ட் என்ற பள்ளியை நடத்தி வருகிறார் உஷா. 

சமீபத்தில் நடந்துமுடிந்த ஓவிய கண்காட்சியைக் குறித்து நம்மிடம் கூறும்போது, “நவீன் மற்றும் முத்துகுமார் வரைந்த சுமார் 66 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வேறு எந்த ஒரு ஓவியத்தின் தாக்கமும் இல்லாமல்  வரைந்த அவர்களின் அனைத்து ஓவியங்களும் தனித்துவம் கொண்டவை. முழுக்க முழுக்க அவர்களின் உலகத்தில் அவர்கள் கண்ட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு கற்பனையும் எதார்த்தமும் கலந்து வரையப்பட்ட அவர்களின் ஓவியங்கள் மனிதர்களின் உலகத்தோடு தொடர்புடையவையாக ஆகியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
 
இந்த ஓவியங்க ளில் இயற்கை மற்றும் விலங்குகள் மீது தீராக் காதல் கொண்ட  நவீனின் ஓவியங்களில் நீர்வீழ்ச்சி ஓவியமும் ஒன்று. இயற்கையின் அழகை தத்ரூபமாக செதுக்கி, நீர் வீழ்ச்சி எங்கு தொடங்குகிறது என்பது தெரியாத மாதிரி தொடங்கி நீர்வீழ்ச்சி நம்மை நோக்கி விழுமாறு முடித்து 3D-க்கு நிகரான ஓவியத்தை நவீன் வரைந்தால், முத்துகுமார் கடவுள்களையும், ஆன்மீகத்தின் பல பரிமாணங்களையும் மையமாக வைத்து அவற்றில் பல்வேறு  வர்ணங்களை சேர்த்து கலாசாரம் சார்ந்த ஓவியங்களை வரைந்துள்ளார்” என கவித்துவமாக தொடர்ந்த உஷாவிடம், நவீன் - முத்துக்குமாருக்கு ஓவியம் மீது காதல் பூத்த தருணம் பற்றி கேட்டோம். “இவங்க இரண்டு பேரும் எங்க ஸ்கூல்ல சேர்ந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முடிஞ்சுபோச்சு. ஆரம்பத்துல இந்த இரண்டு பேருக்குள்ளும் இவ்வளவு பெரிய ஓவியன் இருப்பான் என்று எனக்கு தெரியல. மத்த குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் அதே நடைமுறை பயிற்சியைத்தான் முதல்ல இவங்களுக்கும் கொடுத்தோம். அப்படி சாதாரணமாக விளையாடிக்கிட்டும், எழுதிக்கிட்டும், கணக்கு போட்டுக்கிட்டும் இருந்தபோது ஒரு நாள் கணிதத்துல இருக்குற முக்கோணம், செவ்வகங்களுக்கு கலர் கொடுக்க ஆரம்பிச்சான் நவீன். இப்படி கலர் பென்சிலை உபயோகப்படுத்த தொடங்கியதிலிருந்து தன் கற்பனைக்கு உயிர் கொடுக்க தயாரானான். தன்னோட உணர்வுகளையும், எண்ணங்களையும்  ஓவியங்கள் வழியாக எங்களுக்கு புரியவைத்தான். அப்போதுதான் அவனுக்குள் இருந்த ஓவியன் பிரகாசமாக எனக்குத் தெரிய
ஆரம்பிச்சான். ஆனால், முத்துகுமாரோ முதல்ல ஓவியங்கள் வரையவில்லை. மாறாக மத்தவங்க பெயின்ட் பண்றத உன்னிப்பாக கவனிப்பான். அந்த நேரத்துல அவன யாரும் தொந்தரவு பண்ணக்கூடாது. மத்த பசங்களோட ஓவியங்களை பாத்து தனக்கான பாதையைத் தெரிவு செய்து அதில் இறங்கி அசத்த ஆரம்பிச்சான்.

இப்படி இவங்களுக்குள்ள இருக்குற ஓவியன் எனக்கு தெரிஞ்சதும் முதல்ல ஸ்கூல் சுவரில் ஓவியங்கள் வரையச் சொன்னேன். அப்படி அவர்கள் வரைந்த ஓவியங்களுக்கு பொதுமக்கள் கிட்ட இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சுது. யாருனே தெரியாத ஒருத்தர் வந்து “உங்க ஸ்கூல் பெயின்டிங் ரொம்ப நல்லா இருக்கு. இதே மாதிரி எங்க வீட்டு சுவர்களையும் அழகுபடுத்த முடியுமா?’’னு கேட்டார். அவங்க வீட்டுல நவீன் வரைந்த ஓவியங்களின் அழகை கண்டு இன்றும் அவர் நவீனை உச்சி முகந்து மெச்சிக்கொண்டு இருக்கிறார். ஆயில் பெயின்டிங், அக்ரலிக் பெயின்டிங் என ஓவியங்களின் உருவாக்கத்தில் அடுத்த கட்டத்தை இவர்கள் எட்டியிருந்தபோதுதான் கண்காட்சி அரங்கேற்றப்பட்டது” என்ற உஷா இவர்களின் படிப்பை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.  பாடங்கள் மீது துளியும் விருப்பம் இல்லாதவர்கள்தான் இவர்கள். ஆனால், கல்வி என்பது அனைத்து குழந்தைகளுக்கு அத்தியாவசியமானது. ஆகவே, ஓவியத்தில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது கல்வியிலும் சாதிக்க வேண்டும். அதன் காரணமாகவே அவர்களை படிப்பிற்கு தயார்படுத்தினோம். நவீன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளான். அதே சமயத்தில் முத்துகுமாரோ பத்தாம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ளும் தயார்நிலையில் உள்ளான்.

சாதாரண மனிதர்களைப் போன்ற செயல்களை செய்யாததால் சமூகமே இவர்கள் மீது இரக்கம் காட்டுவதும், ஓரம் கட்டுவதுமாக உள்ளது. இவர்களுக்கு இரக்கம் தேவையில்லை. இவர்களின் உலகத்தை முழுமையாக தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் செயல்பட்டு அவர்களின் திறமையறிந்து அவர்களுக்கு உத்வேகம் மட்டும் கொடுத்தால் போதும் இயல்பான மனிதர்களைக் காட்டிலும் மிகச்சிறப்பாக இவர்களால் செயல்படமுடியும். இந்த சமூகத்திடம் நான் கேட்டுக்கொள்வது இது மட்டும்தான்” என உணர்வுபூர்வமாக பேசி முடித்தார் உஷா.
- குரு