கல்விக்கு ஒதுக்கிய நிதியைப் பயன்படுத்தாத தமிழக அரசு!



சர்ச்சை

மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கிய தொகை ரூ.87,000 கோடியை மாநில அரசுகள் உபயோகப்படுத்தாமல் வைத்துள்ளன என CAG (Comptroller and Aditor General of India) அறிக்கை கூறுகிறது. அதேநேரத்தில், 37 சதவீதம் பள்ளிகளில் மின்சார வசதிகள் இல்லை என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் புதிது புதிது ஆட்சி புதிது. முதல்வர் புதியவர். கல்வி அமைச்சர் புதியவர். பள்ளிச் செயலரும் புதியவர்... என்று அடுக்கடுக்காக புதிய புதிய அறிவிப்புகளும் பள்ளிக்கல்வித் துறையில் வரத் தொடங்கிவிட்டன. ஆனால், பள்ளிக் கட்டடங்களும், மாணவர் களின் கல்வித்திறனும் பழைய நிலையிலேயே உள்ளன. இந்த நிலை குறித்து ஆதங்கத்துடன் பல உண்மைகளைப் பட்டியலிட்டார் 46 ஆண்டுகளாக தலைமையாசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும், கல்வியாளராக கல்விப் பணியாற்றிவரும் தேசிய விருதுபெற்ற கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி. “சமூகத்தில் விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் கருவிகளுள் வலிமையான ஆயுதம் கல்வியே ஆகும். சமூகம், பொருளாதாரம், நலவாழ்வு, மொழி, கலை, பண்பாடு ஆகிய அனைத்து வளர்ச்சிகளுக்கும் கல்வியே முக்கியக் காரணமாக அமைகிறது என்பது மகாத்மா காந்தி, தாகூர், விவேகானந்தர், அரவிந்தர், ரூசோ, புரோபெல், பெரியார் போன்ற அனைத்துக் கல்வியாளர்களின் ஒருமித்தக் கருத்தாகும்.

இப்படி சிறப்பான வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் வித்தாக அமையும் கல்விக்குச் செலவிடும் தொகை மனிதவள மேம்பாட்டிற்காகச் சேர்த்து வைக்கப்படும் நீண்டகால வைப்புத்தொகை போன்றது. ஒவ்வொரு தனிமனிதனும் தான் வாங்கி நுகரும் ஒவ்வொரு பொருளுக்கும் கல்விக்கென ஒரு வரியைச் செலுத்துகிறான். ஆனால், கல்வி இன்று தமிழகத்தில் சீரழிந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது கல்வி என்பது மாநில உரிமையிலிருந்து எடுக்கப்பட்டு மத்திய மாநிலப் பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. மத்திய மாநில அரசின் அரசியல் கொள்கைகள் கல்வியின் தனித்துவத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கி, இரு அரசுகளின் உரிமைப்போரில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது கல்வி. நீதிமன்றங்களும் தன்பங்குக்குத் தலையை நுழைத்துக் கல்வி என்பதையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கோர் எடுத்துக்காட்டாக மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கான அனைத்திந்திய தகுதி நுழைவுத்தேர்வினைக் (NEET) குறிப்பிடலாம்” என்கிறார் முருகையன்.

“தமிழ்நாட்டில் நடைபெறும் பொதுத்தேர்வுகளுக்கு முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடல்; 11வது வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்துதல்; மேனிலைத்தேர்வு மதிப்பெண்களை 1200லிருந்து 600க்கும் தேர்வு நேரத்தை 3 மணியிலிருந்து இரண்டரை மணி நேரமாக மாற்றுதல்; பாடத்திட்ட மாற்றம்; மூன்று விதமான வண்ணச் சீருடைகள்; பள்ளி திறக்கும்போதே தேர்வுத் தேதிகள் அறிவித்தல்; உயர், மேனிலைப்பள்ளிகட்கு நாப்கின் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கல்; தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் மாற்றுச்சான்று (TC) வழங்கல்; மழலையர் பட்டமளிப்பு விழா நடத்துதல் போன்ற புதிய புதிய பகட்டான அறிவிப்புகள் தமிழ்நாட்டில் தற்போது வரத்தொடங்கியுள்ளன. இவ்வாறான சூழலில்தான் ‘‘கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மாநிலங்கள் செலவழிக்கவே இல்லை” என இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாணையம் (CAG) அதிர்ச்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் இதுவரை ஒதுக்கீடு செய்த தொகையில் ரூ.87,000 கோடி மாநிலங்களால் செலவழிக்கப்படாமல் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 6 வயது முதல் 14 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்குக் கட்டாயக்கல்வி அளிக்க ஒவ்வொரு மாநிலத்துக்கும்  ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.87,000 கோடி செலவழிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். கல்வியில் மிகவும் பின்தங்கிய பீகார் மாநிலத்தில் மட்டும் ரூ. 26,500 கோடி உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலுமான கணக்கெடுப்பு இது.

