குடியரசுத் தலைவர் ஒப்புதல் ஒன்றே நீட் தேர்வுக்கு தீர்வுசர்ச்சை

நடப்பாண்டில் (2017 - 18) மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வை நடத்தும் (நீட்) முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதையும் மீறி பல சட்டப் போராட்டங்களைக் கடந்து நீட் தேர்வும் நடத்தப்பட்டது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வை சரியான முறையில் எழுத முடியாமல் பல்வேறு குழப்ப நிலைகளோடு இன்றுவரை நீட் தேர்வு பிரச்னை நீடிக்கிறது. இதுகுறித்து கல்வியாளர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தோம். அவை இங்கே உங்களுக்காக...

வசந்தி தேவி, கல்வியாளர்தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இது நிச்சயமாக ஓர் அநீதி. ஆனால், இது மட்டும் அநீதி அல்ல. மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வே  இல்லாமல் இருந்தாலும் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கெல்லாம் தொடர்ந்து அநீதிதான் இழைக்கப்பட்டுக் கொண்டுவருகிறது. சென்ற ஆண்டு, நீட் இல்லாதபோதும், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவரில் 24 பேரும், அதற்கு முந்தைய ஆண்டில் 36 பேரும்தான் மருத்துவக் கல்வியில் சேர முடிந்தது.

ஆகவே, தமிழக அரசும், வசதி படைத்தோரும் ஏழை மாணவருக்கு நீட் அநீதி செய்கிறது என்று வடிக்கிற கண்ணீர் போலியானது; நீட் வசதி படைத்தோரின் வாய்ப்புகளையும் பறிக்கிறது என்பதுதான் உண்மை. நீட் சமமான அநீதியை தமிழக மாணவர்கள் அனைவருக்கும் செய்கிறது என்பதுதான் உண்மை. இப்படி சொல்வதால், நீட் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது என்பது பொருளல்ல... நீட் எதிர்க்கப்பட வேண்டும்.

பல மொழி, பல்வேறு வகைப்பட்ட கலாச்சாரங்கள், பல தேசிய இனங்களைக் கொண்டது நம்நாடு. கல்வி என்பது, அந்த மொழிக்கும், கலாச்சாரத்துக்கும், வரலாற்றுக்கும், அந்தப் பகுதியினுடைய நிலவளம், நீர்வளத்திற்கும், வளர்ச்சித் தேவைகளுக்கும் தகுந்த மாதிரியாகவே உருவாக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதற்கும் பொதுவான ஒரு கல்வி இருக்க முடியாது. அதனால், கல்வி என்பது முதலாவதாக மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும்.

இந்த நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பையும், அது உண்டாக்கியிருக்கும் அதிர்ச்சி அலைகளையும் முன்நிறுத்தி, கல்வியையாவது மாநிலப் பட்டியலுக்குக்  கொண்டு வர தொடர்ந்து போராட வேண்டும். பிரின்ஸ் கஜேந்திர பாபு,கல்வியாளர் அரசாணை ரத்து ஆகும் என்பதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

குஜராத்தில் நீட் தேர்வு தொடர்பாக அம்மாநிலத்தில் பயிலக்கூடிய மாநிலக் கல்வி, சி.பி.எஸ்.இ, போன்ற பல்வேறு வாரிய பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் விகிதாசார அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு இடங்களைப் பிரித்து கொடுப்பது என ஓர் அரசாணை நிறைவேற்றினார்கள். அந்த அரசாணை செல்லாது என குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இப்படி ஒரு தீர்ப்பு வந்தது தமிழ்நாடு அரசுக்கும் நன்றாகவே தெரியும்.

தெரிந்தபிறகும் இங்கே ஓர் அரசாணை பிறப்பித்தது எதற்காக? தன்னுடைய செயலின்மையை, தான் செய்த தவறை மறைப்பதற்காக ஓர் அரசாணையைப் பிறப்பித்துள்ளார்கள். இந்த அரசாணை மூலமாகத் தமிழக அரசு மக்களிடையே ஒரு கருத்தை உருவாக்கப்பார்க்கிறது. அதாவது, தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் பயிலுகின்ற மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு நன்மை செய்ய முயன்றதாகவும், அந்த முயற்சியை நீதிமன்றம் தடைசெய்துவிட்டதாகவும், அரசாங்கம் என்ன செய்யும் என்று தமிழ்நாடு அரசு கைவிரிக்கப் பார்க்கிறது.

