உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் M.Phil படிக்கணுமா?



அட்மிஷன்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் தன்னாட்சி அமைப்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) செயல்பட்டு வருகிறது. இதில் 2017 - 2018ஆம் கல்வியாண்டுக்கான முழுநேரத் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.  புலங்கள்: சென்னை, தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியியல் புலம், தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம், அயல்நாட்டுத் தமிழர் புலம், சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலம் ஆகிய புலங்களில் தமிழ் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.    விண்ணப்பிக்கும் முறை: தமிழ்மொழியிலான இப்படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை சென்னை, தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் பொதுப் பிரிவினர் ரூ.300, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் ரூ.200 என விண்ணப்பக் கட்டணத்தை நேரடியாகச் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்நிறுவனத்தின் http://ulakaththamizh.org இணையதளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நிரப்பி அனுப்பும்போது, விண்ணப்பக் கட்டணத்தினை ‘Director, International Institute of Tamil Studies’ எனும் பெயரில் சென்னையில் மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் வங்கி வரைவோலையாகப் பெற்று இணைத்து அனுப்பிட வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்:31.8.2017.   மாணவர் சேர்க்கை: விண்ணப்பித்த அனைவருக்கும் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 4.9.2017 அன்று நுழைவுத்தேர்வு நடத்தப்படும். விண்ணப்பித்த மாணவர்களின் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இப்படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணமாக ரூ.4,600 செலுத்த வேண்டியிருக்கும். இப்படிப்புக்கான வகுப்புகள் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று தொடங்கும்.   இப்படிப்பு குறித்த மேலும் கூடுதல் தக வல்களைத் தெரிந்துகொள்ள மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது ‘இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -  600113’ எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது இந்நிறுவனத்தின் 044  22542992 எனும் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் களைப் பெறலாம்.