இந்திய முறை மற்றும் ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்புகள்!



விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

உயர்கல்வி வாய்ப்பு

+2க்குப் பிறகு எம்.பி.பி.எஸ். (MBBS) மற்றும் பி.டி.எஸ். (BDS) போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர வேண்டுமானால் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் (National Eligibility Cum Entrance Test - NEET (UG)) பெற்ற தகுதி மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை என்றாகிவிட்டது. இந்நிலையில், +2 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று மருத்துவப் படிப்புக் கனவுகளுடன் இருந்த மாணவர்களுக்கு ஆறுதலாக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான 5½  (ஐந்தரை) ஆண்டு கால அளவிலான இந்திய முறை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கல்லூரிகள்: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், இயற்கை மற்றும் யோகா அறிவியல், யுனானி மருத்துவம் என ஐந்து வகையான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. சித்த மருத்துவக் கல்லூரிகள்: திருநெல் வேலி (பாளையங்கோட்டை), சென்னை ஆகிய இரு இடங்களில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் 160 இளநிலை சித்த மருத்துவப் பட்டப் படிப்பு (B.S.M.S. - Bachelor of Siddha Medicine and Surgery) இடங்கள் இருக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுக்கடை, திருவட்டார் எனும் இரு இடங்களிலும், கோயம்புத்தூர், சேலம், சென்னை மற்றும் பெரும்புதூர் என்று ஆறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் 310 இடங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்: நாகர் கோவிலில் இருக்கும் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இளநிலை ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பு (B.A.M.S. - Bachelor of Ayurvedic Medicine and Surgery) இடங்களும், கோயம்புத்தூர் (சூலூர்), பெரும்புதூர், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், சென்னை ஆகிய நான்கு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் 190 இடங்களும் இருக்கின்றன. ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருக்கும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இளநிலை ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பு (B.H.M.S. - Bachelor of Homoeopathic Medicine and Surgery)  இடங்களும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கோயம்புத்தூர் (சூலூர்) மற்றும் கோயம்புத்தூர் (ஜி.என்.மில்ஸ் அஞ்சல்), சேலம் (பெருமாம்பட்டி), சென்னை (போரூர்), சென்னை (மேற்குத் தாம்பரம்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், குலசேகரம் ஆட்டூர் எனும் மூன்று இடங்கள் என்று மொத்தம் ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் 610 இடங்களும் இருக்கின்றன.

இயற்கை மற்றும் யோகா அறிவியல் கல்லூரிகள்:  சென்னையிலுள்ள இயற்கை மற்றும் யோகா அறிவியல் கல்லூரியில் 60 இளநிலை இயற்கை மற்றும் யோகா அறிவியல் பட்டப்படிப்பு (B.N.Y.S. - Bachelor of Naturopathy and Yogic Sciences) இடங்களும், சேலம் (பெருமாம்பட்டி), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், கோயம்புத்தூர் (நவக்கரை) ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் 200 இடங்களும் இருக்கின்றன.

யுனானி மருத்துவக் கல்லூரி: சென்னையிலிருக்கும் அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இளநிலை யுனானி மருத்துவப் பட்டப்படிப்பு (B.U.M.S. - Bachelor of Unani Medicine and Surgery) இடங்கள் இருக்கின்றன. மாணவர் சேர்க்கை இடங்கள்: மேற்காணும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், சிறுபான்மையினருக்கான கல்லூரி களில் இருக்கும் மொத்த இடங்களில் அரசு ஒதுக்கீடு 50%, நிர்வாக ஒதுக்கீடு 50% என்றும், சிறுபான்மையினரல்லாத கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 65%, நிர்வாக ஒதுக்கீடு 35% என்று கணக்கிடப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி களில் இருக்கும் 100% இடங்களுடன், சுயநிதிக் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட இருக்கின்றன. கல்வித்தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்து, அப்பாடங்களின் மொத்த மதிப்பெண் 50% குறையாமல் பெற்று முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2-ல் தொடர்புடைய தொழிற்கல்விப் பாடப்பிரிவில் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த மருத்துவப் படிப்புகளுக்கான பொது விண்ணப்பத்தினை ரூ.500-க்கான வங்கி வரைவோலையினை ‘Director of Indian Medicine and Homeopathy, Chennai-106’ எனும் பெயரில் சென்னையில் மாற்றத் தக்க வகையில் பெற்று மேற்காணும் அரசு இந்திய முறை மருத்துவக் கல்லூரி களில் நேரில் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் வேண்டுதல் கடிதத்துடன் ரூ.70 மதிப்பிலான அஞ்சல்தலை ஒட்டிய 33 செ.மீ X 14 செ.மீ எனும் அளவிலான உறையினை இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் சாதி சான்றிதழின் நகல் மற்றும் +2 மதிப்பெண் சான்றிதழின் நகலை சுய அத்தாட்சி (Self Attested) கையொப்பமிட்டு வழங்கி கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