சட்டமன்றத்தில் முழுமையான விவாதத்தை நடத்தவில்லை. சட்டமன்றத்திற்கு வெளியே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும், கூட்டவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரையோ குடியரசுத் தலைவரையோ  பார்த்துப் பேச முயன்றிருக்கலாம், அதைச் செய்யவில்லை.

மாநில உரிமையைப் பாதிக்கிறது, மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், நீட் தேர்வு மாநில மக்களுக்கு எதிராக இருக்கிறது, மாநில உரிமையைக் காப்பதற்குச் சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை கொடுங்கள் என்று கேட்பதற்கு முன்வராமல் அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது, மேல்முறையீடு செய்துள்ளோம் என்று நாடகம்தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இதற்குத் தீர்வு மேல்முறையீடு அல்ல. ஒரே தீர்வு இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலைப் பெறுவது மட்டும்தான். அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அதை எடுக்க வேண்டுமே தவிர, அதை எடுக்காமல் நீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மறைமுகமாக மாநில அரசு துணைபோகக்கூடாது.  

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின்  பொதுச்செயலாளர்தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு, நீட் நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு பெற்றிட மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களுக்கு, நீட் நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு பெற, தமிழக சட்டமன்றத்தில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும். இதற்காக மாநில அரசு, மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தத்தைத் தரவேண்டும்.

இளநிலை மருத்துவக் கல்வியில் 15 விழுக்காடு இடங்களை  அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கிவருகிறோம். இவ்வாண்டு, 456 இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கியுள்ளோம். ஆனால், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் தமிழக மாணவர்கள் 19 பேர் மட்டுமே சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

456 இடங்களைக் கொடுத்துவிட்டு அதில் 19 இடங்களை மட்டும்தான் நாம் பெறுகிறோம் என்றால், அது நமக்கு மிகப்பெரிய இழப்பு. முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இடங்களை அகில இந்திய தொக்குப்பிற்கு வழங்குகிறோம். ஆனால், அவ்வளவு இடங்களை நாம் பெறுவதே இல்லை.

உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 100 விழுக்காடு இடங்களை அகில இந்திய அளவில் பொதுப்போட்டி இடங்களாக விடவேண்டிய நிலை உச்ச நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிலேயே மிக அதிகமாக 192 இடங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுள்ள நமக்கு மிகப்பெரிய இழப்பு. 10 மாநிலங்களில் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் ஒன்றுகூட இல்லை. மேலும், 10 மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இந்த இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் வேலையை உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் செய்கின்றன.

என்.மணி, கல்வியாளர், ஈரோடு. நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு சட்ட விரோதம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. தீர்ப்பின் அடிப்படையில்  மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால்,   தமிழ் நாட்டின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 28 விழுக்காடு இடங்களும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 72 விழுக்காடு இடங்களும் கிடைக்கும். இந்தப் பாதிப்பு எல்லோரும் எதிர்பார்த்ததுதான். இப்போதுதான் பாதிப்பின் அளவை கணக்கிட முடிந்துள்ளது. இந்தப் பாதிப்புக்கு காரணம் மாணவர்களோ அவர்களது இயலாமையோ, திறமையின்மையோ அல்ல. நீட் தேர்வின் மீதான அரசின் நிலைப்பாடே காரணம். 

தமிழ்நாடு அரசு, தான் வாக்குறுதி அளித்தபடி நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற இதுவரை உருப்படியான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்ததோடு தன் கடமை முடிந்துவிட்டதாக கருதிக் கொண்டது. அதன் பின்னர் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சாதகமாக நீட் தேர்வுக்கு சாதகமாக நடந்துகொண்டதாகவே தோன்றுகிறது .

நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை அல்லது அதன் முடிவு தெரியும் வரை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெறாது என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தால் இன்று நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும் இப்போது தமிழ்நாடு அரசு நினைத்தாலும் இதனைச் சாதிக்க முடியும்.

தமிழ்நாடு அரசின் உறுதி வார்த்தைகளை நம்பி படித்த மாணவர்களுக்கு நீதி வழங்க முடியும். ஆனால், அரசுக்கு அப்படி தன் குடிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற அக்கறை இருக்கிறதா என்பதே நம் முன் உள்ள கேள்வி.இப்படித்தான் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் கல்வியாளர்கள்.

- தோ.திருத்துவராஜ்