தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை!தொழிற்கல்வி

இரண்டாம் கலந்தாய்வு!


தமிழ்நாட்டிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் மின்சாரப் பணியாளர், பொறிப்பகுதி பொருத்துநர், கடைசலர், இயந்திரப் பணியாளர், கம்பியாளர், குழாய்ப் பொருத்துநர், கட்டடப் படவரைவாளர், நில அளவையாளர், இயந்திரப் படவரைவாளர், மின்முலாம் பூசுபவர் என்று மொத்தம் 45 வகையான பொறியியல் தொழிற்பிரிவு களிலும், கணினி இயக்குபவர், தையல் வேலைப்பாடு, ஆடை தயாரித்தல், புத்தகம் கட்டுபவர், தோல்பொருள் உற்பத்தியாளர் என்பது போன்ற 20 வகையான பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளிலும் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

இந்தத் தொழிற்பயிற்சிகளில் சேர்க்கை பெறுவதற்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்பெற்று மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. முதற்கட்ட கலந்தாய்வுக்குப் பின்னர் காலியாக இருக்கும் இடங்களுக்கு இரண்டாவது கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தொழிற்பயிற்சி நிலையங்கள்: தமிழ்நாட்டில் 85 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களும், 483 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் அகில இந்திய அளவிலான பாடத்திட்டங் களைக் கொண்ட தொழிற்பிரிவுகள், மாநிலப் பாடத்திடங்களைக்கொண்ட தொழிற்பிரிவுகள் என்று இரு வகையான தொழிற்பிரிவுகள் உள்ளன. 

கல்வித்தகுதி: இரு வகையான தொழிற்பிரிவுகளிலிருக்கும் பயிற்சிகளில் பெரும்பான்மையான தொழிற்பிரிவுகளுக்கு 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில தொழிற்பிரிவுகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியும், ஒருசில பிரிவுகளுக்கு 12ஆம் வகுப்புத் தேர்ச்சியும் கல்வித்தகுதியாக இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்குமான கல்வித் தகுதியினை http://www.skilltraining.tn.gov.in எனும் இணையதளத்திலிருக்கும் விளக்கக் கையேட்டைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இப்பயிற்சிகளுக்கு 14 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இருக்கும் பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கான இடங்களுக்கும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களால் ஒப்படைப்பு செய்யப்பட்ட தொழிற்பிரிவுகளுக்கான இடங்களுக்கும் http://www.skilltraining.tn.gov.in எனும் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை பெற விரும்புகிறாரோ, அந்த மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான விருப்பத்தை விண்ணப்பத்தில் தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பம் கலந்தாய்விற்குத் தேர்வு செய்த மாவட்டத்திற்கு மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பதாரர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலையச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒரே நாளில் நடத்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கலந்தாய்வின்போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கடைசிநாள்: 10.8.2017.

கலந்தாய்வு: மாவட்ட அளவில் பெறப்பட்ட விண்ணப்பங்களைக்கொண்டு பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் குறிப்பிட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் (Nodal ITI) மாவட்டக் கலந்தாய்வு நடத்தப்படும்.

இந்தக் கலந்தாய்வில் அந்தந்த மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இருக்கும் தொழிற்பிரிவு இடங்களுக்கும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களால் ஒப்படைப்பு செய்யப்பட்ட தொழிற்பிரிவு இடங்களுக்கும், தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும். இதன் மூலம் மாணவர்கள் விரும்பிய தொழிற்பிரிவினைப் பெறமுடியும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.400 என்று கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இவை தவிர, அரசு வழங்கும் பேருந்துக் கட்டணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், சீருடை, காலணி போன்றவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

இரட்டைப் பயிற்சி முறை: தமிழ்நாட்டிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மூன்றாம் பணிமுறையில் இரட்டைப் பயிற்சி முறை ஒன்று இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இம்முறையில் ஒரு வருடப் பயிற்சிக்கு 5 மாத காலத்திற்குத் தொழில் நிறுவனங்களில் செய்முறைப் பயிற்சியும், 7 மாத காலத்திற்குத் தொழிற்பயிற்சி நிலையத்தில் கருத்தியல் மற்றும் அடிப்படைச் செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்படும்.

இரு வருட காலப் பயிற்சிக்கு 9 மாத காலம் தொழில் நிறுவனங்களில் செய்முறைப் பயிற்சியும், 15 மாத காலத்திற்குத் தொழிற்பயிற்சி நிலையத்தில் கருத்தியல் மற்றும் அடிப்படைச் செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்படும். இப்பயிற்சி முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்குத் தொழிற்பழகுநர் சட்டத்தில் குறிப்பிட்டவாறு, தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறும் காலத்திற்கு ஊக்கத்தொகையினை அந்நிறுவனங்கள் வழங்க உள்ளது. 

மேலும் விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.

- உ.தாமரைச்செல்வி