 சிறப்புப் பிரிவினர்: முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனுடையோர், இந்திய அரசால் பரிந்துரைக்கப்படுவோர்,  பதிவு பெற்ற இந்திய முறை பரம்பரை மருத்துவர்களின் குழந்தைகள், +2 பாடத்திட்டத்தில் சித்தா பாடத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் ஆகியோர் சிறப்புப் பிரிவினராகக் கருதப்படுகின்றனர். இவர்கள் பொது விண்ணப்பப் படிவத்துடன் சிறப்புப் பிரிவிற்கான சிறப்புப் பிரிவு படிவத்தினைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்புப் பிரிவுக்கான படிவத்தினை ‘Director of Indian Medicine and Homeopathy, Chennai-106’ எனும் பெயரில், ரூ.100-க்கான வங்கி வரைவோலை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு சிறப்புப் பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பத்தினைப் பெற்று ஓர் உறையில் அதிகபட்சமாக மூன்றிற்கு மிகாமல் சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் பொது மற்றும் சிறப்பு விண்ணப்பப் படிவத்தினை www.tnhealth.org எனும் இணைய முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அதற்குரிய கட்டணத்துக்கான வங்கி வரைவோலையைப் பெற்று இணைத்து அனுப்பிட வேண்டும். விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால், அவர்கள் உரிய சான்றிதழினைப் பெற்று அனுப்பிட வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரரின் குடும்பத்தில் அவரது உடன் பிறந்தோர் இச்சலுகையினைப் பயன்படுத்தியிருக்கக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தினை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளவும், இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளவும் கடைசி நாள்: 30.8.2017. நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றிதழ் நகல்களுடன், ‘Secretary, Selection Committee, Directorate of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Govt. Hospital of Indian Medicine Campus, Arumbakkam, Chennai  600 106’ எனும் முகவரிக்கு 31.8.2017 பிற்பகல் 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைத்திட வேண்டும்.கலந்தாய்வு: விண்ணப்பதாரர்களின் +2 மதிப்பெண்களில் உயிரியல் (X), இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் (Y), தாவரவியல் மற்றும் விலங்கியல் (Z) எனக் கொண்டு ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்களுக்குக் (சதவிகித அளவில்) கணக்கிடப்பட்டு, பின்னர் X + Y அல்லது Z + Y என்று 200 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை மேற்காணும் இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். மாணவர் சேர்க்கை: கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள், மேற்காணும் அரசு மற்றும் சுயநிதி இந்தியமுறைக் கல்லூரிகளில், தாங்கள் விரும்பும் மருத்துவப் படிப்புகளைத் தேர்வு செய்து சேர்க்கைக்கான அனுமதியினைப் பெறலாம். தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும். மேலும் தகவல்களை அறிய மேற்காணும் இணையதளத்திலிருந்து தகவல் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம் அல்லது சென்னை, அரும்பாக்கத்திலுள்ள இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது அலுவலகத்தின் 044- 26216244 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிந்துகொள்ளலாம். 
- தேனி மு. சுப்பிரமணி