நாட்டிலுள்ள 37 சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் மின்சார வசதியே இல்லை என்பது கேள்வி ஒன்றிற்கு மாநிலங்கள் அவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா எழுத்து மூலம் அளித்த பதில். அதேபோல, தமிழ்நாடு கல்வித்துறைச் செயலர், அமைச்சர், அலுவலர்களை எச்சரித்து நடுவண் அரசு அறிவுறுத்திய நிகழ்வு சிந்தித்துக் கவலை கொள்ளத்தக்கது.”  என்று வேதனையைத் தெரிவித்தார். “தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது. மத்திய அரசின் நிதி உதவித்திட்டங்களை அமுல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டதாகத் துறையின் செயலரை நேரில் அழைத்துக் கண்டித்ததுடன் அவருக்குக் கடிதமும் அனுப்பியுள்ளது. அனைத்து மாணவர்களும் 10 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கமான (ஆர்.எம்.எஸ்.ஏ) தேவையான நிதியை மத்திய அரசு வழங்குகிறது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.1700 கோடிக்கு மேல் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் பல கல்வித்திட்டங்களைக் கிடப்பில் போட்டு அலட்சியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்
பட்டுள்ளது. 10 விழுக்காடு பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவில் உயர்நிலைப்பள்ளிகள் இல்லை.

2015 தமிழகத்தில்  கல்வித்துறை தேசிய இலக்கு கணக்கெடுப்பின்படி உயர்நிலைக் கல்வித் தரத்தில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதுவரை 9, 10 ஆம் வகுப்புகளில் தொழிற்கல்விப் பாடத்திட்டங்கள் தொடங்கப்படவே இல்லை. மொத்தம் 1096 புதிய பள்ளிகளில் வெறும் 200 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டடப்பணிகள் முடிந்துள்ளன. 845 பள்ளிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2010 - 11ல் 878 பள்ளிகள், 11-12ல் 1153 பள்ளிகளின் கட்டடங்களை வலுவாக்க அனுமதி வழங்கியும் கழிப்பறை தவிர ஏனைய எந்தப் பணியும் தொடங்கவில்லை. தற்போது கல்விப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் இனி இந்தப் பணியை முடிக்க இயலாது என ஒதுக்கப்பட்ட நிதியைத் திரும்ப ஒப்படைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2010 - 11ல் 735 பள்ளிகளில் கணினி வகுப்பறைகள், 860 பள்ளிகளில் கைவினை வகுப்பறைகள், 837 பள்ளிகளில் நூலகங்கள், 11 - 12ல் 1795 பள்ளிகளில் கைவினை அறைகள், 919 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், 768 பள்ளிகளில் கணினி அறைகள், 1036 நூலக அறைகள், 170 பள்ளிகளுக்குக் குடிநீர்வசதி திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியும் தமிழ்நாடு அரசு செலவழிக்காமல் திரும்ப ஒப்படைப்பதாகத் தெரிவித்துள்ளது. புதிய அனுமதியும் தருவதாக மத்திய அரசு கூறியும் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை” என்று செயல்படுத்தப்படாத பணிகளைப் பட்டியலிடுகிறார் முருகையன்.

மேலும் அவர், “தமிழகத்தில் 5,265 பள்ளி களில் கணினி வழி ‘ஸ்மார்ட்’வகுப்புகளைத் தொடங்க அனுமதித்ததில் 4,345 பள்ளிகளில் தொடங்கப்படவில்லை. இதனால் மத்திய அரசு ஒதுக்கிய 43 கோடி ரூபாய் எந்தப் பலனும் இன்றி உள்ளது. அரசுப் பள்ளிகளில் 5,865 ஆசிரியர்ப் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 99 முதல் 100 விழுக்காடு மாணவர் தேர்ச்சி பெற்றும் 9, 10 ஆம் வகுப்புகளில் 65.3 விழுக்காடு மாணவரே சேருகின்றனர். இடைநிற்றல்
(Dropout) மிக அதிகமாக தமிழ்நாட்டில் உள்ளது.சென்னையில் 57.34 சதவீதம், கோவையில் 53.72 சதவீதம், காஞ்சியில் 58.57 சதவீதம் என இடைநிற்றலில் முன்னிலை வகிக்கின்றன.
சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளுக்குப் பிறகும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் இயற்றித்தான் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய வேண்டிய இழிநிலை நீங்க வேண்டும். அதற்கு கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்குறச் செலவழித்து, கல்வி தருவது ஆள்பவர்களின் கடமைகளுள் மிக முக்கியமான ஒன்று என்பதை மக்கள் ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்.” என்றார்.

- தோ.திருத்துவராஜ்