மாதம் ரூ.8000 உதவித்தொகையுடன் தொல்பொருளியல் முதுநிலைப் பட்டயப்படிப்பு!



அறிவிப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியத் தொல்பொருள் கல்வி நிறுவனம் (Institute of Archaeology) டெல்லியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் தொல்பொருளியலில் முதுநிலைப் பட்டயப்படிப்பில் (P.G. Diploma in Archaeology) இரண்டாண்டு கால அளவிலான (2017-2019) மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.    

ஒதுக்கீட்டு இடங்கள்: இப்படிப்புக்கு மொத்தம் 15 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் இந்தியத் தொல்பொருளியல்துறை மற்றும் மாநிலத் தொல்பொருளியல்துறை மற்றும் பல்கலைக்கழகங்களின் தொல்பொருளியல்துறைப் பணிகளில் இருப்பவர்களுக்கும் பரிந்துரை அடிப்படையில் சில இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

கல்வித்தகுதி: இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் பண்டையக்காலம் (Ancient) அல்லது இந்திய இடைக்கால வரலாறு (Medieval Indian History)/தொல்பொருளியல் (Archaeology)/மானுடவியல் (Anthropology)/இந்தியச் செம்மொழி களில் சமஸ்கிருதம் (Sanxkrit), பாலி (Pali), பிரகித் (Prakit), அரபி (Arabic) அல்லது பெர்சியன் (Persian) அல்லது  or புவியியல் (Geology with Pleistocene age Knowledge) அல்லது இவற்றுக்கு இணையான முதுநிலைப் பட்டப்படிப்பில் 55% மதிப்பெண் களுக்குக் குறையாமல் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களுக்கு 31.8.2017 அன்று 25  வயது நிறைவடைந்திருக்கக் கூடாது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பரிந்துரைக்கப் படும் அரசுப் பணியிலிருப்பவர்களுக்கு வயதுத் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியத் தொல்பொருளியல் துறையின் http://www.asi.nic.in எனும் இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் “Director, Institute of Archaeology” எனும் பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் ரூ.250-க்கான வங்கி வரைவோலையினைப் பெற்று, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவண நகல்
களையும் இணைத்து “Director, Institute of Archaeology, Archaeological Survey of India, Red Fort, Delhi-110006” எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 7.8.2017 ஆம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.  

மாணவர் சேர்க்கை: விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் 5.9.2017 அன்று புதுடெல்லியில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 7.9.2017 மற்றும் 8.9.2017 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட்டு, இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இப்படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில், பரிந்துரை செய்யப்பட்ட அரசுப் பணியாளர்கள் தவிர்த்து, அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.8000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது இந்நிறுவனத்தின் இயக்குநர் அலுவலகத்தின் 011 - 23277107 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
 

- தேனி மு.சுப்பிரமணி